Dec 15, 2013

ம.பொ.சி. நான்கு நூல்கள் விமர்சனக் கூட்டம் - ஒலிப்பதிவு

இராஜேந்திர சோழன், ஜெயமோகன், ஹாமீம் முஸ்தபா

சிலம்புச் செல்வர் ம.பொ.சி. அவர்களின் தமிழர் திருமணம், சீர்திருத்தப் போலிகள், கண்ணகி வழிபாடு மற்றும் தமிழன் குரல் ஆகிய நான்கு நூல்கள் குறித்த விமர்சனக் கூட்டம் 14/12/2013 சனிக்கிழமை காலை சென்னை சைதாபேட்டையில் உள்ள அகநாழிகை புத்தகக் கடையில் நடந்தது. இந்நிகழ்வில் எழுத்தாளர்கள் ஹாமீம் முஸ்தபா, ஜெயமோகன், இராஜேந்திரசோழன் ஆகியோர் பங்கேற்றுப் பேசினர். கவிஞர் தி.பரமேசுவரி நிகழ்வைத் தொகுத்தளித்தார். அகநாழிகை பொன்.வாசுதேவன் நன்றி தெரிவித்தார்.


அந்நிகழ்வின் mp3 வடிவிலான ஒலிப்பதிவை இங்கே கேட்கலாம்.

Dec 16, 2011

நடுநிலையாளர்கள் கவனத்திற்கு...மூணாறு
மூணாற்றில் இன்று ஒரு முக்கியமான ஊர்வலம் நடந்திருக்கிறது. ஆர்ப்பாட்டமும் நடந்திருக்கிறது. அது... மூணாறு வாழ்த் தமிழர்கள் நடத்திய ஊர்வலம். ஆர்ப்பாட்டம். 

நடத்தியவர்கள் : 

(இன்றைய கேரளம் வாழ்த்) தமிழர்கள். தோட்டத் தொழிலாளர்களாகவும்,தானி ஓட்டுநர்களாகவும், சிறு வணிகர்களாகவும் ஜீவிக்கும் தமிழர்கள்.

கோரிக்கை :

பொது வாக்கெடுப்பு நடத்தி, தமிழர்கள் பெரும்பான்மையாக வாழும் இடுக்கி, மூணாறு, வண்டிப்பெரியார், உடுமஞ்சோலை, தேவிகுளம், பீர்மேடு முதலான பகுதிகளைத் தமிழகத்துடன் இணைக்க வேண்டும்.

காரணம் : 

கேரள அரசின் நலத்திட்டங்கள் எதுவும் இடுக்கி மாவட்டம் வாழ்த் தமிழர்களுக்குச் சென்று சேர்வதில்லை. பல்வேறு விதங்களில் இனக் காழ்ப்போடு தமிழர்கள் நடத்தப்படுதல். முல்லைப் பெரியாறு விவகாரத்திலும் கேரளத்தின் நிலைப்பாட்டை ஆதரித்து ஆர்ப்பாட்டம் நடத்தவேண்டும் என்று மலையாளிகளால் மிரட்டப்படுதல்.

இருக்கும் தங்கள் உயிருக்கும், உடைமைக்குமே ஆபத்து எனும் நடப்புச் சூழலிலும் தைரியமாக வந்து போராடியிருக்கும் மூணாறு வாழ்த் தமிழர்கள் உண்மையிலேயே பாரட்டுக்குரியவர்கள்.

(1950-களில், மொழிவழி மாகாணப் பிரிவினை சமயத்திலேயே எழுந்த குரல் இது. தேவிகுளமும் பீர்மேடும் தமிழகத்துடன்தான் இணைக்கப்படவேண்டும் என்று ம.பொ.சி. குரல்கொடுத்தார். ஆனால்,  'குளமாவது, மேடாவது, எல்லாம் இந்தியாவுக்குள்ளதானே இருக்குண்ணேன்' என்று பெருந்தன்மையோடு பேசினார் பெருந்தலைவர். 'பணிக்கர் பேசினார், அங்கு மலையாளிகள்தான் அதிகம், கேரளத்தோடுதான் சேர்க்கணும்னு சொன்னார். சரின்னுட்டேன்' என்றார் பெரியார். பெருந்தன்மையாலேயே கெட்டானே தமிழன் என்பது இந்த நேரத்தில் நினைவுக்கு வருகிறது.) 

பணிக்கர் என்றொரு நடுவர்

மொழி வழி மாநிலம் கோரும் கிளர்ச்சிகள் இந்தியத் துணைக்கண்டம் முழுதும் கொழுந்துவிட்டு எரிந்த பொழுது, ஜஸ்டிஸ் சையத் பசல் அலி என்பவர் தலைமையில் மாநில மறுசீரமைப்புக் கமிஷனை அமைத்தார் பிரதமர் நேரு. இக் குழுவில் சர்தார் கே.எம்.பணிக்கர், பண்டிட் எச்.என்.குன்ஸ்ரு ஆகியோர் உறுப்பினர்கள்.


சர்தார் கே.எம்.பணிக்கர்
தம் மாநிலமான பீகார் (பீகாருக்கும் மேற்கு வங்கம், ஒரிசாவுக்குமான எல்லைகள்) தொடர்பான விவாதங்களின் போது, நடுவர் நிலையில் இருக்கும் தான் இதில் கலந்துகொள்வது தார்மீக நியாயம் இல்லை என்று நகர்ந்தார் பசல் அலி. ஆனால், தமிழக-கேரள எல்லைகள் தொடர்பான விவாதங்களில் பங்கேற்றதோடு அல்லாமல், தேவிகுளம்-பீர்மேடு வட்டங்களைக் கேரளத்துடன்தான் இணைக்க வேண்டும் என்பதில் பிடிவாதமாக இருந்தார் பணிக்கர் (1955).


ம.பொ.சி. "எனது போராட்டம்" என்ற தம் நூலில் பின்வரும் நிகழ்வைக் குறிப்பிடுவார்:


"நான் பசல் அலி கமிஷனைப் பேட்டி கண்ட போது, அக்கமிஷன் அங்கத்தினரான கே.எம்.பணிக்கர் என்னிடம் சுமார் அரைமணி நேரம் உரையாடினார், இல்லை, திரு-கொச்சி ராஜ்யத்திலுள்ள தமிழ்த் தாலுக்காக்கள் பற்றி என்னுடன் வாய்ச் சண்டை நடத்தினார். தேவிகுளம், பீர்மேடு தாலுக்காக்களைத் தமிழகத்துடன் இணைக்குமாறு தமிழரசுக் கழகம் கோருவது அநியாயமென்றும், கமிஷன் அதனை ஏற்கமுடியாது என்றும் ஆவேசமாகக் கூறினார். அவரது போக்கு எனக்கு வியப்பைத் தந்தது.
ம.பொ.சி.
அதனால், நான் "தாங்கள் மலையாளிகள் சார்பில் என்னுடன் வழக்காடுகிறீர்களா? அல்லது கமிஷன் உறுப்பினர் என்ற வகையில் என்னை விசாரணை நடத்துகிறீர்களா?" என்று கேட்டேன். இதன் பின்னர் பணிக்கரின் ஆவேசம் தணிந்தது.


தமக்கு ஏற்பட்ட ஆவேசத்திலே தம்மை மறந்தவராகி, தேவிகுளம் - பீர்மேடு பகுதியிலே தமக்குச் சொந்தமான தோட்டங்கள் இருப்பதாகவும் பணிக்கர் கூறினார். அதை நான் எப்படி தமிழ்நாட்டிடம் விட்டுவிட முடியும் என்றும் கேட்டார்.


அத்துடன் நீலகிரி மாவட்டத்திலுள்ள கூடலூர் தாலுகாவுக்காகவும் பணிக்கர் என்னுடன் வாதாடினார். "


Oct 4, 2011

ம.பொ.சி. நினைவு நாள் விழா மற்றும் ஐந்து நூல்கள் வெளியீட்டு விழா - ஒலிப்பதிவு
03.10.2011 அன்று சென்னை மயிலாப்பூர் லேடி சிவசாமி கலாலயா அரங்கில் சிலம்புச் செல்வர் ம.பொ.சி. அவர்களின் -வது நினைவு நாள் விழா மற்றும் அவரது ஐந்த நூல்களின் வெளியீட்டு விழா நடைபெற்றது. இந்நிகழ்விற்கு ம.பொ.சி.யின் தமிழரசுக் கழகத்தின் முக்கிய நிர்வாகிகளில் ஒருவரும் மூத்த வழக்கறிஞருமான எஸ்.கே.பாலசுப்பிரமணியன் தலைமை தாங்கினார். வள்ளலார் நெறி பரப்புநர் ஊரன் அடிகள், சென்னை வானொலி நிலைய மேனாள் இயக்குநர் ஏ.நடராஜன், பொற்றாமரை இலக்கிய அமைப்பின் இல.கணேசன், பாரதியியல்  அறிஞர் பெ.சு.மணி ஆகியோர் பேசினார். கலவை கோபாலகிருஷ்ணன் நன்றி கூறினார்.  

இவ்விழாவிற்கான ஏற்பாடுகளை ம.பொ.சி.யின்  பெயரன் தி.ஞானசிவம்செய்திருந்தார். விழாவைக் கவிஞரும் ம.பொ.சி.யின் பெயர்த்தியுமான தி.பரமேசுவரி தொகுத்து வழங்கினார். இவ்விழாவின் ஒலிப்பதிவு இது. 


ஒலிப்பதிவு - யுவபாரதி 

Mar 14, 2011

வைகையன்ன ம.பொ.சி. வாழ்க!

              - முகை. மா. வஞ்சிப்பாண்டியன்.


1

தமிழ்மகள் அருளைப் பெற்ற
     தனிச்சிறப் புடைய நல்லோன்;
தமிழ்த்திரு நாடாம் அன்னைத்
     தன்னுளம் உவக்கச் செய்த
பெருந்தகை; சான்றோன்; தன்னைப்
     பெற்ற பொன்னாடும் தன்தாய்
அருந்தமிழ் மொழியும் வாழ்ந்தால்
     இனம் வாழுமென்று ழைப்போன்.2

வஞ்சினம் உரைக்கும் போது
     வாகை சூடிய, பெரும்போர்
அஞ்சிடாச் செழியன்; கோவூர்
     கிழாரவன் கருத்துச் சொன்னால்
எத்தகைய இடர் வந்தாலும்
     ஏற்றதோர் கொள்கை வாழ்வில்
நித்தமும் பணிசெய்ப் பண்பால்
     நாவினுக் கரசன் ஆவன்.


3

கங்கையும் அன்று; பொன்னிக்
     காவிரி நதியும் அன்று;
இங்கிதம் வாய்த்த நீர்மை
     எளிமையால், பொதுத்தொண் டென்று
பிறர்போன்று வீண் செய்யாத
     பெற்றியால் வைகை போன்றோன்.
பிறந்த நாட்டெல்லை காத்த
     ம.பொ.சி; வாழ்க, நன்றே.

Feb 20, 2011

மெய்யகத்தே மிகும் இன்பம்

ம.பொ.சி.யின் சிலையைத் திறந்து வைக்கும் முதல்வர்

பொத்தான் அழுத்தப்பட்டதும் திரை மெல்ல மெல்ல உயரத் தொடங்கியது. மனம் ஒரு புள்ளியில் லயித்து மௌனித்தது. சிந்தனையற்று உற்று நோக்கிய கண்களுக்குச் சிலை துலக்கமாகத் தெரியத் தொடங்கியதொரு கணத்தில் மறைந்தது. பனித்திரை படர்ந்தது. என்னையறியாமல் விழிகளில் அமிழ்தமெனக் கண்ணீர் பெருக்கெடுத்தது. எத்தனை முயற்சி! எத்தனை பேரின் ஆர்வம்! எத்தனை நாள் தவம்!

எனக்கு முன்னமிருந்தே குரல் கொடுக்கத் தொடங்கிய எம் மூத்தவர்களைச் சற்றே சிந்தித்துப் பார்க்கிறேன். வடசென்னை ம.பொ.சி. நற்பணிப்பேரவையிலிருந்து திரு.சுந்தரபாபு மனுக்கள் பல அனுப்பி, அதற்காக அலைந்து, ஜூனியர் விகடன் இதழில் சிலை தொடர்பான ஒரு பேட்டியில் மனம் குமுறியிருக்கிறார். அதுமட்டுமின்றி, தன் தனித்த முயற்சியில் தாத்தா, தொடக்க காலத்தில் வாழ்ந்த வட சென்னையில் சிலை வைக்கும் எண்ணத்தில் இருப்பவர்...

குரோம்பேட்டையில் இருக்கும், தீவிரமாக இயங்கும் சிலம்புச் செல்வர் டாக்டர் ம.பொ.சி. தமிழ்ப் பேரவையின் திரு.இராமானுஜன். ஒவ்வொரு ஆண்டும் தாத்தாவை நினைவுகூர்ந்து சிறப்பாக விழா நடத்துபவர்கள்; அங்கே மார்பளவு சிலை வைத்து மரியாதை செய்பவர்கள்...

அண்ணா நகரில் தெய்வ நெறி மையம் நடத்தும் திரு.சூர்யசந்திரானந்தா, தொடர்ச்சியாக ம.பொ.சி.க்கு மட்டுமல்லாமல் விடுதலைப் போராட்ட வீரர்களையும் நினைவுகூர்ந்து இன்றும் தொடர்ந்து விழா நடத்துபவர்.

சோளிங்கரிலிருந்து எங்களுக்கு அவ்வப்போது மடல் எழுதும் கொண்டபாளையம் திரு.ரங்கநாதன், கடிதத்தோடு நிற்காமல் எம்.எல்.ஏ. போன்ற அரசு இயந்திரத்தின் வெவ்வேறு பாகங்களுக்குத் தவறாமல் கடிதங்கள் மூலை சிலையை நினைவூட்டி வந்தவர்.

ம.பொ.சி. நூற்றாண்டு விழா நடத்திய நாங்கள் முயற்சித்து முடியாமல் கைவிட்ட விழா மலர் வெளியிடும் பணியை, தனியொருவராகவே தாத்தாவின் மணிமொழிகளைத் தொகுத்து விழா மலராக வெளியிட்ட தேப்பெருமாநல்லூர் திரு.உப்பிலி. அவருக்கு உதவிய அவருடைய மகன் திரு.நரசிம்மன்...

இன்னும் வெவ்வேறு ஊர்களில் இருந்து சிலை வைப்பது தொடர்பாகவே பேசிய, இயங்கிய, போராடிய, வருந்திய உள்ளங்கள் ஓராயிரம். அவர்கள் அத்துணை பேரையும் இந்த நேரத்தில் மிகுந்த நன்றியுடன் நினைவுகூர்கிறேன்.

ம.பொ.சி. இந்த மூன்றெழுத்தில் தமிழகத்தின் அரை நூற்றாண்டு வரலாறு அடங்கி இருக்கிறது. செய்த சாதனைகள், நடத்திய போராட்டங்கள், முழங்கிய முழக்கங்கள், அவருடைய எழுத்துகள் ஏன் சறுக்கல்களையும் கூடப் பேசிக் கொண்டே போகலாம். அந்த மாமனிதருடைய நூற்றாண்டு விழா 2006-இல் நெருங்கியபோது, எங்கள் குடும்பத்தார் விழாவாகக் கொண்டாட வேண்டுமென்று முடிவு செய்தனர். அப்படி முன்னெடுக்கப்பட்டு, முடிவெடுக்கப்பட்டபோதே தவிர்க்கமுடியாமல் எங்கள் முன்னெழுந்த பெயர் கலைஞர் கருணாநிதி. அவருடைய சொற்களிலேயே சொல்ல வேண்டுமானால், ஆயிரம் முரண்கள் இருப்பினும் கூடப் பல காலம் இணைந்து செயல்பட்டவர்கள்; போற்றியும் தூற்றியும் கொண்டவர்கள்.

இந்த இடத்தில் அய்யா பெ.சு. மணி, திரு.சின்னக் குத்தூசி ஆகியோருக்கு நிச்சயமாக நாங்கள் நன்றி பாராட்ட வேண்டும். முதல்வர் கலைஞர் அவர்களை அணுகி அழைக்க உதவியவர்கள். அவர்களின் உதவியின்றி ம.பொ.சி. நூற்றாண்டு விழா அத்துணை கோலாகலமாகச் சாத்தியப்பட்டிருக்காது.

மிகச் சிறப்பாக நடந்து விழாவில் முதல்வர் அவர்கள் நாங்கள் மனம் மகிழும்படியாக ம.பொ.சி.யின் நூல்களை  நாட்டுடைமையாக்குதல், அஞ்சல் தலை வெளியிடுதல், சென்னை நகரின் மையமான ஒரு இடத்தில் சிலை நிறுவுதல் என்ற எங்கள் கோரிக்கைகளை ஏற்றுக் கொண்டு அந்த விழாவிலேயே அதனை அறிவிப்பாகவும் வெளியிட்டார். ம.பொ.சியின் நூல்கள் நாட்டுடைமையாக்கப்பட்டு, ரூ. 20 இலட்சம் பரிவுத் தொகையாக வழங்கப்பட்டது. ஆகஸ்டு 15 அன்று சென்னை கோட்டையில் ம.பொ.சி. நினைவு அஞ்சல்தலை வெளியிடப்பட்டது. சிலைக்கான பணியும் தொடங்கப்பட்டு விட்டதாகக் கேள்விப்பட்டு அகமகிழ்ந்தோம்.

இடையில் தம்பிகள் திருஞானம், ஞானசிவம் இருவரும் சிலையைப் பார்த்து ஆலோசனையும் வழங்கிவிட்டு வந்தனர். திடீரென ஏற்பட்ட புழுதிப் பரப்பொன்று கண்களை மறைத்தது போல் பிறகு சிலை பற்றிய செய்தியும் மறைந்து, மறந்து போனது. எங்களுக்குள் பேசினோம்; பரிதவித்தோம்; காலணாத் தொண்டர்களென்று பிற கட்சியினரால் அன்று கேலி பேசப்பட்ட, எங்கள் குடும்ப உறுப்பினர்களாகவே நாங்கள் கருதும் எங்கள் தமிழரசுக் கழகத் தோழர்கள் எங்களை விடவும் மிக அதிகமாக வேதனைப்பட்டனர்.

பிறகு தொடங்கியது மனு யுத்தம்; ஓயாத நினைவூட்டல். தினமணியில் எனக்கு எழுத வாய்ப்பு கிடைத்தபோது சென்னையில் வைக்கப்பட வேண்டிய ம.பொ.சி. சிலையை எனது கட்டுரையின் மூலப்பொருளாகக் கொண்டேன். அக்கட்டுரை மண்மொழியிலும் தோழர் இராசேந்திர சோழனால் மீள் பதிவு செய்யப்பட்டது. எழுத்தாளர் பிரபஞ்சன், குடும்ப நண்பர் கோபாலபுரம் செல்வதுரை ஆகியோரும் அவர்களால் இயன்ற முயற்சிகளை மேற்கொண்டனர்.

பிறகு ஏற்பட்டதொரு நீண்ட அமைதிக்குப் பிறகு, கவிஞர் அமுதகீதன், திரு. எக்பெர்ட் சச்சிதானந்தம், காஞ்சி அமுதன் ஆகியோரின் முயற்சியின் பேரில் அவர்கள் தொடங்கியுள்ள இலக்கியக் களம் என்னும் அமைப்பின் மூலம்  காஞ்சிபுரத்தில் ம.பொ.சி. - நாம் அறிந்ததும் அறியாததும் என்னும் தலைப்பின் கீழ் அரைநாள் கருத்தரங்கமொன்றை நடத்தினர்.

பின்னர் தோழர் யுவபாரதி மூலமாக, என்னுடைய வலைப்பூவைப் படித்த தோழர் வெற்றிவேலின் உறுதுணையுடன் நண்பர் ஆனந்த் செல்லையா  மனம் வருந்தும் ம.பொ.சி குடும்பத்தைக் குமுதத்தில் வெளிச்சமிட்டுக் காட்ட, மாயமானதொரு காட்சி போல் அடுத்த சில நாட்களில் சிலை பற்றிய அறிவிப்பினை அரசு வெளியிட்டது. ஆனந்த அதிர்ச்சி. அதிர்ச்சிக் கடல் என எத்தனைச் சொற்களை இட்டு நிரப்பினாலும் அந்த நேரத்து என்னுடைய மகிழ்ச்சியை வெளிப்படுத்த வார்த்தைகள் இல்லை.

09.02.11 அன்று சிலை திறப்பு என்ற அறிவிப்பு வெளியான கணத்தில் என் அலைபேசி அழைப்புகளாலும் குறுஞ்செய்திகளாலும் நிரம்பியது. கிண்டி, விவேகானந்தர் இல்லம் எனப் பல்வேறு இடங்கள் பரிசீலிக்கப்பட்டுத் திடீரென்று தி.நகர் - போக் ரோடு சந்திப்பில் என்று அந்த அறிவிப்பு சொன்னது. பணிபுரியும் இடத்துக்கும் சென்னைக்குமான இடைவெளி தொடர்ந்த என் பயணங்களால் நிரப்பப்பட்டது. சென்னையின் அனல் என்னைப் பொறுத்தவரை மறைந்து குளிர் பனியென மனது நிரம்பித் தளும்பத் தொடங்கியது. அந்த நாளும் வந்திடாதோ என்று நான் ஏங்கிய அந்த நாளும் வந்தது. மனம் என் வீட்டில், என்னிடம் இல்லாமல் எனக்கு முன்னரே தி. நகருக்குப் பயணப்பட்டு விட்டது.

அரசின் சடங்கு, சம்பிரதாயங்கள் ஒவ்வொன்றாய் நிறைவேறின. நாடாளுமன்ற, சட்ட மன்ற உறுப்பினர்கள், அமைச்சர் பெருமக்கள், நகரத்தின் முக்கியமான மனிதர்களென விழா நடக்குமிடம் நிரம்பியது. பின்னால் ஒரு மக்கள் கூட்டம் குழுமத் தொடங்கியது. தாத்தாவின் நண்பர்கள், அன்பர்கள் என ஒவ்வொருவராய் வரத் தொடங்கினர். நான் அங்கே இருந்தேன்; அங்கே இல்லை. ஒவ்வொருவருடனும் பேசினேன், கை குலுக்கினேன், வணங்கினேன். எதையும் செய்யாமல் உட்கார்ந்துமிருந்தேன். ஏதோ ஒன்று என்னிலிருந்து பிரிந்து, மறைக்கப்பட்டு, அலங்கரிக்கப்பட்டிருந்த சிலைக்குள் சென்று விட்டது. 

முதல்வர் வந்து, பெருமக்கள் உரையாற்றிய பின் சிலை வெளிப்படையாய்த் திறந்து வைக்கப்பட்டது. கண்கள் பெருக்கெடுக்கத் தொடங்கியது. மனம் விம்மியது. மறைந்த என் தந்தை ம.சி.திருநாவுக்கரசுவை நினைத்துக் கொண்டேன். சில்லிட்டிருந்த என் கரங்கள் கண்மலர்களைத் தாங்கிக் கொண்டது. நான் மட்டும் அவ்விடத்தில் என் தாத்தாவுடன் வழக்கம்போல் பேசியபடி இருப்பது போன்றதொரு உணர்வு.

என் வாழ்வின் பொருளில் ஒரு பாதியை நான் அடைந்து விட்டதான எண்ணம்; மகிழ்ச்சி; மனம் ஆனந்தப் பெருக்கில் லயித்தபடி; நானும் என் தாத்தாவும்.

- தி.பரமேசுவரி

Feb 17, 2011

பட்டம் பழி வாங்குகிறார்!

[ம.பொ.சி.யின் தமிழன் குரல் செப்டெம்பர் 1954 இதழில் வெளிவந்த தலையங்கம்]

கடந்த ஆகஸ்டு 11ஆம் தேதி, தமிழருக்கு வெட்கத்தையும் வேதனையையும் அளித்த நாளாகும். அன்று, திருவிதாங்கூர் தமிழ்ப் பகுதிகளில் மனித வேட்டை நடத்தியிருக்கின்றனர் மலையாளப் போலீசார். தாய்த் தமிழகத்தோடு சேர விரும்பிய ஒரே பாவத்திற்காகப் பத்துத் தமிழர்கள் சுட்டுக் கொல்லப்பட்டிருக்கின்றனர்!

இதுபோன்ற கொடுமை - கொலைபாதகச் சம்பவம் தமிழினத்தாரின் வாழ்வில், தமிழகத்தின் வரலாற்றில் இதற்கு முன்பு நிகழ்ந்ததே இல்லை.

நாற்பத்தைந்து லட்சம் மலையாளிகளைக் கொண்டது திருவிதாங்கூர் - கொச்சி ராஜ்யம். அதன் அண்டையிலுள்ள சென்னை ராஜ்யமோ மூன்று கோடித் தமிழர்களைக் கொண்டது. இருந்தும் சென்னை ராஜ்யத்தோடு கலாச்சாரத் தொடர்புள்ள மக்களை ஈவிரக்கமின்றி சுட்டுக் கொன்றிருக்கிறது, அண்டையிலுள்ள சுண்டைக்காய் ராஜ்யம். எவ்வளவு துணிச்சல்!

மாபாவி ஜார் மன்னர் இரணியன் போல் அரசாண்டான் என்கின்றார் பாரதியார். இரணியன்போல் என்ன? இரணியனாகவே கொடுங்கோல் நடத்துகின்றார் பட்டம் தாணுப்பிள்ளை. இம் என்றால் சிறைவாசம், ஏன் என்றால் வனவாசம் என்ற நிலையில் தென்திருவிதாங்கூரில் கொடுங்கோல் ஆட்சி நடைபெறுகின்றது. இது கற்பனையல்ல; அங்கு தமிழ் மக்கள் அன்றாடம் கண்டுவரும் காட்சி. அனுபவித்து வரும் வேதனை!

ஆகஸ்டு 11ந் தேதி பத்துப் பேரைச் சுட்டுக் கொன்ற பின்னரும் மலையாளப் போலீசாருக்கு ரத்த வெறி அடங்கவில்லை. அந்தச் சம்பவத்திற்குப் பிறகும், கல்குளம்,விளவங்கோடு தாலுகாக்களில் தமிழ் மக்கள் சித்திரவதை செய்யப்படுகின்றனர்; கண்ணகி மரபில் வந்த தமிழ்ப் பெண்ணரசிகள் மானபங்கப்படுத்தப்படுகின்றனர்; தமிழ் இளங்காளையர்கள் அங்கங்கள் பழுதாகும்படி அடிக்கப்படுகின்றனர். சோதனை என்ற பெயரால், நள்ளிரவில் வீடுகளின் கதவுகள் உடைக்கப்பட்டுப் பொருள்கள் நாசமாக்கப்படுகின்றன.

மக்கள் பலாத்காரத்தில் இறங்கியதால்தான் போலீஸார் சுட்டனர் என்று சமாதானம் கூறுகிறார் பட்டம் தாணுப்பிள்ளை. அமைதியாகச் சென்று கொண்டிருந்த மாணவர் ஊர்வலத்தைப் போலீஸார் தடியாலடித்த பிறகே அமளி ஆரம்பித்ததாக நமக்குத்  தகவல் கிடைத்திருக்கிறது.

முதலில் பலாத்காரத்தில் இறங்கியது ஜனங்கள் என்றாலும், அதனால் போலீசாரில் எவரும் காயமடைந்ததாகத் தகவல் இல்லையே! அப்படியிருக்க, போலீசார் சுட்டதற்குக் காரணமென்ன?

அப்படியே, ஜனங்கள் திரண்டெழுந்து போலீசார் மீது பாய்ந்திருப்பினும், கண்ணீர்ப்புகை விட்டுக் கலைத்திருக்கலாம்; ஆகாயத்தில் சுட்டுப் பயமுறுத்தியிருக்கலாம்; இத்தகைய எச்சரிக்கை எதுவுமின்றி, பத்துப் பேர் சாகுமளவுக்குத் துப்பாக்கிப் பிரயோகம் செய்தது மிருகத்தனமாகும். மற்றும் துப்பாக்கிப் பிரயோகத்திற்குப் பிறகும் தொடர்ந்து அடக்குமுறையை அமுல் நடத்தி வருவது தமிழரைப் பழிவாங்கும் செயலாகவன்றி வேறுவிதமாக எண்ணுவதற்கில்லை.

ஹிட்லர் ஜெர்மனியில், அவனால் வெறுக்கப்பட்ட யூதர்களைக்கூட போலீசார் இவ்வளவு மோசமாகக் கொடுமைப்படுத்தவில்லை. ஆம், ஹிட்லரையும் மிஞ்சி விட்டார் இடதுசாரிக் கட்சியின் முதலமைச்சர் பட்டம் தாணுப்பிள்ளை.

துப்பாக்கிப் பிரயோகத்தால் மாண்டவர்களின் பிரேதங்களை உறவினர்களிடம் கொடுக்க மறுத்து புனிச்சமூடு என்ற இடத்தில் பெற்றோல் ஊற்றிக் கொளுத்திச் சாம்பலாக்கினராம் போலீசார். மற்றும், பட்டம் தாணுவின் கொடுங்கோலாட்சியில் குடியிருக்க அஞ்சி, நூற்றுக்கணக்கான குடும்பங்கள் இரவோடு இரவாக திருநெல்வேலிக்கு ஓடி வந்து விட்டனவாம்.

இதெல்லாம் உண்மையென்றால், பாஞ்சாலப் படுகொலையின்போது கூட இத்தகைய கோரச் சம்பவங்கள் நிகழ்ந்ததில்லையென்று கூறலாம். ஜெனரல் டயரையும் மிஞ்சிவிட்டார் பட்டம்.

பட்டம் தாணுப்பிள்ளை வேண்டுமென்று திட்டமிட்டே திருவிதாங்கூர்த் தமிழரைப் பழிவாங்கி வருகின்றார். ஆக 11உ கலவரத்திற்குக் காரணம் மலையாளப் போலீசாரே அன்றித் தமிழ்ப் பொதுமக்கள் அல்ல. அன்று நடந்த சம்பவம் பற்றிப் பகிரங்க விசாரணை நடத்தப்படுமாயின் இந்த உண்மை வெளிப்படுவது திண்ணம்.

திருவிதாங்கூர்த் தமிழ்ப்பகுதிகள் தமிழகத்தோடு சேருவதை எத்தகைய பாதகத்தைச் செய்தும் தடுத்து விடுவதென்று பட்டம் தாணுப்பிள்ளை கங்கணம் கட்டிக் கொண்டுவிட்டார். அதன் விளைவுதான் தென் திருவிதாங்கூரில் நடந்துவரும் அடக்குமுறைப் போராட்டம்.

மற்றும், பட்டம் தாணுப்பிள்ளை 118 பேர் கொண்ட தி.கொ. அசெம்பிளியில் 18 பேர் பலத்துடன் ஆட்சி நடத்துகின்றார். ஆகவே எந்த நேரத்திலும் பனம்பள்ளியின் காங்கிரஸ் கட்சியார் அவரைப் பதவியினின்று விலக்கிவிடக் கூடிய அபாயமிருக்கிறது. அந்த அபாயத்திலிருந்து தமது ஆவியைக் காப்பாற்றிக் கொள்வதற்காகவும், தமிழருக்கு எதிராகப் போர்க்கோலம் கொண்டிருக்கிறார் பட்டம் தாணுப்பிள்ளை. அதன்மூலம் பி.சோ.கட்சி அல்லாத பிற கட்சி மலையாளிகளின் ஆதரவையும் பெற்றுவிட முடியும் என்பது அவருடைய நம்பிக்கை.

திருவிதாங்கூர்த் தமிழரின் பிரதேச உரிமைக் கோரிக்கை, ஜனநாயகப்படி நேர்மையானது. ஆகவே, நியாயத்தை ஒட்டியது.  தமிழர்களைச் சுட்டுக் கொல்வதால், தமிழ்ப்பகுதிகளை ஜீரணித்து விடலாம் என்று பட்டம் தாணுப்பிள்ளை கருதுவாராயின் அது பலிக்கப் போவதில்லை. தென்திருவிதாங்கூர் முழுவதையுமே சுடுகாடாக்கி விட்டாலும் அந்தப் பகுதியில் ஒரு அங்குலத்தைக் கூட மலையாளிகள் அடைய முடியாது. இது திண்ணம்.

கல்குளம், விளவங்கோடு தாலுகாக்களில் போலீசார் செய்துள்ள கொடுமைகள் பற்றிப் பகிரங்க விசாரணை நடத்த வேண்டும். அந்த விசாரணைக் குழுவை மத்திய அரசினரே நியமிக்க வேண்டும்.

திருவிதாங்கூர்த் தமிழ்ப் பகுதிகளைத் தாய்த் தமிழகத்தோடு சேர்ப்பதற்குச் சாதகமாக மாகாணப் புனரமைப்புக் கமிஷன் இடைகால அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும்.

மேற்சொன்ன இரண்டு கோரிக்கைகளும் உடனடியாக நிறைவேற்றப்படாவிடில், தமிழகத்தில் மலையாளிகளை வெறுக்கும் உணர்ச்சி பரவுவதைத் தடுக்க முடியாது. இது இன வெறியல்ல; இனவெறிக்கு எதிர் நடவடிக்கை! அந்நிலை ஏற்படாமலிருப்பது பட்டம் தாணுப்பிள்ளையின் கையிலிருக்கிறது.

திருவிதாங்கூர்த் தமிழரின் அறப்போர் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருக்கிறது; அடியோடு கைவிடப்படவில்லை. மீண்டும் எந்த நேரத்திலும் முன்னிலும் வேகத்தோடு போர் மூண்டு விடலாம். அது திருவிதாங்கூர்த் தமிழ்ப் பகுதிகளில்தான் நடக்குமென்றும் சொல்ல முடியாது. திரு - கொச்சித் தமிழருக்கு நீதி வழங்கும்படி மத்திய அரசினரை வற்புறுத்தும் கிளர்ச்சியாகச் சென்னை ராஜ்யத்திலேயே நடைபெறலாம்.

திரு - கொச்சி அரசினருக்கு பிரதமர் நேரு ஏதோ ஆலோசனை கூறியுள்ளாராம். அவர் கூறியுள்ள ஆலோசனை என்னவென்று தெரியவில்லை. என்னவாயிருப்பினும், திரு - கொச்சி தமிழ் பகுதிகளைத் தமிழகத்தோடு சேர்க்க வேண்டும் என்ற கோரிக்கைக்குக் குறைவான எதையும் தமிழர் ஏற்பதற்கில்லை.