Jan 4, 2010

அறிஞர்களின் பாராட்டு

அய்யா அவர்களின் அறிவை – ஆற்றலை – இலக்கியப்பணியை, தியாகத்தை இராஜாஜி, திரு.வி.க, சர்.சி.பி. இராமசாமி அய்யர், ஜீவா, நாமக்கல் கவிஞர், கவிமணி, டி.கே.சி, பேரறிஞர் அண்ணா, எம்.ஜி.ஆர், தெ.பொ.மீ, கி.வா.ஜ. போன்ற அறிஞர் பெருமக்கள் பலர் பல்வேறு சந்தர்ப்பங்களில் எழுத்தாலும் பேச்சாலும் பாராட்டி இருக்கின்றனர்.

மூதறிஞர் இராஜாஜி:
“கிராமணியாரின் பேச்சு பெரிய காவியம் போன்றது. மாதுளைப் பழத்திலுள்ள ரத்தினக் கற்களைப் போலக் கட்டுக்கோப்புடனும் ஒழுங்காகவும் முத்துக்கள் எப்படி அடுக்கப் பட்டிருக்கின்றனவோ அப்படி ம.பொ.சியின் பேச்சில் சொற்கள் கோவையாகவும் அழகாகவும் அமைகின்றன. அப்படிப் பேச அவரால் தான் முடியும்”
(2-10-1944இல் சென்னை இராயப்பேட்டை காங்கிரசுத் திடலில் நடைபெற்ற மஹாத்மா காந்தி விழாவில் )

திரு.வி.கலியாண சுந்தரனார்:
“ வறுமையிற் செம்மை – சிவஞானத்தின் வாழ்க்கை, சில செல்வங்களைப் பெற்றுள்ளது. அவற்றுள் விழுமிய ஒன்று என் உள்ளத்தைக் கவருவது – அது சொற்செல்வம். தோழர் சிவஞானம் வறுமைக்குடியில் பிறந்தவர். வளர்ந்தவர். அவர் தம் பிறப்பும் வளர்ப்பும் என்ன செய்தன? அவர்க்குச் செம்மைத் தலைமையை வழங்கின. தோழர், தமிழ் நாட்டுத் தலைவருள் ஒருவராக விளங்குதல் கண்கூடு. இது வறுமையிற் செம்மையன்றோ?”
(1952 – இல் வெளிவந்த ‘தலைவர் ம.பொ.சி’ என்னும் நூலிலிருந்து)

சர்.சி.பி. இராமசாமி அய்யர்:
“கிராமணியார் அவர்களை நான் இளமையிலிருந்தே அறிவேன். நான் கிராமணியார் அவர்களை ஒரு சிறந்த எழுத்தாளராக, ஒரு சிறந்த பேச்சாளராக, ஒரு சிறந்த தேச பக்தராக, ஒரு சிறந்த தியாகியாக, ஒரு சிறந்த ஒழுக்க சீலராக, சிறந்த அறிவுக்கூர்மை உடையுவராக அறிவேன்”
(23-01-65இல் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் சிலம்புச் செல்வர் கலந்து கொண்ட பொங்கல் விழாத் தலைமை உரையில்)

பொது உடைமை இயக்கத் தலைவர் ப. ஜீவானந்தம் அவர்கள்:
“ அவர் தமிழ்ப் பற்றை – தமிழை – தமிழ் இனத்தை – தமிழ் நாட்டை வாழ்விப்பதற்காக இது வரை போராடிய போராட்டம் அவர் பட்ட பாடு இவற்றை நாம் எப்படி மதிக்கிறோம் – எப்படிப் பாராட்டுகிறோம் – எப்படிக் கையெடுத்துக் கும்பிடுகிறோம் – எப்படி வாழ்த்துகிறோம் என்பதை இன்றைக்கு நாம் காட்டுகிறோம்”
(பொன் விழா உரை, 1956 ஜூன் 26)

நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை:
“ தாய் மொழியாகிய தமிழின் மேல் எல்லையற்ற பற்றுடையவர். ஆனால், தமிழ் மொழியில் தான் எல்லா அறிவும் இருக்கிறதென்றோ, அல்லது தமிழ் மொழியே இந்திய நாட்டின் பொது மொழியாக முடியும் என்றோ, திரு. சிவஞானம் நம்புகின்றவரல்ல. ஆனாலும், இத்தனைச் சிறப்புகளும் தமிழுக்கு வந்து விட்டால் தேவலை என்கின்ற ஆர்வம் உடையவர். ஏன் எனில், அறம், காதல், வீரம் என்கின்ற பண்புகளைத் தமிழ் இலக்கியங்கள் காட்டும் தனி தினுசில் ஆழ்ந்த நம்பிக்கை உடையவர். உலகம் முழுதும் மக்கள் சமுதாயம் தமிழ் இலக்கியங்களில் காணப்படும் முறையில் அமைந்தால் நலம் என்ற நம்பிக்கையுள்ளவர்”
(1952இல் வெளி வந்த ‘தலைவர் ம.பொ.சி.’ என்னும் நூலிலிருந்து)

கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை:
“ கிராமணியார் நாட்டின் நலன் கருதி உழைக்கும் ஓர் அரசியல் சீர்திருத்தக்காரர் மட்டுமல்ல; பண்டைத் தமிழ் இலக்கியங்ளையும் பிற்கால வரலாறுகளையும் துருவி ஆராய்ந்து தமிழின் மேன்மை காட்டும் தண்டமிழ் மேதையுமாவார். அவர் சேவை மொழி, அரசியல், பொருளாதார சமத்துவம் ஆகிய மூன்றினையும் இணைத்து நிற்பதொன்றாகும்.”
(1952இல் வெளி வந்த ‘தலைவர் ம.பொ.சி’ என்னும் நூலிலிருந்து)

ரசிகமணி டி.கே.சிதம்பரநாத முதலியார்:
“ தமிழ்நாட்டில் சிவஞான கிராமணி என்றால் அது ஒரு தனிப் பெரும் பண்பு. அவர் எந்தத் துறையில் இறங்கினாலும் அங்கே வீரத் தத்துவத்தைக் காணலாம். அரசியலில் வீரராய் விளங்குகிறார் என்பது தமிழ்நாடு அறிந்த விஷயம். சமூக இயலும் அப்படியே தான். தமிழ்ப் பண்பாடு, தமிழ் இலக்கியம், தமிழ் இசை இவைகளிலும் அபூர்வமான ஆர்வத்தோடுதான் நிற்பார். இது தான் சிவஞான கிராமணி. தமிழ் முரசில் வரும் தலையங்கங்களிலும் சிவஞான கிராமணியார் வீரத் தொனி கேட்கும். வாய்க்கு உவந்த வார்த்தைகள்; முரசொலி பரவுவதாக”
(1-1-47 தமிழ் முரசு)

பேரறிஞர் அண்ணா:
“ எனக்கு இன்னும் அறுபதாண்டு ஆகாத காரணத்தால் நான் வாழ்த்துவதற்ற்கில்லை. நான் அவருடைய வாழ்த்துகளைப் பெற்றுப் போக வேண்டிய பருவத்திலே உள்ளவன் (பலத்த கைதட்டல்). அவர் நம்மை மட்டுமல்ல; நம்மையும், நாட்டையும், உலகத்திற்கு எடுத்துக் காட்ட்த்தக்க தமிழ் மொழியையும், அந்த்த் தமிழ் மொழியினுடைய ஏற்றத்தையும் எதிர்காலத்தையும் வாழ்த்தத் தக்க உரிமை பெற்றவர்கள் (கைதட்டல்).
“ஆகையினாலே அரசியல், இலக்கிய வாடை அற்றதாகவும், இலக்கியம், அரசியலைப் பற்றிக் கவனிக்காத முறையிலேயும் ஒன்றுக்கொன்று முரண்பட்டுத் தமிழகத்திலே இருந்துகொண்டு வந்த நாட்களிலே ம.பொ.சி அவர்கள் அரசியலையும் மறந்தாரில்லை. இலக்கியத்தையும் இழந்து விடவில்லை. அரசியலையும் இலக்கியத்தையும் அவர் தம்முடைய வாழ்கையிலேயே இணைத்துக் காட்டி இருக்கிறார்.
“ பல பேர் – விடுதலைப் போராட்டத்திலே ஈடுபட்டவர்கள், சுய ராஜ்யம் கிடைத்தது என்பது அறுவடைக்காலம் என்று கருதிக் கொண்டார்கள் ( சிரிப்பு கைதட்டல்) ஆனால், ம.பொ.சிவஞான கிராமணியாரவர்கள், கடைசி வரையில் உழவராகவே இருந்து தம்முடைய வாழ்நாளைக் கழித்து வருகிறார்கள் ( பலத்த கைதட்டல்). நல்ல விதைகளையும் தந்திருக்கிறார்; வேறு பலர் அறுத்துக்கொண்டு போவதையும் பார்த்துக் கொண்டிருக்கிறார். நம்முடைய நாட்டு உழவரைப் போலவே, “ நாம் உழுதோம்; வேறு யாரோ அறுத்துக் கொள்கிறார்களே” என்று கவலைப்படாமல், நாம் உழுது கொண்டே இருப்போம்; யாராகிலும் அறுத்துக் கொண்டே போகட்டும் (சிரிப்பு); மிச்சம் மீதி எப்போதாவது நாட்டுக்குக் கிடைக்கும். அதுவரையிலே உழுது கொண்டிருக்கலாமென்று ம.பொ.சி அவர்கள் உழுது கொண்டே இருக்கிறார்கள்.
“ இலக்கியத்திலே தொடர்புள்ள பேராசிரியர்கள் பலர் அவரிடத்திலே நெருங்கிய தொடர்பு கொண்டவர்கள். இலக்கியத்திலே உள்ள அருமைகளை ம.பொ.சி. அவர்கள் எந்த அளவுக்கு எடுத்துக் கையாளுகிறார் என்பதைப் பார்த்து அவர்களே வியப்படைகிறார்கள். ‘நம்மாலே முடியவில்லையே’ என்று சில பேர் கொஞ்சம் வருத்தப்படக் கூடச் செய்கிறார்கள். நல்லவர்கள் அப்படி வருத்தப்பட மாட்டார்கள்; நல்லவர்களல்லாதவர்கள் தான் வருத்தப்படுகிறார்கள்”
(26-6-66இல் நடைபெற்ற அய்யாவின் மணிவிழாவில் அண்ணாவின் உணர்ச்சி உரை)

முன்னாள் தமிழக முதல்வர் எம்.ஜி.ஆர்.:
“ இந்த விழாவை நான் கவனித்துக் கொண்டிருக்கும்போது ஒன்றுதான் என் நினைவுக்கு வந்தது. ‘ம.பொ.சி’ என்ற மூன்று எழுத்துகள். இவை எதற்காகத் தோன்றி இருக்க முடியும் என்றெல்லாம் வேடிக்கையாகக் கற்பனை செய்தேன். தமிழை ‘ மழை போலப் பொழியும் சிவஞானம்’ என்றும் தமிழர் வீரத்தை ‘ மழை போலப் பொழியும் சிவஞானம்’ என்றும் எடுத்துக் கொள்ளலாம். நல்ல தமிழர் பண்பாட்டுக்கு எடுத்துக்காட்டான இமய மலையைப் போன்ற சிவஞானம் என்றும் நாம் எடுத்துக் கொள்ளலாம்”.
( அய்யா அவர்களின் 26-6-86 அன்று நடைபெற்ற பொன் விழாவில்)

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.