Jan 11, 2010

நூற்றாண்டு நாயகர் ம.பொ.சி.

2006ஆம் ஆண்டு, தமிழரைப் பொறுத்த வரை, நூற்றாண்டு நினைவுகள் பல கொண்ட ஆண்டாகும் போல் தோன்றுகிறது. அப்படி என்ன 1906ஆம் ஆண்டில். தமிழர் நூறு ஆண்டுகள் கழித்தும் நினைவு கொள்ளத் தக்க மனிதர்களைப் பெறும் பாக்கியம் பெற்றுள்ளது போலும். சற்று முன் தான் ஆர்.கே நாராயணன் நூறாண்டு நினைவு தமிழ்நாட்டில் அல்ல, கர்நாடகத்தில் கொண்டாடப்படுவது பற்றிப் பேசினேன். எனக்கு என்னவோ ஆர்.கே.நாராயணனைக் கர்நாடகத்துக்கே முழுமையாக தத்து வார்த்துத் தந்துவிடுவதில் மனம் ஒப்பவில்லை. பேசினேன். அப்படியும் இங்கு ஏதும் எதிர்வினை இல்லை. தொடர்ந்து அவர் எழுதிய ஹிந்து பத்திரிகைக்குக் கூட அவர் நினைவு வரவில்லை. அவரவர் அவரவருக்கு வேண்டியவரைத் தேர்ந்து கொள்கிறார்கள். கன்னடம் பேசிய ஈ.வே.ராவை தமிழர்கள்தான் பெரியாராகக் கொண்டாடுகிறார்கள், கர்நாடகர் அல்ல.
அடுத்து 1906þ மனிதர் சிட்டி. அடுத்து இன்னொருவரும் இருப்பது நமது நினைவுக்கு வரக் காரணம் பொள்ளாச்சி மகாலிங்கம் அவர்களும், அண்ணாமலைப் பல்கலைக் கழக இணைவேந்தர் (டழ்ர்-யண்ஸ்ரீங் இட்ஹய்ஸ்ரீங்ப்ப்ர்ழ்) எம்.ஏ.எம். ராமசாமி அவர்களும் ம.பொ.சிவஞான கிராமணியாரின் நூற்றாண்டு நினைவைக் கொண்டாடிய செய்தியைப் பத்திரிகையில் படித்தது தான். இதையெல்லாம் நமக்கு நினைவுபடுத்த ம.பொ.சி. அவர்களைக் கொண்டாடும் தமிழர், சில துறைகளிலாவது இருக்கிறார்களே, தமிழ் வாழும்.
இந்நூற்றாண்டு விழாவில் நடந்த கூட்டத்தில் நிகழ்ந்த ஒரு முக்கிய அம்சம், விழாக் குழுவினர் விழாக் கூட்டத்திற்கு வருகை தந்து சிறப்பித்த முதல்வர் மு.கருணாநிதிக்குக் கண்ணகி பிரதிமை கொண்ட ஒரு கண்ணாடிப் பேழையைப் பரிசளித்தது தான். எனக்கு இந்தச் சம்பிரதாயங்கள் எல்லாம் சரிவரத் தெரிவதில்லை. ஒரு இடத்தில் உள்ள சம்பிரதாயம் இன்னொரு இடத்தில் வழங்குவதில்லை. தமிழ்நாட்டின் சம்பிரதாயங்கள், அதிலும் அரசியல் பொது மேடை சம்பிரதாயங்கள் விளங்குவதில்லை. இதில் யாருக்கு யார் நினைவுப் பரிசு தருவது என்பதில் எனக்குக் குழப்பம் அதிகம். சாதாரணமாக அரசு தான் நினைவு விழா நாயகரின் நினைவில் ஏதும் செய்யும், விழாக் குழுவினருக்கு உதவும், ஆதரவளிக்கும் என்று நினைப்பேன். இங்கு தலைகீழாக இருக்கிறது. அல்லது என் நினைப்புகள்தான் தலைகீழோ என்னவோ.
எப்படியாயினும், இவற்றையெல்லாம் பெரிதுபடுத்தாவிட்டால், தமிழுக்கும், தமிழருக்கும் தமிழ்நாட்டுக்கும் உழைத்த, ஒரு பெரிய மனிதரை நினைவுகொண்டு கெüரவித்துள்ளது பெரிய விஷயம். மனதுக்கு ஆறுதலாக இருக்கிறது. விழா மேடையில், விடுதலைப் போராட்டத் தியாகி, தமிழகச் சட்டமன்ற மேலவைத் தலைவர், சிலம்புச் செல்வர் என்றெல்லாம் ம.பொ.சி. குறிப்பிடப்பட்டிருந்தார். இவை எல்லாம்தாம் அவர். கல்விக் கூடப் படிப்பு ஏதும் அதிகம் அற்றவர். சாதாரண அச்சுக் கோர்க்கும் தொழிலாளியாகத் தன் வாழ்க்கையைத் தொடங்கியவர். தமிழ், தமிழ்நாடு, தமிழர்தான் அவர் உயிர் மூச்சாக வாழ்ந்தவர். அரசியல் வாதிதான். அவர் காலத்தில் அரசியல், பெற ஏதுமற்ற தியாக வேள்வியாக இருந்த காலம்.
வெற்றுப் பேச்சாளர் இல்லை. பேச்சும் சிந்தனையும், வாழும் வாழ்வும் ஒன்றாக இருந்தது அவர் வாழ்வு. இதை எத்தனை பேர் நம்ப முடியும் இன்று? ஒரு பைசா சம்பளமில்லாத ஒரு கிராமத்துப் பஞ்சாயத்துத் தேர்தலுக்கு லட்சக் கணக்கில் போட்டியாளரிடம் பேரம் பேசும் அரசியல் இன்று. இந்தக் கலாச்சாரம், நாடு முழுதும் பரவியிருக்கிறது. எத்தனை முறை சென்றார் என்பது இப்போது கணக்கில் இல்லை. சிறையில் மின் விசிறி இல்லை, கரப்பும் தேளும் என்று கூச்சலிட்டார்கள் இன்றைய நமது தலைவர்கள் பலர் அன்று. ம.பொ.சியோ மற்றவர்களோ ஏதும் குறை சொன்னதாக அன்று கேள்வி இல்லை. அது வேறு கலாச்சாரம்.
'என் போராட்டம்', 'விடுதலைப் போரில் தமிழகம்' போன்ற நூல்கள் தமிழ் சரித்திரத்தில் இன்னும் விரிவாகப் பேசப்படாத, (இனி பேசப்படும் என்று எனக்கு நம்பிக்கை இல்லை. சரித்திரம் வேறு விதமாக கற்பித்து எழுதப்படத் தொடங்கிவிட்டது என்பது என் கவலை), பேசப்பட மாட்டாதோ என்று இருக்கும் இந்நாளில், அந்தப் புத்தகங்கள் திரும்பப் படிக்கக் கிடைக்க வேண்டும். நூறு புத்தகங்களுக்கு மேல் எழுதியுள்ளதாகச் சொல்கிறார்கள். தமிழ் அரசுக் கழகம் அவர் தொடங்கியது, தேசீயம் பேசும் காங்கிரஸ் தமிழையும் தமிழ்நாட்டையும் புறமொதுக்கப் பார்த்திருந்து விடுமோ என்ற அச்சத்தில் பிறந்தது. தேசீயத்தில் தமிழ் அடையாளம் கரைந்துபடாமல் இருப்பதில் அவருக்குக் கவலை அதிகம். தமிழைச் சொல்லி தேசீயத்தை மறுத்த அரசியல் அல்ல அவரது.

கப்பலோட்டிய தமிழன், வீரபாண்டிய கட்டபொம்மன் என்றெல்லாம் அவர் சரித்திரம் எழுதும்போது, அவரது தமிழ் உணர்வு மேலோங்கிக் காணும். இவை ஏதும் தற்சார்பு அற்ற சரித்திரங்கள் அல்ல. தமிழ்ப்பற்றும் தமிழ்நாட்டுணர்வும் இவற்றில் மேலோங்கி இருக்கும். ம.பொ.சி.யின் வாழ்வையும் எழுத்தையும் ஒரு சீராகக் காண்பவர்கள் அவற்றின் அடியோட்டமாகக் காண்பது, தமிழ், தமிழ், பின் மறுபடியும் தமிழ். அது மற்றதையெல்லாம் வெறுத்து ஒதுக்கிய தமிழ் அல்ல. வள்ளலார் கண்ட ஒருமைப் பாடு, ராமலிங்க ஸ்வாமிகள் சரித்திரம் சொல்வதுதான். அதே சமயம் அது அகில இந்தியப் பின்னணியில் தயானந்த சரஸ்வதி, ராமகிருஷ்ண பரமஹம்சர், ராஜாராம் மோகன்ராய் போன்றவர்கள் இந்து மதச் சீர்திருத்த புருஷர்களாக, 19ஆம் நூற்றாண்டின் அரசியல், பண்பாட்டுச் சூழலில், இந்து மதம் தன்னை அர்த்தமுள்ளதாக, புதுப்பித்துக் கொள்ளும் ஒரு பரந்த அலையின் பின்னணியில் ராமலிங்க ஸ்வாமிகளின் வாழ்க்கையையும் அவரது உபதேசங்களையும் பார்த்தார். 19ஆம் நூற்றாண்டுக்கு மட்டுமல்ல, அதன் இன்றைய அர்த்தங்களையும் பொருத்தத்தையும் காந்தியடிகளின் தோற்றத்தையும் வாழ்க்கையும் உறவுபடுத்திப் பார்த்தார்.
சிலப்பதிகாரத்தில் அவர் ஈடுபாடு அரசியல் பாற்பட்டதில்லை. இப்படி ஏன் சொல்லவேண்டும். வேடிக்கையாக இல்லையா? சிலப்பதிகாரத்திற்கும் அரசியலுக்கும் என்ன சம்பந்தம் என்று ஒரு கேள்வி ஆரோக்கியமான சமூகத்தில் எழும். ம.பொ.சி.யின் சிலப்பதிகார ஈடுபாட்டில் அரசியல் இல்லை என்று சொன்னால், சொல்லவேண்டிய அவசியம் தமிழ்நாட்டின் அரசியல் சம்பந்தப்பட்ட மட்டில் இருக்கிறது. அது அவரது தமிழ்ப் பற்று சார்ந்தது. அவரது சிலப்பதிகாரப் பேச்சுகளின் ஆக்கிரோஷம் வேடிக்கையாகக் கூட இருக்கும். இதில் ஏன் ஆக்கிரோஷம் என்று. ம.பொ.சி. தொடும் எதிலும் அவரது பற்று ஆக்கிரோஷமாகத்தான் வெளிவரும். திராவிட இயக்கச் சிந்தனையாளர்களான, இலக்குவனார், சாமி சிதம்பரனார் போன்றோரெல்லாம் அந்நாளில் சிலப்பதிகாரம் பற்றிப் பெருமையாகப் பேசி எழுதி அவையெல்லாம் 'விடுதலை' பத்திரிகையில் வெளிவரும். அதே சமயம் சிலப்பதிகாரம் பற்றியும் பொதுவாகத் தமிழ்ப் படிப்பு அறிவு வளர்ச்சிக்கு உதவாதது பற்றியும் 'கண்ணகி என்று கூறப்பட்டிருக்கிற பெண்ணுக்கு சிறிதாவது அறிவு, மனித உணர்ச்சி, தன்மானம் இருந்ததென்று யாராவது ஒப்புக்கொள்வார்களா?' என்றெல்லாம் பெரியார் கருத்துகளும் வெளிவரும். இலக்குவனாரோ, சாமி சிதம்பரனாரோ அல்லது கழகத் தமிழ் அறிஞர்களோ பெரியாரோடு வாதம் புரிந்ததில்லை. அவர்கள் பாட்டுக்கு அவர்கள் பேசிச் செல்வார்கள். பெரியார் கருத்துகள் மறுபுறம் வெளிவந்துகொண்டிருக்கும்.

ஆனால், ம.பொ.சி. அப்படியெல்லாம் விட்டுவிட மாட்டார். தான் நடத்தி வந்த தமிழ் முரசு பத்திரிகையில் வெகு விரிவாக "கண்ணகியைப் பழிக்கும் கருஞ்சட்டைத் தலைவர்" என்று ஒரு நீண்ட கட்டுரை எழுதினார். கடைசியில் இதுவும் அதுபாட்டுக்கு அது என்றுதான் ஆயிற்று. அது ம.பொ.சியின் குற்றமல்ல. தமிழ்ப் பண்பு. பதில் சொல்லத் தெரியாவிட்டால், முடியாவிட்டால், கண்டுக்காமல் இருந்து விடுவது தமிழ்நாட்டுப் பண்பு. அப்படித்தான் வாழவேண்டாததெல்லாம், வாழத் தகுதியற்றவெல்லாம், வாழ்வு பெறுகின்றன. யாரும் யாரோடும் மோதுவதில்லை. மோதினாலும் கண்டுக்காமல் ஒதுங்கிவிடுவது சாலவும் நன்று.
அப்படி ஒதுங்கி நல்ல பிள்ளையாகிவிடக் கூடாது காங்கிரஸ் என்ற காரணத்தால்தான், ம.பொ.சி ஆந்திரா பிரிந்த போது சென்னையையும் திருத்தணியையும் தமிழ்நாடு இழந்துவிடாதிருக்கப் போராடினார். கேரளம் உருவானபோதும், பீர்மேடு, தேவிகுளம் சம்பந்தமாகவும் போராடினார். அவர் இருந்திருந்தால், கச்சத் தீவு இலங்கைக்குத் தாரை வார்த்திருக்க முடிந்திராது என்றுதான் நினைக்கிறேன். இன்று நம் மீனவர் வாழ்க்கை இலங்கை கடற்படையினரின் துப்பாக்கிக்குத் தினம் தினம் பலியாவது நேர்ந்திராது.
படிப்பில்லாதவர். தமிழுக்கும் தமிழருக்கும் அவர் தன் வாழ்க்கையை அர்ப்பணித்துக்கொண்டார். அரசியல் அவருக்கு, பொருளீட்டித் தரும் தொழிலாக இருக்கவில்லை. இன்றைய அரசியல்வாதிகள் நோக்கில் 'பிழைக்கத் தெரியாதவர்' தான். அப்படித்தான் அந்தத் தலைமுறை இருந்தது. விதி விலக்குகள் அன்றும் இருக்கலாம் தான். இன்று விதி விலக்குகள் என்று ஒரு கக்கனையும் நல்லகண்ணுவையும் பார்ப்பது போல. சாகித்ய அகாடமி பரிசு அவருக்குக் கிடைத்தது. சாகித்ய அகாடமி பரிசு இல்லாமலேயே, வள்ளலார் கண்ட ஒருமைப் பாடு' ஒரு நல்ல புத்தகம். திரும்பத் திரும்ப அச்சில் வரவேண்டிய புத்தகம்.
அவரது 'விடுதலைப் போராட்டத்தில் தமிழகம்" கூடத்தான். முழுக்க முழுக்க வாய்மொழியாகச் சொல்லச் சொல்ல பதிவானது. சில விவரத் தவறுகள் இருக்கலாம். மனித நினைவு செய்யும் தவறுகள். ஆனால் மிக முக்கியமான ஆவணம். அந்த ஆவணத்தில் சொல்லப்பட்டுள்ளவை இனி வேறு எங்கும் பதிவாகும் நிலை இல்லை இன்று. சரித்திரம் இன்றைய தேவைக்கு ஏற்ப திருத்தி எழுதுதல் என்பது நடைமுறையாகி வருகிற காலம் இது. சிலம்புச் செல்வர் என்று புகழப்பட்டார். இந்திய அரசு அவருக்கு 'பத்மஸ்ரீ" விருது அளித்தது. தமிழ் எழுத்தாளர் சங்கத் தலைவரானார். தமிழ்நாடு சட்டமன்ற மேலவைத் தலைவரானார். அதெல்லாம் சரி.
தமிழுக்கும் தமிழ்நாட்டுக்கும் தன்னை அர்ப்பணித்துக்கொண்ட வாழ்வு அவரது. அவரது பொது வாழ்வு, பேரங்களும் சம்பாத்தியங்களும் கொண்ட வாழ்வு அல்ல. இதற்கு மேல் இன்று ஒரு தமிழனுக்கு வேறு என்ன பெரிதாகச் சொல்லிவிட முடியும்? எத்தனை பேரைப் பற்றி இன்றைய தமிழ்நாட்டில் இப்படிச் சொல்ல முடியும்?
நன்றி: sify.com

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.