Jan 11, 2010

ம.பொ.சி வளர்த்த வ.உ.சி புகழ்

"சுதந்திரம் , சுதந்திரம்' என்ற சொல் செந்தமிழ்க் குலத்தாரின் செவிகளில் ஒலிக்கும்போது சிதம்பரம் சிதம்பரம் என்றே எதிரொலிக்கும் என்றால் மிகையாகாது. காரணம்?கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனாரின் ஒப்பரிய தியாக வாழ்வை உள்ளத்தால் வணங்குபவர்களல்லவா நாம்?திலகர் சகாப்தத்திலே தென்பாரதத்தில் தேச விடுதலைப் போராட்டக் களத்தில் தியாகத் திலகமாகத் திகழ்ந்து தென்னாட்டுத் திலகர் என்ற தனிப்புகழ் பெற்றவர் வ.உ.சி.வ. உ. சிதம்பரனாரின் வாழ்க்கை வரலாற்றை வழங்கி அவருக்கு அழியாத புகழ்தேடி வைக்கமுழங்கியவர்ம.பொ.சி.ம.பொ.சி. வளர்த்த வ.உ.சி. புகழ்ம.பொ.சி.யின் தலையாய தொண்டுகளில் தேசபக்த வீரர்களின் தியாக வரலாற்றைத் தந்து, மாவீரர்களான அவர்களுக்கு மக்கள் மத்தியிலே ஒரு பெருமையை ஏற்படுத்தியது. மாபெரும் விடுதலை வேட்கை மிக்க வீரத்தேசியவாதியாக வழ்ந்த வ.உ.சி., அழியாப்புகழ் வாய்ந்தவர் என்றாலும், அவர் தமது அந்திமக்காலத்தில் ஆதரவிழந்திருந்தார் தேசியவாதிகளிடம்!அவர் மறைந்து மூன்றாண்டுகளுக்குப்பின்னர், அதாவது 1939 இல் அப்பெருந்தலைவருக்கு அன்று சென்னை மாவட்ட காங்கிரஸ் செயலாளராக இருந்த சிவஞானச்செல்வர் சிலை எடுத்துச்சிறப்பிக்க எண்ணினார். அந்த அரும்பெருஞ்செயலை மாவட்ட காங்கிரஸ் கமிட்டியின் சார்பிலே செய்ய ஆசைப்பட்டார். அவ்விழாவை நடத்த சென்னை மாவட்ட காங்கிரஸ் குழுவில் தீர்மானமும் கொண்டு வந்தர்.அத்தீர்மானத்தை அநேகர் அதிதீவிரமாக எதிர்த்தனர். அதோடு அவ்விழாச்செலவுக்கான பணத்தை ஏற்கவும் காங்கிரஸ் கமிட்டி மறுத்து ஒதுங்கியது. ஆனால் அயராத தொண்டுழைப்பும், அஞ்சா நெஞ்சமும் இருக்கப் பெற்றவர் ம.பொ.சி. அவர் உற்சாகத்தை இழந்து விடவில்லை. அன்றைய சென்னையிலிருந்த அநேக தொழிற்சங்கங்களிலிருந்து சிறிது சிறிதாகப் பணம்சேர்த்து செக்கிழுத்த சிதம்பரனாரின் சிலை வடிக்கச் செய்தார். அதற்கு அன்று அதிகளவு உதவியாக இருந்தவர் திரு. எம். பக்கிரிசாமிபிள்ளை என்னும் தொழிற்சங்கவாதி.வ.உ.சி.யின் முக உருவச்சிலையை வடித்தெடுத்து விட்ட பின்பு அந்தச் சிலையை இன்று சத்தியமூர்த்திபவன் இருக்கும் இடத்தில் அன்றிருந்த காங்கிரஸ் மைதானத்திலுள்ள கொடிமரத்தின் கீழ் வைப்பதற்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியிடம் அனுமதி கேட்டார் ம.பொ.சி. ஆனால் அதன் காரியக்குழு அதற்கு அனுமதியளிக்க மறுத்துவிட்டது. அதன் இடதுபுறத்தில் அருந்தியாகச் சீலர் சிலையமைக்க ஏற்பாடாகியது. விழா 21.12.1939 இல் வெற்றிகரமாக நடந்தேறியது.சிதம்பரனாரின் சிலைத் திறப்பு விழாவிற்குச் சொல்லின் செல்வர் சத்தியமூர்த்தி தலைமை தாங்கினார். டாக்டர் டி.எஸ்.எஸ்.ராஜன் சிதம்பரனாரின் முகவுருவச் சிலையைத் திறந்து வைத்தார். அந்நாளில் நிதிக்கட்சியில் இருந்;த வி.சர்க்கரை செட்டியார், அகில இந்திய இந்து மகா சபையின் பொதுச்செயலாளராக இருந்த டாக்டர் பி. வரதராஜுலு நாயுடு, சுயமரியாதை இயக்கத்தின் ஸ்தாபகராக இருந்த திரு. சிங்கார வடிவேலு செட்டியார் போன்ற தொண்டுக்கிழங்களெல்லாம் விழாவிற்கு வருகை தந்திருந்தனர். திரு.வி.கல்யாணசுந்தரனாரும் கலந்து கொண்டார். சேலம் சி.விஜயராகவாச்சாரியார் சிதம்பரனாரின் சிலைநாட்டு விழாவுக்குச் சிறப்பான வாழ்த்துச் செய்தியை அனுப்பியிருந்தார். சுத்தானந்த பாரதியாரும், நாமக்கல் கவிஞரும் செந்தமிழ்க்கவிதைகள் ஈந்தனர். தமிழ், ஆங்கில நாளிதழ்களெல்லாம் தலையங்கம் எழுதியும், செய்திகள் பிரசுரித்தும் தங்கள் வணக்கத்தைத் தெரிவித்துக்கொண்டன. அணி அணியாக தொழிற்சங்க ஊர்வலங்கள் அவ்விழாவில் கலந்து கொண்டன. அவ்விழாவிலே ம.பொ.சி. அவர்கள் பாரதியாரின் முக உருவச் சிலையையும் தமது சொந்த முயற்சியிலேயே வைக்கப்போவதாகவும் உற்சாகத்தோடு உரைத்தார்.வ.உ.சி. சிலை திறக்கப்பட்ட மறுநாள் இராயப்பேட்டை காங்கிரஸ் திடலிலே காங்கிரஸ் கதர் சுதேசி கண்காட்சி கோலாகலத்தோடு ஆரம்பிக்கப்பட்டது. எதிர்பாராதவிதமாக ஒருவாரத்திற்குள் கண்காட்சியில் தீவிபத்து ஏற்பட்டு எல்லாம் எரிந்து சாம்பலாகிவிட்டன. வெந்து எரிந்த சாம்பற் குவியலுக்கிடையே வியக்கத்தக்க வகையில் ஒரு சிறிதும் சிதையாமல் வ.உ.சி. சிலையும், கொடிக் கம்பத்தில் பறந்து கொண்டிருந்த காங்கிரஸ் கொடியுமே இருந்தன.ம.பொ.சி. வடித்த வ.உ.சி. வரலாறுவ.உ.சி.யின் நினைவை ஒட்டி ம.பொ.சி.யின் நினைவு வருவதும் ஒவ்வொரு தமிழனின் உள்ளத்திற்கும் இயற்கையாகி விட்டது. அந்த அளவுக்கு அந்தப் பெருந்தலைவரின் அழிவற்ற புகழுக்கு அடிகோலிட்டார் ம.பொ.சி.வ.உ.சியின் வீரத்தியாக வாழ்க்கை விளக்கம் வேறு ஒன்றும் ம.பொ.சி. எழுதுவதற்கு முன்பு இல்லை. ஆகவே அவரது அற்புதமான வரலாற்றை எழுதுவதற்காக அவரைப் பற்றிய உண்மைச் செய்திகளை அவரோடு பழகியவர்களெல்லாம் கண்டும், அவர்காலப் பத்திரிகைகளையெல்லாம் தேடிப் பிடித்துப் புரட்டிப் பார்த்தும் செய்திகளைச் சேகரித்துக் கொண்டு சிறந்த முறையிலே ஜீரணித்து வைத்துக் கொண்டார் சிவஞானச் செல்வர்.ஏகாதிபத்தியக் கப்பலுக்கு எதிர்க் கப்பலை விட்ட ஏந்தலின் வரலாற்றை, ""கப்பலோட்டிய தமிழன்'' என்று வரைந்து முடித்த வீரமிக்க வரலாற்றை, வித்துவான் மயிலை மாசிலாமணிப் பிள்ளை சரிபார்த்துக் கொடுத்தார். எழுதி ஆகிவிட்டது. ஆனால் அதை அச்சேற்ற வேண்டுமே! அப்போது ம.பொ.சி. ஏழ்மையில் ஆழ்ந்து எளியவராக இருந்தார். எங்கே போவது பணத்திற்கு?அந்தச் சமயம் சென்னை மாவட்ட காங்கிரஸ் துணைச் செயலாளராக இருந்த தி.ரு. டி.எஸ்.கோவிந்தசாமி என்பவர் சூளைப்பகுதியில் அச்சகம் ஒன்று நடத்தி வந்தார். அச்சுக் கோர்க்கும் அனுபவமிக்கவரல்லவா ம.பொ.சி. ஆகவே அந்த நண்பரிடம் அவருடைய அச்சகத்தில் வ.உ.சி.யின் வரலாற்றைத் தாமே அச்சுக் கோர்க்க அனுமதி கேட்டுப் பெற்றார். ம.பொ.சி. அப்போது தண்டையார்ப்பேட்டையில் தாங்கொணாத வறுமைத் துன்ப வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருந்தார். காலை நேரத்தில் கிடைக்கும் அரை வயிற்றுச் சிற்றுண்டியை உண்டும், அதுவும் அகப்படாத காலங்களில் அடிவயிற்றைக் கிள்ளும் பசியோடும் அச்சகத்திற்கு நடந்தே வந்து அச்சுக் கோர்ப்பார். அச்சக உரிமையாளர் அருந்தும் உணவில் அரைப்பங்கு அவருக்குக் கிடைப்பதும் உண்டு. இத்தனை இன்னல்களுக்கிடையே அச்சுக் கோர்க்கப்பட்ட அவ்வரலாற்றை அச்சடிக்கக் காகிதமின்றி அகமிக வாடினார் ம.பொ.சி. அந்த உதவியையும் அச்சக உரிமையாளரான கோவிந்தசாமியே அளித்தார். ஆனாலும் அச்சேறிய புத்தகங்களுக்கு மேலட்டை வேண்டுமே...! அதற்குரிய காகிதம் வாங்க அகப்படவில்லை பணம்! நூல்கள் வெளிவராமல் நாட்கள் நகர்ந்தன. இந்த நிலையில் ஆகஸ்டுப்போர் 1942 இல் ஆரம்பமானது. ஆங்கிலேயே ஆதிக்கவாதிகளின் அதிகாரக் கொடுமைக்குள் அகப்பட்டுக் கொண்டு ம.பொ.சி. அடைக்கப்பட்டார் சிறையிலே! இதற்கிடையே அச்சேறிய ""கப்பலோட்டிய தமிழன் ""வரலாற்றுப் பிரதிகளை ஆங்கிலேயர் ஆட்சியின் போலீசார் அபகரித்து அழிக்க தலைப்பட்டனர். ஆனால் கோவிந்தசாமியால் ம.பொ.சி. விடுதலை பெற்று வந்தார். வெஞ்சிறை போகும் முன்பு வறுமையோடு போராட்டம்! வெளியே வந்து விட்ட பின்னரோ வீட்டிலே வறுமை நோயாலும், உடலிலே வருந்தும் நோயாலும் வாடி வதங்கி வாழ்க்கையோடு போராட வேண்டியவரானார்.வ.உ.சி.யின் வரலாற்றை நூல் வடிவில் கொண்டுவர மட்டும்தான் விரும்பிச் செயல்பட்டுக் கொண்டிருந்த ம.பொ.சி.க்கு அந்நூலை விற்றுப் பணமாக்க வேண்டிய அளவுக்கு அவரை அவரது வாழ்க்கைச் சூழ்நிலை கொண்டு வந்து வைத்து விட்டது. அப்போது அவருக்கு அறிமுகமில்லாத சின்ன அண்ணாமலையிடம் அணுகி ""தமிழ்ப் பண்ணை'' யின் மூலம் அந்நூலை வெளியிடச் செய்தார். 1944ஆம் ஆண்டு! அதற்காக அவருக்குக் கிடைத்த பணம் ஒரு நூறு ரூபாய் நோட்டு மட்டும்தான்!மக்களின் வேண்டுகோளும் ம.பொ.சி.யின் வேண்டுகோளும்வ.உ.சி.யின் வாழ்க்கை வரலாற்றை ம.பொ.சி. தமிழ் மக்களுக்குத் தந்துவிட்ட பின்னர், அவர் எங்குப் பேச நேர்ந்தாலும் அங்கெல்லாம் அவரை கப்பலோட்டிய தமிழனின் வாழ்க்கைத் தியாகத்தை விரிவாக விளக்குமாறு வற்புறுத்துவது வழக்கமாகிவிட்டது. சிலம்புச் செல்வரும் சிதம்பரனாரின் சரித்திரத்தை சொற்பொழிவு செய்வார்.1945 ஆம் ஆண்டு செய்யாறிலே காங்கிரஸ் கட்சி சார்பில், அரசியல் மாநாடு ஒன்று நடந்தது. அந்த மாநாட்டுத் தலைவர் அரசியல் அறிஞர் ராஜாஜி. மேடையேறினார் ம.பொ.சி... மக்களெல்லாம் வ.உ.சி.யைப் பற்றி முழங்கச் சொன்னார்கள். கேட்போர் நெஞ்சம் கதறுமாறும் கண்ணீர் மல்கவும் கப்பலோட்டிய தமிழனின் வரலாற்றைக் கூறினார் அவர். கடைசியில் கூடியிருந்தோருக்கு கூப்பிய கரத்தோடும் கடமையுணர்வோடும் வேண்டுகோள் ஒன்றும் விடுத்தார்.""நாட்டுக்குழைத்த வ.உ.சி.க்கு நல்லதொரு நினைவுச் சின்னம் நிறுவப்படவில்லை.அதற்கான பொறுப்பை ராஜாஜி அவர்களே ஏற்க வேண்டும். அப்படி அவர் ஏற்குங்கால் எல்லா மக்களும் இயன்றவரை அள்ளியள்ளி அளிக்க வேண்டும். வெள்ளிக் காசுகளை இந்த வேண்டுகோளோடு சொற்பொழிவை நிறுத்திய அடுத்தகணமே சேர்த்தனர். அங்குக் குழுமியிருந்தோரெல்லாம் அவரது வேண்டுகோளை ஆர்வத்தோடு செயலாக்கினர். ஐந்து, பத்து, ஐம்பது என்று ஏறக்குறைய 500 ரூபாய் அப்போதே அளித்து விட்டனர். அதைக் கண்ட ராஜாஜிக்கு ஆச்சரியம் தாளவில்லை.அவர் பேசும்போது, ""இங்கே கூடியிருக்கும் நீங்களெல்லாம் கிராமவாசிகள். இந்த மாநாட்டில் நிதி வசூலிக்கப்படும் என்று எதிர்பார்த்து இங்கு யாரும் வரவில்லை. அப்படியிருந்தும் ம.பொ.சி.யின் பேச்சைக் கேட்டதும் வழிச் செலவுக்கும் அவசரத் தேவைக்கும் நீங்கள் கொண்டு வந்த பணங்களை எல்லாம் கொடுத்து விட்டீர்கள். சிதம்பரம் பிள்ளையின் சிறந்த தியாகத்திற்கு மட்டுமல்ல, ம.பொ.சி.யின் சிறப்பான பேச்சுத்திறத்திற்கும் கிடைத்த வெற்றி இது'' என்றார்.செய்யாறு மாநாட்டிலேதான் எதிர்பாராமல் செக்கிழுத்த செம்மலின் நினைவு நிதி துவக்கி வைக்கப்பட்டது. அந்த நல்ல வாய்ப்பை நழுவவிடாமல் ஞாபகார்த்த பணியைத் தொடர்ந்து மேற்கொள்ள கல்கி ரா. கிருஷ்ண மூர்த்தி அவர்கள் வந்தார். பின்னர் ராஜாஜியின் தலைமையிலெயே கப்பலோட்டிய தமிழனின் ஞாபகார்த்த குழு அமைக்கப்பட்டது. அந்த நிதியிலிருந்து ஆரம்பிக்கப்பட்டதுதான் தூத்துக்குடி வ.உ.சி. கல்லூரி.
கட்டுரையாளர்-நாடகப்பணி அருணகிரி.
நன்றி: hi-in.facebook.com

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.