Jul 13, 2010

திருத்தணி, தமிழகத்துடன் இணைந்த 50-வது ஆண்டு தினம்


- ஈ. எஸ். எஸ். இராமன், எம்.எல்.
நன்றி: தினத்தந்தி 01.04.2010

50 ஆண்டுகளுக்கு முன்பு இதே நாளில் (ஏப்ரல் 1, 1960) தமிழகத்தின் வடபுலத்தில், திருத்தணி பகுதியில் ஒரு மகிழ்ச்சிகரமான, மறக்கவொண்ணா வரலாற்று நிகழ்வு நடைபெற்றது.
ஒருங்கிணைந்திருந்த சென்னை ராஜ்யத்திலிருந்து 1953-ம் ஆண்டு ஆந்திரப் பிரதேசம் என்றொரு தனி மாநிலம் அமைக்கப்பட்டது. அப்பொழுது சித்தூர் மாவட்டத்தில் திருப்பதிக்குத் தெற்கே இருந்த தமிழர் பகுதிகள் அடங்கிய தாலுகாக்கள் புதிய ஆந்திர மாநிலத்தோடு சேர்க்கப்பட்டன. அப்படி ஆந்திர மாநிலத்தோடு அன்னியமாக ஒட்டி இருந்த (ஒட்டப்பட்ட) தமிழ்ப் பகுதிகள் அல்லது தமிழர் பகுதிகள் 1960-ம் ஆண்டு (ஏப்ரல் முதல் தேதி) இதே நாளில் தான் மீண்டும் தமிழகத்தோடு இணைக்கப்பட்டன.
செங்கல்பட்டு-சித்தூர் மாவட்ட ஆட்சியாளர்கள் கூட்டாக ஏற்பாடு செய்திருந்தஎல்லை மாற்றச் சடங்குஅன்றுதான் நடைபெற்றது.
தமிழ் நாடு அரசின் சார்பில் இந்த எல்லை மாற்றச் சடங்கில் அன்றைய அமைச்சர் எம். பக்தவத்சலம் தான் திருத்தணி தாலுக்காவை ஆந்திர அரசிடமிருந்து பெற்றுக் கொண்டார். அப்பொழுது தமிழக முதல்வராக இருந்தவர் பெருந்தலைவர் காமராஜர் என்பதும் ஆந்திர முதல்வராக இருந்தவர் என். சஞ்சீவி ரெட்டி என்பதும் குறிப்பிடத்தக்கது.
மொழி என்பதுஒலிஅல்லதுஓசைஅல்ல. மொழி என்பது உணர்வு, உயிர் என்பதை அன்றைய தினம் தமிழக வடக்கெல்லையில் வாழ்ந்த தமிழர்கள் மத்தியில் உணர முடிந்தது.
இன்றைய திருத்தணி சட்டமன்றத் தொகுதியும், பள்ளிப்பட்டு சட்டமன்றத் தொகுதியும் தமிழக சட்டப் பேரவையில் இடம் பெற்று இருப்பதற்குக் காரணம் அன்றைக்குச் சிலம்புச் செல்வர் .பொ.சிவஞானம் தலைமையில் நடைபெற்ற பல்வேறு போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள், அவை மூலமாக ஏற்பட்ட சிறைவாசங்கள், உயிர்த் தியாகங்கள் என்பதை எவரும் மறந்திட இயலாது.
சிலம்புச் செல்வர் .பொ.சி தன் வாழ்க்கை வரலாற்று நூலில் கூறுகிறார். “ஆசிரியர் மங்கலங்கிழார் என்ற சுமார் 55 வயதுடைய பெரியாரின் அழைப்பின் மீதே நாங்கள் வடக்கெல்லையில் சுற்றுலா செய்யப் புறப்பட்டோம். அவர் சிறந்த தமிழறிஞர். தமிழர் மறந்து விட்ட வடக்கெல்லை தாலுகாக்களைத் திரும்பவும் தமிழகத்தோடு இணைக்க வேண்டும் என்பதிலே அவர் மிகவும் உறுதி கொண்டிருந்தார்என்று குறிப்பிடுகிறார்.
வடக்கெல்லை அல்லது தணிகை மீட்புப் போராட்டத்தின்துவக்குநராகஇருந்து செயல்பட்ட மங்கலங்கிழார் 1953-ம் ஆண்டு ஆகஸ்டுத் திங்கள் 31-ம் நாள் உயிர் நீத்தார். வடக்கெல்லை மீண்டு, வெற்றி காணும் காட்சியைக் காணும் வாய்ப்பை அவருக்கு இயற்கை அளிக்கவில்லை.
சிலம்புச் செல்வர் .பொ.சியின் தலைமையில் நடைபெற்ற தணிகை மீட்புப் போராட்டத்தில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டு பாடுபட்டவர்கள் பட்டியல் பெரியது. சட்டப் பேரவை முன்னாள் உறுப்பினர் கே. வினாயகம் இப்போராட்டத்தின் தளபதியாக விளங்கினார்.
சித்தூர் நகர மன்ற முன்னாள் தலைவர் சித்தூர் சி.வி.சீனிவாசன், திருத்தணி கோல்டன் சுப்பிரமணியன், பொதட்டூர் பேட்டை சகோதரர்கள் .எஸ். சுப்பிரமணியம் (1952-ம் ஆண்டு பொதுத் தேர்தலில் வடக்கெல்லை மீட்புக் குழுவின் சார்பாக சட்டப் பேரவைக்குப் போட்டியிட்டவர்), .எஸ். தியாகராசன் (சட்டப் பேரவை முன்னாள் உறுப்பினர்) சித்தூர் வழக்கறிஞர் அரங்கநாத முதலியார், திருவாலங்காடு ஊராட்சி மன்றத் தலைவர் திருமலைப் பிள்ளை, தணிகை காந்தி, சோதிடர் சடகோபாச்சாரியார் உள்பட பல நல்லோர்கள் தங்களை முழுமையாக வடக்கெல்லைப் போராட்டத்தில் ஈடுபடுத்திக் கொண்டனர்.
தமிழக ஆந்திர எல்லை சிக்கலைத் தீர்த்து வைக்கும் மத்தியஸ்தராக (நடுவராக) செயல்பட்டவர் அன்றைய மத்திய சட்ட அமைச்சர் எச்.வி. படாஸ்கர். அன்றைய பிரதமர் பண்டித ஜவஹர்லால் நேருவின் ஆணைப்படி வெற்றிகரமாகத் தீர்வு ஏற்பட உதவியவர் படாஸ்கர் எனில் அது மிகையன்று. 1960-ம் ஆண்டு ஏப்ரல் முதல் தேதி, தமிழகஆந்திர எல்லைத் திருத்தச் சட்டம் நடைமுறைக்கு வந்தது.
அன்றைய தமிழக அமைச்சர்கள் சி. சுப்பிரமணியம், எம். பக்தவத்சலம், நடிகர் திலகம் சிவாஜி கணேசன் உள்ளிட்ட பலர் 1.4.1960 அன்று நடைபெற்ற தணிகை மற்றும் அதன் பகுதிகள் தமிழகத்தோடு இணையும் விழாவில் பங்கேற்றனர்.
தமிழர்களின் தனித் தெய்வம் முருகன் கோயில் தலமாகும் திருத்தணிஎன்றும் அறப்போர் செய்து நமது உடைமை திருத்தணியை நமக்கே மீட்ட நற்பணியால் பெரும் புகழுக்கு உரியர் சிவஞானம்என்றும் நாமக்கல் வெ. இராமலிங்கம் பிள்ளை வாழ்த்தியதை மறக்க முடியுமா?