Aug 3, 2010

ஆகஸ்ட் 15 துக்க நாளல்ல; போர் முனையும் முறையும் மாறும் நாள்

- ம. பொ.சிவஞானம் 


நன்றி:  மண்மொழி செப்டம்பர் - அக்டோபர் 2008 

ஆகஸ்ட் 15-ஆம் நாளைத் துக்க நாளாகக் கொண்டாட வேண்டுமென்று பெரியார் ஈ.வே.ரா. அறிக்கை விடுத்தார். அதிலுள்ள தவறுகளை எடுத்துக் காட்டி, “தமிழ் முரசு” (1-8-47) இதழிலே நான் எழுதிய தலையங்கம் வருமாறு ; “ஆகஸ்டு 15-ஆம் தேதி இந்தியாவின் - தமிழகத்தின் வரலாற்றில் ஒரு சிறப்பான நாளாகும். இருநூறு ஆண்டுகளுக்கு மேலாக இந்தியாவை அடக்கி ஆண்டு வந்த ஏகாதிபத்தியம் அன்று இந்தியாவை ஆளும் பொறுப்பை இந்தியத் தலைவர்களிடம் - இந்தியாவில் செல்வாக்கு வாய்ந்த காங்கிரஸ், லீக் கட்சிகளிடம் ஒப்படைத்து வெளியேறுகிறது. எனவே, ஆகஸ்டு 15 -ஆம் நாளிலே விழாக் கொண்டாட வேண்டுமென்று காங்கிரசும், மாகாண - மத்திய அரசாங்கங்களும் மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளன.

ஆகஸ்டு 15-ஆம் தேதியின் சிறப்பில் தமிழருக்குப் பெரும் பங்குண்டு. வெள்ளையரை வெளியேற்ற நடந்த சுதந்திரப் போரில் தமிழினத்தார் காட்டிய வீரமும் அடைந்த இன்னலும் வேறு எந்த இனத்தவருக்கும் குறைந்ததல்ல. அதிகமென்று கூறினாலும் பொருந்துவதே. ஆங்கிலப் படைகளை எதிர்த்து நேருக்கு நேர் போர் புரிந்த பாஞ்சாலக் குறிச்சிக் கட்டபொம்மு, ஆங்கில அதிகாரத்தையும் வாணிகக் கொள்ளைகளையும் எதிர்த்த வீரர் வ.உ.சி. மற்றும் குமரன் போன்ற தமிழகத்து வீரர்களின் வரலாறுகள் வஞ்சனையின்றி வாய்மையுடன் எழுதப்படுமானால், உலகமே தமிழ் இனத்தின் தேச பக்தியைக் கண்டு வியக்கக்கூடிய உண்மைகளை அவற்றில் காணலாம்.

ஆகஸ்டு 15-ஆம் தேதியைத் தமிழர் கொண்டாடுவதன் பொருள் எதுவாக இருக்க வேண்டும்? சுதந்திர இந்தியாவில் சுதந்திரத் தமிழகம் அமைந்து விட்டதென்பதா? அதுவுமில்லை. பின் எதற்காக நாம் அந்த நாளைக் கொண்டாட வேண்டும்? அதற்கு இரண்டு காரணங்கள் உண்டு. முதலாவது, நமது முதற்பகையான பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தை வெளியேற்றி வெற்றி கண்ட நாள். இரண்டாவது சுதந்திரப் போரில் ஈடுபட்டு சொல்லொணா இன்னலுற்ற எல்லா வீரர்களுக்கும் தமிழ்நாட்டினர் தலை வணங்கி நன்றி செலுத்த வேண்டிய நன்னாள்.

ஆகவே, தமிழ் இனத்தை வேண்டுகிறோம்; நமக்கு எவ்வளவு குறைகளிருப்பினும், நமது முதல் பகைவனை முறியடித்து வெற்றி கண்ட நாளை விழாக் கொண்டாடுங்கள். சுதந்திரப் போரில் உயிர் நீத்த தியாகிகளுக்குத் தலை வணங்குங்கள். இன்று நம்மிடையே வாழும் வீரர்களுக்கு வாழ்த்துக் கூறுங்கள். ஆகஸ்டு 15-ஆம் தேதி தமிழருக்குத் துக்க நாள் என்கின்றனர் சிலர். இது தவறு. இரண்டு முனையில் போரிடும் படையினருக்கு ஒரு முனையில் போர் முடியுமானால், அது எப்படித் துக்க நாளாகும்? பிரிட்டிஷ் ஏகாதிபத்திய எதிர்ப்பு முனை, வட இந்தியப் பாசிச எதிர்ப்பு முனை ஆகிய இரண்டிலும் தமிழர் வெற்றி கண்டாலொழிய தமிழகத்துப் பூரண விடுதலையில்லை. தமிழ் இனத்துக்குப் புது வாழ்வில்லை. இது உண்மைதான். என்றாலும், ஏகாதிபத்தியத்தை வெளி யேற்றாத நிலையில், வட இந்திய ஆதிக்கத்தை மட்டும் எதிர்த்துத் தமிழர் போராட்டம் நடத்தினால் அது ஏகாதிபத்தியத்துக்குத் துணை செய்யும் உள் நாட்டுக் குழப்பமாக இருக்குமேயொழிய, தமிழருக்குப் பூரண விடுதலை அளிக்கும் சுதந்திர இயக்கமாக இருக்க முடியாது.

ஆகவே, தமிழர் பிற இந்திய இனங்களுடன் இணைந்து நின்று முதலில் ஏகாதிபத்தியத்தை எதிர்த்துப் போர் புரிந்ததும், ‘அந்தப் போர் முடிந்து வெற்றி கண்ட நாளை விழாக் கொண்டாடுவதும் எப்படித் தவறாக இருக்க முடியும்? ஆகஸ்டு 15-ஆம் தேதியன்று துக்கம் கொண்டாட வேண்டியது இங்கிலாந்தே ஒழிய, இந்தியா அல்ல; தமிழகமும் அல்ல. ஆகஸ்டு 15-ஆம் தேதி கொண்டாட்டத்தில் பங்கு கொண்டு ஏகாதிபத்தியத்தை எதிர்த்துப் போர் புரிந்த தமிழ் வீரர்களுக்கு வாழ்த்துக் கூறி வணங்குவது தனிப்பட்ட ஒரு கட்சிக்கோ அல்லது மனிதர்களுக்கோ செய்யும் வணக்கம் அல்ல. தமிழ் இனத்தின் வீரத்துக்குச் செய்யும் வணக்கமாகும்.

ஏகாதிபத்திய எதிர்ப்பில் ஈடுபட்ட ஒவ்வொரு வீரரும் பயன்படக் கூடியவர்களே. அவர்கள் தமிழகத்தின் விடுதலையை விரும்பாத வட இந்திய பக்தர்களென்று கூறுவதெல்லாம் வெறும் கற்பனைவாதம். காலம் வரும் போது ஏகாதிபத்தியத்தை எதிர்த்த ஒவ்வொரு வீரத்தமிழனும் வட இந்திய ஆதிக்கத்தையும் எதிர்த்து, தமிழகத்தில் தமிழ்க் குடியரசு நிறுவுவதைக் காணலாம். எனவே, ஆகஸ்டு 15-ஆம் தேதியை துக்கநாள் என்போர் தேச விடுதலைக்குப் போரிட்ட தமிழ் வீரர்களின் உணர்ச்சியைப் புண்படுத்துகிறார்கள் என்பது நினைவிருக்கட்டும். இந்த விபரீதச் செயலால் தமிழக்தின் விடுதலையை விரும்பாதவர்கள் முகாமுக்கு அவர்களை விரட்டுகின்றனர் என்றும் எச்சரிக்கிறோம்.

தமிழரசுக் கழகத்தைப் பொறுத்தவரையில் நிலைமை இதுதான் : பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தை வெற்றி கண்ட நாள் என்ற வகையில் ஆகஸ்டு 15-ஐக் கொண்டாடுகிறோம். போர்க்களத்தில் நின்றுதான் கொண்டாடுகிறோம். ஒரு முனையில் முடிந்த போர் மறுமுனையில் துவங்குகிறது. ஆகவே, ஆகஸ்டு 15-ஆம் தேதி நமக்குப் போர் நிறுத்த நாள் அல்ல; போர் முனையும் போர் முறையும் மாறும் நாள். அந்நாளில் நமக்குள்ள களிப்பு - ஆகாயப் படை, தரைப்படை, கப்பற் படை முதலியவற்றால் பலம் பொருந்திய ஒரு பெரிய ஏகாதிபத்தியத்தை - முதற் பகையை வீழ்த்தி விட்டோம் - வெளியேற்றினோம் - வெற்றி கண்டோம் - என்பதேயாகும்.

எனவே, தமிழினத்தவரை, தமிழரசுவாதிகளை வேண்டுகிறோம்; ஆகஸ்டு 15-ஆம் தேதி விழாவில் பங்கு கொண்டு கட்டபொம்மன், வ.உ.சி., திருப்பூர் குமரன் போன்ற வீரத்தியாகி களுக்கு வணக்கம் செலுத்துங்கள். இன்று நம்மிடையே வாழும் வீரர்களுக்கு வாழ்த்துக் கூறுங்கள். அதே நேரத்தில், “சுதந்திரத் தமிழகத்தை, சோஷியலிசக் குடியரசை அடைந்தே தீருவோம். அதை எதிர்ப்பவர்கள் எவரானாலும், அவர்களின் எதிர்ப்பை முறியடித்து, தமிழ் நாட்டில் தனியரசை - தமிழரசைக் கண்டே தீருவோம்என்று உறுதி மேற்கொள்ளுங்கள். சுதந்திர இந்தியா வாழ்க.