Aug 3, 2010

தலைநகர் காத்த தமிழ்ச்செல்வர் ம.பொ.சி என்ற சிலை அமைக்கப்படும் - கலைஞர் (1.7.2006)

சிலம்புச் செல்வர் ம.பொ.சி நூற்றாண்டு நிறைவு விழா
தலைநகர் காத்த தமிழ்ச்செல்வர் ம.பொ.சி என்ற சிலை அமைக்கப்படும் (1.7.2006) - தமிழக முதல்வர் டாக்டர் கலைஞர் மு. கருணாநிதி சிறப்புரை

நன்றி: முரசொலி 02.07.2006


விடுதலைப் போராட்டத் தியாகியும் தமிழக சட்டமன்ற மேலவை முன்னாள் தலைவருமான சிலம்புச் செல்வர் ம.பொ.சி அவர்களின் நூற்றாண்டு நிறைவு விழ சென்னை கலைவாணர் அரங்கில் கடந்த ஆண்டு 1.7.2006 சனிக்கிழமை அன்று மாலை நடைபெற்றது.

அவ்விழாவில் சிலம்புச் செல்வர் அவர்களின் திருவுருவப் படத்தைத் திறந்து வைத்து தமிழக முதல்வர் டாக்டர் கலைஞர் அவர்கள் நிகழ்த்திய சிறப்புரை:

30.06.2006 அன்று என்னுடைய தொகுதியான சேப்பாக்கம் தொகுதியில் எனக்கு வாக்களித்த மக்களுக்கு நன்றி கூற நான் சென்றிருக்க வேண்டும். உடல்நிலை இடம் கொடுக்காத காரணத்தால் அந்தக் கூட்டம் ஒத்தி வைக்கப்பட்டது. இன்றைக்கும் ஒத்தி வைக்கப்படுமா என்ற கேள்விக்கு இடமில்லாமல் இங்கே வந்திருக்கிறேன் என்றால் நான் பேசுகிற அந்தக் கூட்டத்தை விட, நான் சிலம்புச் செல்வரைப் பற்றிப் பேசுகின்ற கூட்டம் சிறந்தது என்று நான் கருதியது தான் என்பதை நீங்கள் மிக நன்றாக அறிவீர்கள்.

ஏன் இதைச் சொல்கிறேன் என்றால், ஆற்ற வேண்டிய கடமைகளில், நேற்றைய தினம் நான் ஆற்றியிருக்க வேண்டிய கடமையை, இன்னொரு நாளைக்குக் கூடக் கூறலாம். ஏனென்றால் வாக்களித்த மக்களுக்கு நன்றி கூறுகின்ற கூட்டம் தான் அது. ஆனால், இது நாட்டுக்கு உழைத்த ஒரு பெருமகனுக்கு, மொழிக்காகப் பாடுபட்ட ஒரு பெரியவருக்கு, காலம் எல்லாம் சுதந்திரத்திற்காகவும் இந்திய நாட்டின் விடுதலைக்காகவும் அருந்தொண்டாற்றிய ஒரு அரிய மனிதருக்குச் செய்கின்ற சிறப்பு. அந்தச் சிறப்பு நிகழ்ச்சியில் கலந்து கொள்ளாமல் இருப்பது என்னுடைய வாழ்க்கை வரலாற்றிலே ஒரு பெரும் குறையாக ஆகி விடும் என்பதால் தான் இன்று இந்த நிகழ்சியிலே கலந்து கொள்கின்ற வாய்ப்பை நான் ஏற்ற்படுத்திக் கொண்டிருக்கிறேன்.

திரு. ராஜாராம் அவர்கள் சொன்னார்கள், சிலம்புச் செல்வர் அவர்கள் எப்படியெல்லாம் இந்தச் சமுதாயத்திற்கு, நாட்டிற்கு உழைத்தார் என்பதையும் சென்னை மாநகரம் நம்மிடத்திலே இன்றைக்கு இருப்பதற்குக் காரணகர்த்தாக்களில் மூலவரே அவர் தான் என்பதையும் இங்கே சுட்டிக் காட்டினார்கள். அது மாத்திரமல்ல, திருத்தணியிலே அன்றைய எல்லையை காப்பாற்றுவத்தற்காக சிலம்புச் செல்வர் அவர்களும் மறைந்த நண்பர் விநாயகம் அவர்களும் போராடியபோது, அறிஞர் அண்ணா அவர்களும், நானும் நண்பர் ராஜாராம் போன்றவர்களும் திருத்தணிக்கே சென்று அவர்களை வாழ்த்தி விட்டு வந்தோம்.

ஒரு காலத்திலே திராவிடர் இயக்கத்தை வீழ்த்த வேண்டும், திராவிடர் இயக்கத்தைத் தலையெடுக்க விடக் கூடாது என்று கங்கணம் கட்டிக் கொண்டு பணியாற்றியவர் சிலம்புச் செல்வர் ம.பொ.சி அவர்கள். இதிலே அவரை நாங்கள் எப்படி வெற்றி கொண்டோம் என்றால், அவரே எங்களைப் பரவாயில்லை என்று ஏற்றுக்கொள்கின்ற அளவிற்கு அவரை நாங்கள் வெற்றி கொண்டிருக்கிறோம். உதாரணத்திற்குச் சொல்ல வேண்டுமேயானால், பாஞ்சாலங்குறிச்சியிலே அவருக்கு மிகவும் பிரியமான மாவீரன் கட்டபொம்மனுக்கு ஒரு நினைவுச் சின்னத்தை எழுப்ப வேண்டுமென்று, பாஞ்சாலங்குறிச்சியிலே கோட்டையைப் புதுப்பித்துக் கட்டினேன். அந்த விழாவிற்கு வந்திருந்த சிலம்புச் செல்வர் அவர்கள் பேசும்போது, வள்ளுவர் கோட்டம் கட்டுவதற்கு ஏற்பாடு, பூம்புகார் கட்டுவதற்கு ஏற்பாடு, இங்கே பாஞ்சாலங்குறிச்சியை இவ்வளவு அழகான கோட்டையாக கருணாநிதி உருவாக்கியிருக்கிறார் என்று சொல்லிவிட்டு, ஒரு பாச உணர்வோடு சொன்னார். இதையெல்லாம் இருந்து பார்த்துக் கருணாநிதியை வாழ்த்துவதற்கு அண்ணா இல்லையே என்று வருத்தப்பட்டு விட்டுச் சொன்னார். அண்ணா இல்லாவிட்டாலும் கருணாநிதி அவர்களே, அண்ணா இடத்திலே நான் இருந்து உங்களை வாழ்த்துகிறேன் என்று அன்றைக்குச் சொன்னார். இன்றைக்குச் சொன்னது போல அந்தச் சொல் என்னுடைய காதுகளிலே ஒலித்துக் கொண்டிருக்கிறது.

என்றும் என் மீது ஒரு தனிப் பாசம் கொண்டவர். “கல்லக்குடி கொண்டான்” என்ற பட்டத்தை அவர்தான் திருச்சியிலே நடைபெற்ற ஒரு விழாவிலே வழங்கினார். மற்றவர்களைப் பாராட்டுவதிலே சளைக்காதவர். தமிழுக்காக உழைக்கின்ற யாராக இருந்தாலும், தமிழுக்காகப் போராடுகின்ற யாராக இருந்தாலும் அவர்களையெல்லாம் தட்டிக் கொடுத்து ஊக்கப்படுத்த வேண்டுமென்று எண்ணுகிறவர்.

அவர் எழுதிய நூல்கள் நூற்றுக்கு மேற்பட்டவை என்பதை நம்முடைய ராஜாராம் அவர்கள் இங்கே எடுத்துக் காட்டினார். அதிலே ஒரு நூல் “விடுதலைப் போரிலே தமிழகம்” என்ற நூல் என்று கருதுகிறேன். அருமை நண்பர் எம்.ஜி.ஆர் அவர்கள் காலத்திலே அது நாட்டுடைமையாக்கப்பட்டு ஒரு இலட்சம் ரூபாய் வழங்கப்பட்டது என்றும் எனக்கு நினைவிருக்கிறது. அந்தக் காலத்திலே ஒரு இலட்ச ரூபாய் என்பது பெரும் தொகை தான். ம.பொ.சி அவர்கள் எழுதிய நூல்கள் நூற்றுக்கும் மேற்பட்டவை என்ற காரணத்தால், நான் இங்கே விடுக்கப்பட்ட வேண்டுகோள் அடிப்படையில், அந்த நூல்களுக்காக இருபது இலட்ச ரூபாய் (கைதட்டல்) அரசின் சார்பாக வழங்கப்பட்டு, அந்த நூல்கள் நாட்டுடைமையாக்கப்படும் என்பதை (பலத்த கைதட்டல்) அவருடைய குடும்பத்தாருக்குச் சொல்லிக் கொள்கிறேன்.

இன்னொன்று, அவருக்குச் சிலை வைக்க வேண்டுமென்றெல்லாம் சொல்லப்பட்டது. எப்போதுமே ஒருவர் மறைந்து விட்டால், அவருக்கு சிலை வைக்கப்படும் என்று அறிவிப்பார்கள். ஆனால், மறைந்து ஐந்நூறு ஆண்டுகள் ஆனாலும் கூட சொல்வதே மறப்பதற்காகத்தான் என்ற அளவிலே மறந்து விடுவார்கள். இது நாட்டில் வழக்கமாக நடைபெற்று வருகின்ற ஒன்று. சிலம்புச் செல்வர் ம.பொ.சி அவர்களைப் பொறுத்த வரையில் நிச்சயமாக இந்த அரசின் சார்பில் அவருக்கு எதெற்காக இல்லாவிட்டாலும் தமிழகத்தின் தலைநகரைக் காப்பாற்றிக் கொடுத்த அந்த ஒரு தகைமைக்காகவாவது “தலைநகர் காத்த தமிழ்ச் செல்வர் ம.பொ.சி” என்ற சிலை அமைக்கப்படும் (பலத்த கைதட்டல்) என்ற உறுதியை நான் இங்கே தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்தியா முழுவதும் அவருடைய பெயர் பரவ வேண்டும் என்று நண்பர் ராஜாராம் இங்கே சொன்னார். அதற்காக அஞ்சல் தலையும், அந்தச் சுதந்திரப் போராட்டத் தளகர்த்தருக்கு, வருகின்ற ஆகஸ்டு 15 ஆம் தேதியன்று வெளியிடப்படும் என்பதையும் தெரிவித்து (பலத்த கைதட்டல்) இந்த அறிவிப்புகளோடு நான் என்னுடைய சிற்றுரையை நிறைவு செய்து விடை பெற்றுக் கொள்கிறேன்.

வாழ்க ம.பொ.சி யின் புகழ்.