Aug 3, 2010

பெரியார் - அண்ணா - ம.பொ.சி.


நன்றி: இளந்தமிழன், மார்ச் 2010
 
தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, சிலம்புச் செல்வர் ம.பொ.சிவஞானம் ஆகிய முப்பெரும் தலைவர்களும் தனித்தனியே அமைப்புகளை அமைத்து, தமிழர்களின் நலங்களைப் பாதுகாக்க, ஒருவரோடு ஒருவர் போட்டி போட்டுக் கொண்டு தமிழ்நாட்டையே சுதந்திரமடைவதற்கு முன்பிருந்து ஒரு கலக்குக் கலக்கியவர்களாவர்.

இம்மூன்று தலைவர்களும் படைத்தல், காத்தல், அழித்தல் ஆகிய முத்தொழிலையும் செய்தனர்.

பெரியார் பழமையின் ஆதிக்கத்தை ஒழிக்கப் போராடினார். சாதி ஒழிப்பு, கடவுள் மறுப்பு, மூட நம்பிக்கையை அழித்தல் ஆகிய பணிகளை மேற்கொண்டார். தம்மை அழிவு வேலைக்காரன் என்றும் கூறிக்கொண்டார். 

அறிஞர் அண்ணா பழமையைப் போக்கி, புதுமையை வரவேற்று, பழமைக்கும், புதுமைக்கும் பாலமாக நின்று, இயல், இசை, நாடகம், தமிழிலக்கியம், தமிழ் மொழி, தமிழ்நாடு அரசியல், பண்பாடு ஆகியவற்றில் மறுமலர்ச்சி ஏற்படுத்திக் காத்தல் தொழிலைச் செய்தார்.

சிலம்புச் செல்வர் ‘வேங்கடத்தை விட மாட்டோம், குமரியைக் கொள்ளை கொடோம்’ என்று கூறிப் போராடி எல்லைகளை மீட்டதுடன், ‘தலையைக் கொடுத்தேனும் தலைநகரைக் காப்போம்’ என்று முழங்கி, தமிழ் மொழி, தமிழ் எல்லை, தமிழ் நாடு, தமிழ்ப் பயிற்சி மொழி, தமிழ் ஆட்சி மொழி ஆகிய கொள்கைகளை முன் வைத்து 90 ஆண்டுகள் வாழ்ந்து, வாழ்நாள் முழுவதும் போராடிப் புதிய தமிழகம் படைத்தார்.

இம்மூவரில் தந்தை பெரியார் அவர்களுக்கும் பேரறிஞர் அண்ணா அவர்களுக்கும் தமிழகமெங்கனும் சிலைகள், மண்டபங்கள் நிறுவியதுடன், பல அரசு நிறுவனங்களுக்கும், நகர்களுக்கும், பல்கலைக்கழகங்களுக்கும், ஆய்வு நிறுவனங்களுக்கும், சாலைகளுக்கும் அப்பெருமக்களின் பெயர்களைச் சூட்டி கௌரவிக்கப் பெற்றுள்ளது.

ஆனால், சிலம்புச்செல்வருக்கு அத்தகைய சிறப்பை அரசு செய்யவில்லை.

புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். ஆட்சிக் காலத்தில் திருத்தணியில் மட்டும் ஒரு சிலை நிறுவி கௌரவிக்கப்பட்டது.

தமிழினத்தின் மூத்த தலைவர்களில் ஒருவரான சிலம்புச் செல்வர் ம.பொ.சியின் பெயரை நகர்கள், கல்வி நிறுவனங்கள், பல்கலைக் கழகங்கள்,சாலைகள் ஆகியவற்றுக்குச் சூட்டவில்லை என்பதுடன் தலைநகரில் கூட சிலை வைக்கப்படவில்லை.

பெரியார் அவர்களுக்கும் அண்ணா அவர்களுக்கும் கட்சி என்ற பலமான அமைப்புகள் இருக்கின்றன.

ஆனால், சிலம்புச் செல்வர் தம் வாழ்நாளிலேயே தாம் மேற்கொண்ட பணி பெரும்பாலும் முடிந்து விட்ட நிலையில் தம் கட்சியைக் கலைத்து, தம்மைத் தம் தாய்க்கட்சியான காங்கிரசில் இணைத்துக் கொண்டார்.

அதற்குக் காரணம், தம் கட்சியின் பெயரால் யாரும் பிற்காலத்தில் தவறுகள் செய்து விடக் கூடாது என்பது தான். காந்தி அடிகளும் காங்கிரசைக் கலைத்து விடவே விரும்பினார்.

1967 இல் தி.மு.க ஆட்சி அமைந்த போது, அதனைத் தீவிரமாக ஆதரித்து, ஆட்சி அமைக்க உதவியவர் ம.பொ.சி.

ம.பொ.சிக்குச் சிறப்புகள் செய்ய வேண்டும் என்று கேட்கக் கட்சி அமைப்பு எதுவும் இன்றைய நிலையில் இல்லை.

சிலம்புச் செல்வருடைய தொண்டர்கள் பலர் இன்னும் வயது முதிர்ந்த நிலையில் நம்மிடையே தமிழ்நாடெங்கும் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்.

அவர்கள் சிலம்புச் செல்வருக்குத் திருத்தணியில் அரசு சிலை வைத்தது போல், தலைநகரைக் காத்ததால் சென்னையிலும் தெற்கெல்லையைக் காக்கப் போராடியதால் கன்னியாகுமரியிலும் சிலை வைக்க வேண்டும் என்று விரும்புகிறார்கள்.

மேலும் புதிதாக அமைக்கப்படுகிற பல்கலைக்கழகம், நகர்கள், முக்கியமான சாலைகள் முதலியவற்றிற்கு அப்பெயரைச் சூட்டுவதுடன், தலைநகரில் மணிமண்டபம் ஒன்றை அமைக்க வேண்டும் என்றும் விரும்புகிறார்கள்.

1995 அக்டோபர் 3 இல் சிலம்புச் செல்வர் மறைந்தது முதல் அவருடைய தொண்டர்கள் ‘தலையைக் கொடுத்தேனும் தலைநகரைக் காப்போம்’ என்று சிலம்புச் செல்வர் முழங்கிய இடமான சென்னை மாநகராட்சி அமைந்துள்ள ‘ரிப்பன் பில்டிங்’ கட்டடத்தில் ம. பொ.சிக்குச் சிலை வைக்க வேண்டும் என்று கோரி வருகின்றனர்.

நூற்றாண்டு நிறைவின் போது 1.7.2006 இல் சிலம்புச் செல்வர் படத்தைத் திறந்து வைத்து தமிழ்நாடு முதலமைச்சர் மாண்புமிகு டாக்டர் கலைஞர் மு. கருணாநிதி அவர்கள் உரையாற்றுகையில், ‘தலைநகர் காத்த தமிழ்ச் செல்வர் ம.பொ.சி’ என்ற சிலை தலைநகரில் அமைக்கப்படும் என்று சொல்லி, அவர்களுக்கு மனமகிழ்ச்சியை விளைவித்தார்.

நான் காண்டுகள் கடந்து விட்டது.

செம்மொழி மாநாடு நடைபெறவிருக்கும் தருணத்தில், “தலைநகர் காத்த தமிழ்ச் செல்வருக்கு” சிலை அமைக்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசையும், அதன் முதல்வரையும் கனிவுடன் கேட்டுக் கொள்கிறோம்.

அண்மையில் 28.2.2010 அன்று சிலம்புச் செல்வர் மூத்த மருமகன் சங்கர் மறைந்த நிகழ்ச்சிக்குச் சென்றிருந்த போது அங்கு வந்த சிலர், ம.பொ.சி. அவர்களுக்கு அவர் வாழ்ந்த இருசப்பக் கிராமணித் தெருமுனையில் அரசு சிலை வைக்கப் போவதாகப் பேசிக் கொண்டார்கள்.

அது சங்கடமான இடம்.

அதைத் தவிர போக்குவரத்து நெருக்கடியுள்ள இடம்.

அதை விட சிலம்புச் செல்வர் தம் வாழ்நாளில், மாலை நேரத்தில், தமக்குக் கூட்டம், நிகழ்ச்சி இல்லாத நாட்களில் சென்னையில் ‘ஐஸ் அவுஸ்’ என்று அழைக்கப்படுகிற விவேகானந்தர் நினைவு இல்லத்தின் நேர் எதிரே அமைந்துள்ள கடற்கரை மணல் பரப்பில் அமர்ந்து நீண்ட நேரம் தம் தோழர்களிடம் பேசுவது வழக்கம்.

அரசியல் திட்டங்கள் பல உருவான இடம் அது.

அங்குள்ள கடற்கரை நடைபாதையில் சிலம்புச் செல்வருக்குச் சிலை அமைப்பது பொருத்தமாக இருக்கும் என்று தோன்றுகிறது.

பெரியவர்கள் இது பற்றி சிந்திக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்.