Aug 3, 2010

தமிழ்த்தேசியச் செம்மல் ம.பொ.சி.அவர்களின் இருநூல்கள் அறிமுகம்

நன்றி: மண்மொழி நவம்பர் - டிசம்பர் 2008

மறைந்த மாமனிதர் தமிழ்த் தேசியச் செம்மல் ம.பொ. சி.யின் கருத்து களை மண்மொழி தொடர்ந்து அறிமுகம் செய்யும் என்று கடந்த இதழில் குறிப்பிட்டுஆகஸ்டு 15’ குறித்த அவரது சிந்தனைகளை அப்போது வெளிப்படுத்தி யிருந்தோம். அதற்கு பல தரப்பிலிருந்தும் பாராட்டுகள் தெரிவித் திருந்தனர். ம.பொ.சி. இப்படியெல்லாம் சொல்லி யிருக்கிறாரா, இவ்வளவு காலம் இதுவெல்லாம் தெரியாமல் போனதே என்று குறைப்பட்டுக் கொண்டார்கள். அந்த வரிசையில் அடுத்து மொழி குறித்த ம.பொ.சி.யின் சிந்தனைகளை, அதுகுறித்து அவர் எழுதிய இரு நூல்களைத் தற்போது அறிமுகப் படுத்துகிறோம்.

1. ஆங்கிலம் வளர்த்த மூடநம்பிக்கைகள்

அதில் அவர் குறிப்பிடுகிறார் : வாழ்வது ஆங்கிலத் தாலா ? : ஆங்கிலத்தை யொட்டிய மூட நம்பிக்கை படித்து பட்டம் பெற்றவர் களிலிருந்து சமுதாயத்தின் அடித்தளத் திலுள்ள பாட்டாளி மக்கள் வரை பரவியிருக்கிறது. ஒரு பொறி யாளரோ, அலோபதி மருத்துவரோ, தாம் தம்முடைய தொழிலின் மூலம் வாழ்வாங்கு வாழ்வதற்கு ஆங்கில மொழிதான் காரணம் என்று நம்பி, அதனிடம் பெருமதிப்பு வைத்திருக்கிறார். இதனை மூட நம்பிக்கை என்று சொல் லாமல் வேறென்ன சொல்வது?”

ஜெர்மனி, பிரான்சு, இத்தாலி, ருஷ்யா, ஜப்பான் முதலிய விஞ் ஞானக் கலைகளில் முன்னணியில் உள்ள நாடுகளில் எல்லாம் பல்கலைக் கழகப் பாடங்களுக்கு அந்தந்த நாட்டு மொழியே போதனா மொழியாக இருந்து வருகிறதென்ற உண்மை நம் நாட்டுப் பட்டதாரிகளின் நினைவுக்கு வருவதில்லை. நாம் நினைவூட்டினாலும் அவர்கள் அதனை நெஞ்சில் கொள்வதில்லை.” “ரிக்ஷா இழுக்கும் தொழிலாளி கூட தான் ஆங்கிலம் படிக்காத தனால்தான் அந்தத் தொழிலைச் செய்ய வேண்டிய தாழ் நிலைக்கு வந்ததாக எண்ணுகின்றார். படிக்காததனால் இந்த நிலையில் இருக்கிறோம் என்ற உண்மை அந்தத் தொழிலாளிக்குப் படுவதில்லை. ஆம்; அந்த அளவுக்குப் பாமரரிடமும் ஆங்கில மொழியின் பெயரால் மூட நம்பிக்கை வளர்க்கப் பட்டிருக்கிறது.

போலி வாதம் : தமிழ் இலக்கியத்திற்கான ஆய்வுக் கட்டுரை களைக் கூட ஆங்கிலத்தில் கொடுக்க வேண்டுமென்றிருந்த சட்டமல்லாத சட்டத்தை நான் சிண்டிகேட் கூட்டத்தில் எதிர்த்தபோது, சிண்டிகேட் உறுப்பினரில் சிலர் ஆங்கிலத்திற்காகப் பரிந்து வாதாடினார்கள். தமிழ் இலக்கியத்திற்கான ஆய்வுக் கட்டுரையானாலும், அது ஆங்கிலத்தில் தரப்பட்டு அதன் பின் நூல் வடிவம் பெற்றால், உலகெலாம் பரவும்என்று என்னிடம் வாதாடினார்கள். மற்றும்தமிழ் இலக்கிய எம்.ஏ.க்களுக்கு ஆங்கில ஞானம் வளரவும் இந்த முறை உதவியாக இருக்கும்என்றும் சொன்னார்கள். இது போலி வாதம்.

உண்மையில், அதுவரை ஆங்கிலத்தில் எழுதப்பட்ட பி.எச்.டி.ஆய்வுக் கட்டுரைகளில் பத்துக்கு ஒன்றுகூட அச்சு வாகனமேறி, நூல் வடிவம் பெற்றதில்லை. இதைவிடவும் வேடிக்கையான விஷயமென்ன வென்றால், தமிழ் எம்.ஏ. பட்டதாரிகளால் தரப்படும் பி.எச்.டி.க்கான ஆங்கிலக் கட்டுரைகளை அவர்களே எழுதாமல், தாங்கள் தமிழில் எழுதி யதை வேறொருவருக்குப் பணம் தந்து ஆங்கிலத்தில் மொழி பெயர்த்துக் கொடுத்து வந்தார்கள் என்பதாகும். ஆனால், கட்டுரையைத் தருபவரே ஆங்கிலத்தில் எழுதியதாக நம்பும் ஒரு மூடநம்பிக்கை பல்கலைக் கழகத்திற்கு இருந்து வந்தது. இந்த சிதம்பர இரகசியத்தை நான் சிண்டிகேட் கூட்டத்தில் எடுத்துச் சொன்னபோது, ஆங்கிலத்திற்காக வாதாடிய உறுப்பினர்கள் வாய் மூடி மௌனம் சாதித்தார்கள்.எனக் குறிப்பிடுகிறார்.
இப்படி பல அளப்பரிய சிந்தனைகளை, கருத்துகளை இந்நூலில் அவர் தெரிவித்திருக்கிறார்.

2. ஆங்கிலமா? தமிழா?

இதில் இவர் குறிப்பிடுகிறார் : பல்கலைக் கழகப் பாடங்களைப் பயிற்றுவிப்பதற்கான மொழி தமிழா, ஆங்கிலமா?” என்று விவாதிக்கப்பட்டு வரு கின்றது. ஆங்கில நாட்டிலல்ல ; நம் தாயகமான தமிழ் நாட்டில்தான். இதைவிட மானக்கேடு தமிழருக்கு வேறு என்ன இருக்க முடியும்? இது போன்ற ஒரு விவாதம், உரிமை வாழ்வு நடத்தும் எந்த ஒரு நாட்டிலும் நடந்ததாக வரலாறு சொல்ல வில்லை.

இந்தியாவிலும் வேங்கடத்துக்கும் வடக்கேயுள்ள எந்த ஒரு மாநிலத்திலும் இத்தகையதொரு விவாதப் போர் நிகழவில்லை. துரதிருஷ்டம் பிடித்த இந்தத் தமிழ் நாட்டில்தான் பயிற்சி மொழி, தமிழா? ஆங்கிலமா?” என்று விவாதிக்கப் படுகிறது. இங்கு, பல்கலைக் கழகச் செனட் சபையிலோ, மக்கள் மன்றமான சட்டசபையிலோ மட்டுமல்லாமல், வீதிகளிலே போடும் மேடைகளிலேயும் விவாதம் நடைபெற வேண்டிய அளவுக்கு விஷயம் விஷத் தன்மை பெற்றுவிட்டது!.
கால் சட்டைக்குள்ளே புகுந்த எலிபோல ! : காந்தியடிகள் வாழ்ந்த காலத்தில் தாய்மொழிக்கு எதிராகப் பரங்கி மொழிக்குப் பல்லாண்டு பாடும் கூட்டம் காங்கிரசுக்கு வெளியேதானிருந்தது. இன்றோ, அந்தக் கூட்டம் காங்கிரஸ் கூடாரத்திற்குள்ளேயும் புகுந்துவிட்டது, கால் சட்டைக்குள்ளே புகுந்த எலிபோல ! தாய் மொழிக்கு எதிராக ஆங்கில மொழியை ஆதரிப்பது பாவச் செயல்என்கிறார் காந்தியடிகள்.

நம்முடைய இளைஞர்களுக்குக் கல்வியளிக்கும் பொறுப்பு டையவர்கள் சற்று மனம் வைத்துச் சிந்தித்துப் பார்த்தால், குழந்தையின் உடல் வளர்ச்சிக்குத் தாய்ப்பால் எப்படியோ, அப்படி மனிதன் மன வளர்ச் சிக்குத் தாய்மொழியே இயற்கையானது என்பதை உணர்வார்கள். வேறு எப்படி இருக்க முடியும்? குழந்தை, தன் முதல் பாடத்தைக் கற்பது தாயிட மிருந்துதானே, குழந்தைகளின் உள வளர்ச்சிக்குத் தாய் மொழி யல்லாத வேறொரு மொழியை அவர்கள்மீது சுமத்துவது தாய் நாட்டிற்குச் செய்யும் பெரிய பாவம் என்றே கருதுகின்றேன்இதுவும் ஸ்ரீமத் நாராயண் அகர்வால் எழுதிய நூலுக்குக் காந்தியடிகள் தந்துள்ள முன்னுரையின் பகுதியாகும்.

இப்படி தாய்மொழிக் கல்வி - தமிழ்வழிக் கல்வியின் பால் உறுதியான நம்பிக்கையோடும் அதுசார்ந்த பல எடுத்துக் காட்டுகளோடும், அதற்காகத் தொடர்ந்து வாதாடி வந்திருக்கிறார் ம.பொ.சி. இந்தித் திணிப்பை எதிர்க்க ஆங்கிலமே கேடயம் என புரட்டு வாதம் பேசி ஆங்கிலத்திற்குத் துணை போய் தமிழுக்குத் துரோகம் செய்த, தற்போதும் செய்து வருகிற திராவிட இயக்கக் கட்சிகளுக்கு மாற்றான இவரது சிந்தனை கவனத்தில் இருக்கத் தக்கது. மீண்டும் இதை உணர்ச்சி வசப்பட்டுத் தவறாகப் புரிந்து கொண்டு ஆங்கிலமே தேவையில்லை என ஆங்கிலத்துக்கு எதிராகப் பேசிக் கொண்டிருக்கக் கூடாது. ஆங்கிலம் தெரிந்தால்தான் அறிவாளி என்ற மோகத்தை விடுத்து படிப்பதைத் தமிழ் வழியில் படித்து பிறகு கூடுதலாக எத்தனை மொழிகள் வேண்டுமானாலும் மொழிக் கல்வியாக கற்றுக் கொள்ளலாம் என்கிற வகையிலேயே புரிந்து கொள்ள வேண்டும். அந்த வகையில் தமிழ் உணர்வாளர்கள் அனைவரும் படித்துத் தெரிய வேண்டிய நூல்கள் இவை இரண்டும்.

முதல் நூல் : பக். 96, விலை ரூ. 20/-
இரண்டாவது நூல் : பக். 112, விலை ரூ. 25/-
வெளியீடு : பூங்கொடி பதிப்பகம்,
14, சித்திரைக் குளம் மேற்கு தெரு, மயிலாப்பூர், சென்னை - 600 004.