Aug 18, 2010

முழுமையான தமிழ்த் தலைவர்


முதுபெரும் பத்திரிகையாளர் அமரர் எ. மயிலை நாதன்(1986)

தமிழகத் தேசியத் தலைவர்களில் இன்றைக்கு நம்மிடையே எடுத்துக்காட்டாக விளங்கக்கூடிய ஒரே தலைவர் சிலம்புச் செல்வர் டாக்டர் ம.பொ.சி அவர்கள் தாம் என்பது நம் கருத்து. ஏனெனில், ஒரு தமிழர் தலைவருக்கு எத்தனை விதமான தகுதிகள் தேவையோ, அத்தனைத் தகுதிகளும் சிலம்புச் செல்வர் பெற்றிருக்கிறார்.
ஒரு சாதாரண குடும்பத்தில் பிறந்த ஒருவர் அத்தனைத் தகுதிகளையும் பெற்றுத் திகழ்வது அரிது. மிகப் பெரிய செல்வந்தர் குடும்பத்தில் பிறந்தவராயினும், சிலம்புச் செல்வர் பெற்றுள்ள தகுதிகளை முயன்று பெறுவது இயலாத காரியம்.
சிலம்புச் செல்வருக்கு முன்னால் வீரர் வ. உ. சி., தமிழ்த் தென்றல்       திரு. வி. க., என்பதாக ஓரிருவர் அத்தகைய தகுதிகளுடன் விளங்கியதாக நாம் கருதினாலும் எல்லாரையும் விட சிலம்புச் செல்வரின் பிரதிபிம்பம் நம் மனத்தில் சற்றுப் பெரிதாக உயர்ந்து நிற்பதற்கு நியாயமான காரணங்கள் இல்லாமல் இல்லை.
அவர் அரசியலில் பிரவேசித்த ஆரம்ப கால முதல் இன்று வரை தமிழர்களின் நலவுரிமைகளுக்காகச் செய்த முயற்சிகளும், நடத்திய போராட்டங்களும், ஈட்டிய சாதனைகளும் தான் அதற்குக் காரணங்களாக இருக்க வேண்டும்.
விடுதலைப் போராட்டத்தில் சிறை சென்று தியாகங்கள் புரிந்ததோடு தமது கடமை தீர்ந்தது என்று அவர் எண்ணவில்லை. அதற்குப் பிறகும் தம் முன் மிகப்பெரிய கடமைகள் உள்ளன என்பதை உணர்ந்து, அதற்காகத் திட்டமிட்டுப் போராடிப் பல அரிய சாதனைகள் புரிந்துள்ளார்.
அதை விவரித்தால் அது தமிழக வரலாறாகவே திகழும்.
தமிழினம்
தமிழ் மொழி
தமிழக எல்லை
தலைநகர் சென்னை
மாநில சுயாட்சி
வ.உ.சி
கட்டபொம்மன்
சிலப்பதிகாரம்
பாரதியார்
ஆகிய சொற்களை நினைக்கிற போதெல்லாம், நமக்கு உடனே சிலம்புச் செல்வரின் உருவம் தான் முதலில் மனக் கண் முன்பு தெரிகிறது !
அத்தனைச் சொற்களும் சிலம்புச் செல்வரின் வாழ்க்கை வரலாற்றை நினைவூட்டுகின்ற சொற்களாக ஆகி விட்டன என்று சொன்னால், மிகைப்படுத்திச் சொல்லுவதாக எவரும் கூற முடியாது.
ஒரு தலைவர் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு அவர் மிகச் சிறந்த இலக்கணமாகவே இருந்து வருகிறார். அவர் சிறையில் இருந்தாலும் சரி, வீட்டில் இருந்தாலும் சரி, காலத்தைப் பொன் செய்யும் முறையில் இன்னின்ன காலத்தில் இன்னின்ன வேலைகள் செய்ய வேண்டும் என்று முறைப்படுத்திக் கொண்டு நெறியோடு வாழ்ந்து வருகிறார்.
அவர் இன்னும் இளமையுடன் விளங்குவதற்கு நெறியுள்ள வாழ்க்கை முறைகளைக் கடைப்பிடித்து வருவதே காரணமாகும்.
எந்தப் பொருள் குறித்து அவரைப் பேசச் சொன்னாலும், பேசக் கூடிய ஆற்றல் அவரிடம் நிரம்பியுள்ளது. எழுதுவது போலவே பேசவும் அவரால் முடிகிறது. பெயருக்கேற்ற அத்தகைய ‘ஞானம்’ பெற்றிருப்பது வியப்பிற்குரியது. இயற்கைஅவருக்கு அளித்துள்ள வரம் அது.

அவருக்குள்ள நினைவாற்றல் அபாரமானது. மயிலை இலக்கிய வட்டத்தின் சார்பில் பேராசிரியர் தி. வ. மெய்கண்டார் ஏற்பாடு செய்த சிலம்புச் செல்வரின் சிலப்பதிகாரச் சொற்பொழிவுகளையும், பாரதியார் பற்றிய தொடர் சொற்பொழிவுகளையும் கேட்டவர்கள் இதனை நன்கு உணருவார்கள். மூல நூல், விரிவுரை, குறிப்புகள் எதுவுமே இல்லாமல் அவர் ஆற்றிய ஆராய்ச்சிச் சொற்ற்பொழிவுகளைக் கேட்ட புலவர் பெருமக்கள் அனைவரும் வியப்படைந்தார்கள்.

தமிழ் இலக்கியங்களில் அவருக்குள்ள புலமை அபாரமானது. தொல்காப்பியத்திலிருந்து பாரதி பாடல்கள் வரை அவர் ஆய்ந்தறியாத நூல்கள் ஏதாவது உண்டா என்பது சந்தேகமே.

அவருடைய சொற்பொழிவுக்கு இடையிடையே சங்க நூல்கள், திருக்குறள், சிலப்பதிகாரம், கம்ப ராமாயணம், பெரிய புராணம், வில்லி பாரதம், தேவாரம், திருவாசகம், திருப்புகழ், திருப்பாவை, திருவெம்பாவை, திவ்வியப் பிரபந்தங்கள், பாரதி பாடல்கள் ஆகிய தெய்வத் தமிழ் நூல்களில் ஏதாவது ஒன்றை எடுத்துக் கையாளாத நாட்களே இல்லை எனலாம்.

அவர் எந்தப் பிரச்சினையைப் பற்றி எழுதினாலும் பேசினாலும் அவரது அணுகுமுறை அலாதியாகவே இருக்கிறது. அவரது சிந்தனைத் திறனுக்கு அதுவே எடுத்துக்காட்டு. அவர் பெற்றுள்ள சக்திக்கு அவரது சிந்தனைத் திறன்தான் ஊற்றுக்கண்ணாக இருந்து வருகிறது.

அவர் ஒவ்வொரு நாளும் படிக்கிறாரென்பது ஒரு பெரிய விஷயமல்ல; அதற்கென்று நேரத்தை ஒதுக்கி கொள்வது தான் பெரிய விஷயம் - அவரிடமுள்ள விவேகத்திற்கு அவரது நூலறிவுதான் மூலமாக இருக்கிறது.

இன்றைக்கும் ஓய்வறியாமல் அவர் உழைத்து வருகிறார். அந்த ஓய்வறியா உழைப்புதான் அவரது வெற்றிகளுக்கெல்லாம் விலையாக அமைந்ததோ, என்னவோ !

அரிதான இன்னொரு குணமும் அவரிடம் உண்டு. இவர் தமது கடந்த கால துர்ப்பாக்கியங்களை நினைவில் வைத்திருக்கிறார். அவர் மன வலிமை பெற்றிருப்பதற்கு அதுவே காரணமாகும்.

அவருடன் பழகவும் அவரது பாராட்டை பெறவும் பேறு வேண்டும். அத்தகைய பேறு பெற்றவர்களில் நானும் ஒருவன்.

கடந்த முப்பதாண்டுகளாக அவருக்குத் தொடர்ச்சியாகப் பிறந்தநாள் விழாக்கள் கொண்டாடப் பெற்று வருகின்றது. அண்ணாமலை மன்றத்தில் அவரது 50- ஆவது பிறந்த தின விழாவில் டாக்டர் பி. எத்திராஜுலு நாயுடு அவர்களுடன் சென்று கண்டு களித்தேன். இன்று வரை அவருக்காக நடந்த பல விழாக்களில் பங்கு பெறும் பேற்றினையும் பெற்றேன்.

‘தமிழ்த் தாத்தா’ உ. வே. சாமிநாதைய்யருக்குச் சென்னைப் பல்கலைக்கழகம் டாக்டர் பட்டம் வழங்கியது. அதே பல்கலைக்கழகம் சிலம்புச் செல்வருக்கும் வழங்கியது - சாமிநாதையர் சிலையை இம்மாநில முதலமைச்சர் திறந்து வைத்தது போல, சிலம்புச் செல்வர் சிலையையும் இம்மாநில முதல்வர்தான் திருத்தணியில் திறந்து வைத்தார். இரண்டு நிகழ்சிகளையும் கண்டு களித்த பாக்கியம் எனக்கு உண்டு.

அவரைப் பற்றிச் சுருக்கமாகச் சொல்ல வேண்டுமானால், “ தமிழ்த் தலைவருக்குரிய கடமையை முழுமையாக நிறைவேற்றியவர் “ என்று கூறி விட முடியும். அவர் மேலும் பல்லாண்டுகள் வாழ்ந்து தமிழ் மக்களுக்கு வழி காட்ட வேண்டும் என்பதே என் பிரார்த்தனையாகும்.

நன்றி: இளந்தமிழன், மார்ச் 2010