Sep 8, 2010

முகங்கள்: இலக்கியத்திற்கு வாரிசு உண்டு! அரசியலுக்கு...?

தமிழகத்தில் வட்ட, மாவட்ட, மாநில அரசியலில் வாரிசு அரசியல் இல்லாத இடம் எது? என்று கேட்குமளவுக்கு எல்லாக் கட்சிகளிலும் உள்ள எல்லாப் பெரும்,சிறு, குறு தலைவர்களின் வாரிசுகள் முக்கியத்துவம் பெற்று வருகிறார்கள். 

தலைவர்கள், தலைவர்களின் மகன்கள்,மனைவிகள், மகள்கள், பேரன், பேத்திகள், அண்ணன், தம்பிகள், மச்சினன்கள் என்று அரசியல் வாரிசு வரிசையில் பலர் அடித்துப் பிடித்துக் கொண்டு நிற்கிறார்கள். இதில் நீ வாரிசா? நான் வாரிசா? என்ற கடுமையான போட்டி வேறு.

தமிழக அரசியலில் முக்கிய இடம் பெற்றிருந்த தலைவர்களில் ஒருவர் ம.பொ.சிவஞானம். தேசியத்தையும், தமிழகத்தையும் இருகண்களாகக் கருதிய சிறப்பு அவருக்குண்டு. ஆனால் அவருடைய அரசியல் வாரிசுகள் என்று யாருமே இல்லை.

ம.பொ.சி.யின் மகன் வழிப்பேரன் திருஞானம் சென்னை தண்டையார்பேட்டையில் டிபார்ட்மென்டல் ஸ்டோர் நடத்தி வருகிறார். இன்னொரு பேரன் ஞானசிவமும் தொழில்துறையில் இருக்கிறார். பேத்தி தி.பரமேஸ்வரி காஞ்சிபுரத்திற்கு அருகில் உள்ள மானாம்பதி என்ற ஊரில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் தமிழாசிரியையாகப் பணிபுரிகிறார்.
ம.பொ.சி.யின் பேரன் திருஞானத்திடமும், பேத்தி தி.பரமேஸ்வரியிடமும் பேசினோம்...

முதலில் திருஞானம்...

"" தாத்தாவுக்கு இரண்டு மகள்கள். ஒரு மகன். என் அப்பா திருநாவுக்கரசர் மகன். என் அத்தைகள் கண்ணகி, மாதவி இருவரும் மகள்கள். என் தாத்தா இருக்கும் காலத்திலேயே என் தந்தை தீவிர அரசியலில் ஈடுபடவில்லை. தாத்தா நடத்தி வந்த "செங்கோல்' இதழின் ஆசிரியராக இருந்தார். மின்வாரியத்தில் காண்ட்ராக்டராக வேலைகள் எடுத்துச் செய்து கொண்டிருந்தார்.

வீட்டில் தாத்தா நிறையவே அரசியல் பேசுவார். ஆனால் யாரும் அரசியலில் ஈடுபட வேண்டும் என்று வற்புறுத்தமாட்டார்.

எனக்கு நினைவு தெரியும் போது தாத்தா மேல்சபைத் தலைவராக இருந்தார். வீட்டில் இலக்கியம் பற்றிய பேச்சுதான் அதிகமாக இருக்கும்.

என் தாத்தாவுக்கு தன்னைப் போலத் தன் குடும்பத்தில் உள்ளவர்கள் அரசியலில் ஈடுபாடு காட்டவில்லையே என்ற வருத்தம் இருந்ததாகச் சொல்ல முடியாது. ஆனால் இலக்கியத்தில் தனக்கு வாரிசு வேண்டும் என்று நினைத்தார். என் அக்கா பரமேஸ்வரி இலக்கியத்தில் பெரிய ஆளாக வருவார் என்ற நம்பிக்கை அவருக்கு இருந்தது.

இயல்பாகவே வாரிசு அரசியலில் அவருக்கு ஆர்வம் இல்லை. ஏனென்றால் அவர் காந்திஜியால் ஈர்க்கப்பட்டு அரசியலுக்கு வந்தார்.

காந்திதான் அவருக்கு முன்னோடி. எளிமை, ஒழுக்கம் என்பது அவருக்கு முக்கியம்.

அதுபோல சாதி உணர்ச்சியும் அவருக்கு இல்லை. ஆனால் "கிராமணி குலம்' என்ற சாதி அடிப்படையிலான பத்திரிகையை ஆரம்பகாலத்தில் நடத்தி வந்தார். அடித்தட்டில் உள்ள மக்கள் முன்னேற வேண்டும் என்ற நோக்கத்தில் அதை நடத்தி வந்தார்.

காங்கிரசில் இருக்கும்போது கள்ளுக்கடை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டார். இத்தனைக்கும் என் தாத்தாவின் தாய் மாமா, உறவினர்கள் நிறையப்பேர் கள் இறக்கும் தொழில் செய்து வந்தனர். இதனால் பல உறவினர்களின் பகையைத் தேடிக் கொண்டார். அவரைப் பொறுத்தளவில் தனது சொந்தக்காரர்கள் எல்லாரும் கள் இறக்கும் தொழிலை விட்டுவிட்டுப் படித்து முன்னேற வேண்டும் என்று நினைத்தார்.

தாத்தாவின் சிறப்பம்சம் என்று சொல்ல வேண்டும் என்றால் தேசிய ஒருமைப்பாட்டுக்கு முக்கியத்துவம் கொடுத்த அதே வேளையில், மாநில உரிமைகளுக்கும் முக்கியத்துவம் கொடுத்ததே.

காங்கிரசில் இருக்கும்போது தமிழர்களின் இலக்கியம், கலை, பண்பாட்டுக்கு முக்கியத்துவம் கொடுத்து தமிழரசுக் கழகத்தைத் தொடங்கினார். ஆனால் அதைக் கட்சியாக நடத்தவில்லை.

இன்று வாரிசு அரசியல் முக்கியத்துவம் பெற்று வருகிறது. இதற்குக் காரணம், இப்போது அரசியல் என்றால் மக்களுக்குச் சேவை செய்வது என்பது இல்லாமற் போய்விட்டது. லாபம் கருதி அரசியலில் ஈடுபடுபவர்கள் அதிகமாகிவிட்டார்கள். அதனால் அரசியயலைத் தொழில் போலக் கருதி வாரிசுகளை அரசியலில் திணிக்கிறார்கள்.

தாத்தா மட்டுமில்லை, தாத்தா காலத்தில் இருந்த ஜீவானந்தம், காமராஜர், அண்ணா, ராஜாஜி போன்ற தலைவர்கள் எல்லாருமே மக்களுக்குச் சேவை செய்வதையே முக்கியமாகக் கருதினார்கள்'' என்றார் திருஞானம்.

ம.பொ.சியின் பேத்தி தி.பரமேஸ்வரி கவிஞர். "எனக்கான வெளிச்சம்' என்ற கவிதைத் தொகுதியை வெளியிட்டுள்ளார். "ம.பொ.சி. பார்வையில் பாரதி' என்ற தலைப்பில்தான் தனது முனைவர் பட்டத்துக்கு ஆய்வு செய்திருக்கிறார். தனது தாத்தா ம.பொ.சி., செங்கோல் இதழில் எழுதியவற்றைத் தொகுத்து " சிலப்பதிகார விளக்கத் தெளிவுரை' என்ற நூலை தனது தம்பிகள் நடத்தும் அன்னை சிவகாமி பதிப்பகத்தின் மூலம் பதிப்பித்திருக்கிறார். பல்வேறு இதழ்களிலும், வலைப் பதிவுகளிலும் தனது படைப்புகளை வெளியிட்டு வருகிறார்.

பரமேஸ்வரி தாத்தாவுடனான தனது நினைவுகளை நம்மிடம் பகிர்ந்து கொண்டார்.

""என்னுடைய தாத்தாவுக்கு நான் இலக்கியத்தில் ஏதாவது சாதிப்பேன் என்ற நம்பிக்கை இருந்தது. அவர் சேகரித்து வைத்திருந்த புத்தகங்கள் எல்லாம் எனக்குத்தான் என்பார். அந்தச் சொத்து உனக்குத்தான் என்று புத்தகங்களைக் காட்டி அடிக்கடி என்னிடம் சொல்வார்.

என் தாத்தாவிடம் இதைப் பேச வேண்டும், இதைப் பேசக் கூடாது என்ற கட்டுப்பாடுகள் எவையும் எனக்கு இருந்ததில்லை. பெரியவர்களிடம் இதையெல்லாம் பேசக் கூடாது என்று அவர் ஒருபோதும் சொன்னதில்லை.

நான் 9 ஆம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தபோது அவர் பேசுகிற கூட்டங்களுக்கெல்லாம் என்னையும் அழைத்துக் கொண்டு போவார். கூட்டம் முடிந்து திரும்பி வரும் போது அவருடைய நெருங்கிய நண்பர்களான டி.கே.சண்முகம் போன்றவர்களும் கூடவே காரில் வருவார்கள். கூட்டத்தில் தான் பேசியதைப் பற்றி அவர்களிடம் கருத்துக் கேட்பார். அப்போது சிறு பெண்ணான என்னிடமும் கருத்துக் கேட்பார். நான் சொல்வதை மிகக் கவனமாகக் காது கொடுத்துக் கேட்டுக் கொள்வார்.

சென்னை விவேகானந்தர் இல்லத்திற்கு அருகில் உள்ள கடற்கரையில் இலக்கியக் கூட்டங்கள் நடக்கும். நானும் தாத்தாவுடன் போய் அந்தக் கூட்டத்தில் பேசுபவற்றைக் கேட்டிருக்கிறேன்.

தாத்தாவைப் பொறுத்தளவில் இலக்கியத்திற்கும், அரசியலுக்கும் சம முக்கியத்துவம் கொடுத்தார். இன்னும் சொல்லப் போனால் இலக்கியத்துக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்தார்.

தனது மகன் - என்னுடைய அப்பா - இறந்தபோது அதற்காக ரொம்பவும் கவலைப்பட்ட அவர் அப்போது, "இலக்கியத்தில் புத்திரசோகம்' என்ற புத்தகத்தை எழுதினார். இலக்கியங்களில், குறிப்பாக, கம்பராமாயணத்தில் புத்திரசோகம் எப்படி விவரிக்கப்பட்டிருக்கிறது என்று ஆராய்ச்சி செய்து அந்தப் புத்தகத்தை எழுதினார். தனது சொந்த வாழ்க்கையில் நிகழும் சோகங்களைக் கூட தமிழ் இலக்கியங்களின் கண்கொண்டு பார்க்கும் பார்வை அவருக்கிருந்தது.

அரசியலில் வாரிசு தனக்கு வேண்டும் என்ற எண்ணமே அவருக்குக் கிடையாது.

நாங்கள் அவருடைய பெயரைத் தேவையில்லாமல் எங்கேயும் சொன்னது கூடக் கிடையாது. நான் கல்லூரியில் சேர்வதற்கோ, வேலையில் சேர்வதற்கோ அவருடைய பெயரைப் பயன்படுத்தியது இல்லை. எல்லாமே என்னுடைய சொந்த முயற்சிகளால்தான் கிடைத்தன. அதைத்தான் அவரும் விரும்பினார். அவரும் தனது சொந்த முயற்சியினால்தான் வாழ்க்கையின் மிக அடித்தட்டில் இருந்து முன்னேறினார். அதைத்தான் தனது பிள்ளைகளிடமும், பேரன், பேத்திகளிடமும் எதிர்பார்த்தார்.

அதனால்தான் வாரிசு அடிப்படையில் உழைப்பின்றிக் கிடைக்கும் எளிதாகக் கிடைக்கும் எதையும் அவரும் விரும்பவில்லை. நாங்களும் விரும்பவில்லை'' என்றார் பரமேஸ்வரி.
நன்றி: தினமணி, ந. ஜீவா. (29.08.10)

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.