Sep 15, 2010

ம. பொ. சி.

பள்ளிப் பருவத்திலேயே அச்சுக் கோர்க்கும் தொழிலாளியாகத் தன் வாழ்க்கையைத் தொடங்கி, தன் சொந்த முயற்சியால் தமிழ் இலக்கியங்களைக் கசடறக் கற்று, தமிழுக்காகத் தன் வாழ்வை அர்ப்பணித்து, இன்று நூற்றாண்டு விழாக்காணும் பெருந்தகையாளர் சிலம்புச் செல்வர் என்று பாராட்டப் பட்டவர். தமிழ் நாட்டின் மேலவைத் தலைவராக இருந்து சரித்திரம் படைத்தவர். இத்தகைய பெருமைகளுக்கெல்லாம் சொந்தக்காரர்தான் ம.பொ.சிவஞானம்.

ம.பொ.சி. என்று தமிழர்களால் செல்லமாய் அழைக்கப்படும் ம.பொ.சிவஞானம் 1906 ஆம் ஆண்டு சூன் மாதம் 26 ஆம் நாள் சென்னையின் மையப்பகுதியான ஆயிரம் விளக்குப் பகுதியில் பிறந்தார். ஞானப்பிரகாசம் என்ற இயற்பெயர் கொண்ட இவரின் தாய் தந்தையர் பொன்னுசாமி மற்றும் சிவகாமி ஆவார். மிகுந்த வறுமையில் இவரது குடும்பம் உழன்றதால் இவரால் பள்ளிப் படிப்பைக்கூடப் படிக்க முடியவில்லை. இளமையிலேயே அச்சகத்தில் அச்சுக் கோர்க்கும் தொழிலாளியாகத் தன் வாழ்வினைத் தொடங்கினார். சொந்த முயற்சியால்தான் இலக்கியங்கள் பலவற்றைப் பாங்குடன் கற்றார். தாயின் மீது மிகுந்த பாசம் கொண்டிருந்த இவர் இயற்பெயரையே மாற்றி தாயின் பெயரின் முதல் பகுதியையும், தன் பெயரின் முதல் பகுதியையும் இணைத்துச் சிவஞானம் என்றே அழைக்கப்பட்டார்.

எழுத்தில் தெளிவான நடை, கூர்த்த சிந்தனை தமிழின் மீது அளப்பரிய பற்று - இவைகளைத் தன்னகத்தே கொண்டிருந்தார். இவரின் எழுத்துகள் தமிழ் உலகிற்கு மிகப் பெரிய கொடை. இவரின் தமிழுணர்வையும் தமிழ்ப்பற்றையும் பார்த்துத் தமிழறிஞர் ரா.பி. சேதுப்பிள்ளை இவரைச் சிலம்புச் செல்வர் என்றே அழைத்தார். ம.பொ.சி. செஙகோல் என்ற பத்திரிகையினையும் ஆரம்பித்துத் தமிழுக்கு அழகூட்டினார். இவரது எழுத்துகளைப் பார்த்து காந்தி கழகத்தினர் தமிழிலக்கியக் களஞ்சியத்திற்கு ஒரு புதிய வரவு என்று வாழ்த்தினர்.

இவர் மொழிவழி மாநிலங்கள் அமைப்பிற்காகவும், மாநிலத்தின் தன்னாட்சி, மத்தியில் கூட்டாட்சி என்ற கோரிக்கைக்காகவும் தன் வாழ்வினை அர்ப்பணித்தார். விடுதலைப் போராட்டத்தில் காந்தியடிகளால் ஈர்க்கப்பட்டுப் பல்வேறு போராட்டத்தில் ஈடுபட்டார். அதனால் ஆங்கிலேய அரசால் கைது செய்யப்பட்டு அமராவதி சிறையில் வாடினார். தமிழர்களே ஒன்றிணையுங்கள் என்று அனைத்து மக்களையும் ஒன்றிணைத்தார். தலை கொடுத்தேனும் தலைநகரைக் காப்போம் என்று வெற்றுக் கோசமிடாது, உண்மையிலேயே தெலுங்கு மக்களின் அநியாய ஆக்கிரமிக்பிலிருந்து சென்னையைக் காத்த பெருமை அய்யா ம.பொ.சியையே சாரும். சட்டப் பேரவையில் தமிழகத்தின் பெயர் தமிழ்நாடு Tamilnadu என்று முன்மொழியப் பட்டபோது அவற்றை Tamizh Nadu என்று திருத்தம் கொணர்ந்து மேலும் அழகூட்டினார்.

மொழிவாரி மாநிலங்கள் அமைப்பதற்குப் பதில் இந்தியா முழுவதையும் 5 அல்லது 6 மாகாணங்களாகப் பிரிக்கலாம் என்ற கருத்தினை முன் வைத்தனர் பலர். தமிழ்நாடு. கர்நாடகம், கேரளம் ஆகிய மாகாணங்களை உள்ளடக்கிய தட்சிணப் பிரதேசம் என்ற கருத்து பரவலாக்கப்பட்டபோது இக்கருத்தினை கடுமையாக எதிர்த்தார். இவரின் பேர்க்குரலால் மத்தியில் ஆண்ட காங்கிரஸ் அரசும் தமிழ்நாடு அமைக்கும் கோரிக்கைக்கு அடிபணிந்தது. மொழிவழி மாநிலப் பிரிவினைக்குப் பின்னும் சென்னை மாகாணத்தின் பெயரை தமிழ்நாடு என்று மாற்றிச் சிறப்பு மாநாட்டினை 1960 ஆம் ஆண்டு டிசம்பர் 25 ஆம் தேதி நடத்தினார்.

1967 ஆம் ஆண்டு அனைத்துக் கட்சியினரும் இவரை ஒருமனதாகச் சட்டமன்ற உறுப்பினராக்கினர். பின் தமிழக மேல்சபைத் தலைவராய் நீண்ட நாள்கள் பணியாற்றினார். இவர் 1995 ஆம் ஆண்டு அக்டோபர் 3 ஆம் நாள் காலமானார்.

நன்றி : தன்மானக்குரல் - டிச 2005

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.