Sep 8, 2010

ராஜராஜன் சிலை, மபொசி சாலை - பாஜக

 Created On 21-Jun-10 11:41:54 AM
சென்னையில் உள்ள மன்றோ சிலையை அகற்றி விட்டு, அதே இடத்தில் ராஜராஜ சோழனின் சிலையை அமைக்க வேண்டும் என்று தமிழக பா.ஜ.க. தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை:

உலகத் தமிழ் செம்மொழி மாநாடு ஏற்பாடுகள் விமர்சையாக நடைபெற்று வருகின்றது. இந்த மாநாடு தமிழகம் முழுவதும் தமிழ் ஆர்வலர்கள் மத்தியில் மிகப்பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.

ஆங்கிலேயரிடம் இருந்து நாம் விடுதலை பெற்ற பின்னர், நம்மை அடிமை கொண்டதாக இறுமாப்புடன் காட்சி தந்த ஆங்கிலேய ஆட்சியாளர்கள் சிலை சென்னை உட்பட நாட்டின் பல பகுதிகளிலும் அகற்றப்பட்டன. ஆனால், சென்னை தீவுத்திடலில் முன்பாக மன்றோ சிலை தமிழனையும் சேர்த்து இந்தியனை நாங்கள் அடிமைகொண்டோம் என்பது போல செருக்குடன் காட்சியளிப்பதாகவே தலை நிமிர்ந்து நிற்கிறது.

நமது தமிழ் மண்ணின் பேரரசன் ராஜராஜ சோழ மன்னன் இந்தியா முழுவதும் ஆண்டதுடன், கடல் கடந்தும் கடாரம் இன்றைய சிங்கப்பூர், பர்மா ஆகிய பகுதிகளிலும் இலங்கையிலும் தனது ஆட்சியை விரிவுபடுத்தினான். எனவே, தமிழக முதலமைச்சர் இந்த நல்ல தருணத்தில் மன்றோ சிலையை அகற்றி விட்டு, அதே இடத்தில் ராஜராஜ சோழனின் சிலையை தலை நிமிர்ந்து நிற்கும் வகையில் அமைக்க வேண்டும். செம்மொழி மாநாட்டின் தொடக்கவிழா நிகழ்ச்சியில் முதலமைச்சர் இந்த நல்ல செய்தியை அறிவிக்க வேண்டும்.

அதே போல நாட்டின் விடுதலைக்காக போராடிய வரும், தமிழ் மொழி வளர்ச்சிக்காக பாடுபட்ட வருமான மா.பொ.சிவஞானம் நினைவை போற்றும் வகையில் சென்னை பெல்ஸ் சாலைக்கு ம.பொ.சிவஞானம் சாலை என்று, அவரது பெயரை சூட்டவும் வேண்டும் என்றும் பொன். ராதா கூறியுள்ளார்.
நன்றி: thatsontamil.com

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.