Sep 14, 2010

தமிழுக்காக குருதி சிந்திய கம்யூனிஸ்ட் தலைவர்கள்


நன்றி:தேனீ இணையத்தளம்                                 

தமிழகத்தில் கம்யூனிஸ்ட் இயக்கத்தின் வளர்ச்சிக்காக மகத்தான பங்களிப்பை ஆற்றியவர் தோழர் எம்.ஆர்.வெங்கட்ராமன்.

இளம் வழக்கறிஞராக வாழ்க்கையைத் துவக்கிய எம்.ஆர்.வெங்கட்ராமன், சென்னை நகரில் தேசபக்தர் துரைசாமி ஐயரிடம் 1928ம் ஆண்டு ஜூனியராக பணியாற்றினார்.

வழக்கறிஞர் துரைசாமி ஐயர், சுப்பிரமணிய பாரதியாரின் நெருக்கமான நண்பர், பாரதியாரின் குடும்ப செலவுகளுக்கு தொடர்ந்து உதவி வந்தவர்.

துரைசாமி ஐயரிடம் 5 ஆண்டுகள் பயிற்சி பெற்ற எம்.ஆர்.வெங்கட்ராமன் தனியாக வழக்கறிஞர் தொழில் நடத்தத் துவங்கினார்.

அது 1936ம் வருடம். சென்னையிலுள்ள ‘தினமணி’ பத்திரிகை ஊழியர்கள் பல கோரிக்கைகளை முன்வைத்து வேலை நிறுத்தம் செய்து வருகின்றனர். போலீஸ் அடக்குமுறை மிகக்கடுமையாக இருக்கின்றது. ஏராளமான தொழிலாளிகள் கைது செய்யப்படுகின்றனர்.

ஒருநாள் காலை நேரத்தில் இளம்கம்யூனிஸ்ட்டுகளில் ஒருவரான பி.சீனிவாசராவ், வழக்கறிஞர் எம்.ஆர்.வியின் இல்லத்திற்கு வருகிறார். தான், தொழிலாளர் பாதுகாப்புச் சங்கத்திலிருந்து வருவதாகக் கூறிய அவர், சிறையிலிருக்கும் ‘தினமணி’ பத்திரிகை தொழிலாளிகளின் வழக்குகளை நடத்த வேண்டுமென்று எம்.ஆர்.வியைக் கேட்டுக் கொண்டார்.

அவரும் அதற்குச் சம்மதித்தார். இதைத் தொடர்ந்து, வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டிருந்த எம்.பி.எச். தொழிலாளர்களின் வழக்குகள், கள்ளிறக்கும் தொழிலாளிகளின் வழக்குகள் போன்றவை ஒவ்வொன்றாக எம்.ஆர். வியிடம் வரத்தொடங்கின.

இத்தகைய வழக்குகள் நடைபெற்று வந்த நேரத்தில் சீனிவாசராவ் மூலமாக அவருடைய இளம் கம்யூனிஸ்ட் தோழர்களான பி.ராமமூர்த்தி, ஏ.எஸ்.கே.அய்யங்கார், ப.ஜீவானந்தம், சுப்ரமணிய சர்மா, சி.எஸ்.சுப்ரமணி யம், கே.முருகேசன், டி.ஆர்.சுப்ரமணியம் போன்றோர் எம்.ஆர்.விக்கு நன்கு அறிமுகமானார்கள். பிரபல காங்கிரஸ் ஊழியர் என்ற முறையில் பி.ராமமூர்த்தியை மட்டும் எம்.ஆர்.வி. ஏற்கெனவேயே தெரிந்து வைத் திருந்தார். ஆனால் அவர் ஒரு தொழிற்சங்கத் தலைவர் என்ற விபரம் எம்.ஆர்.விக்கு இப்பொழுதுதான் தெரியவந்தது. இதற்குப் பின்னர், இளங்கம்யூனிஸ்ட்டுகளுக்கு வழிகாட்டி வந்த அவர்களின் தலைவர் எஸ்.வி.காட் டேயும் எம்.ஆர்.விக்கு அறிமுகமானார்.

வழக்கறிஞர் தொழிலை உதறித்தள்ளி விட்டு அரசியலிலும் தொழிற்சங்க பணிகளிலும் எம்.ஆர்.வி. தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். 1953 முதல் 1962ம் ஆண்டு இறுதிவரை தோழர் எம்.ஆர்.வெங்கட்ராமன் அவர்கள் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளராகப் பணியாற்றினார்.

1952ம் ஆண்டு தேர்தலுக்குப்பிறகு கம்யூனிஸ்ட் கட்சி முன்வைத்த முதற்பெரும் கோரிக்கையானது, மாநிலங்கள் மொழிவழி அடிப்படையில் மாற்றியமைக்கப்பட வேண்டுமென்பதாகும்.

எனவேதான், மொழிவழி அடிப்படையில் மாநிலங்கள் அமைக்கப்பட வேண்டுமென்ற கோரிக்கையை கம்யூனிஸ்ட் கட்சி முன்வைத்தது. இந்தியாவின் தேசபக்தர்கள் அதை வரவேற்றனர். ஆனால் ஆட்சிப் பீடத்திலிருந்தநேருவின் அரசாங்கம் அந்தக் கோரிக்கையை ஏற்க மறுத்தது.

கம்யூனிஸ்ட்டுகள் முன்வைத்த ‘விசாலாந்திரா’, ‘ஐக்கிய தமிழ்நாடு’, ‘ஐக்கிய கேரளம்’, ‘ஐக்கிய கர்நாடகம்’, ‘சம்யுக்த மகா ராஷ்டிரம்’, ‘மகாகுஜராத்’ போன்ற முழக்கங்கள் மக்களின் பேராதரவைப் பெற்றன.

மொழிவழி மாநிலம் கோரி தமிழகத்தில் கம்யூனிஸ்ட் கட்சி பெரும் இயக்கத்தை உருவாக்கியது. சென்னை சட்டமன்றத்தில் எதிர்க்கட்சி தலைவராயிருந்த பி.ராமமூர்த்தியும், இதர கம்யூனிஸ்ட் உறுப்பினர்களான ஜீவா, எம்.கல்யாணசுந்தரம், கே.டி.ராஜூ, மணலி கந்தசாமி போன்றோரும் தமிழி லேயே உரையாற்றினர். கேள்விகள் தொடுத்தனர். “சென்னை ராஜ்யம்” என்ற பெயர் மாற்றப்பட்டு “தமிழ்நாடு” என்று பெயரிட வேண்டுமென குரலெழுப்பினர். ஆனால் அன்றைய தமிழக முதலமைச்சரான காமராஜர் இந்தக் கோரிக்கையை ஏற்க முடியாது என்று பிடிவாதமாக இருந்தார்.

“தமிழ்நாடு” என்று பெயரிடுக, “தமிழ் மொழியை ஆட்சி மொழி ஆக்குக” என்ற கோரிக்கைகளை முன்வைத்து பழம்பெரும் தேசபக்தர் சங்கரலிங்கனார், 1956ம் ஆண்டு ஜூலை 27ம் தேதி விருதுநகரில் உண்ணாவிரதத்தை துவக்கினார். அவரது கோரிக்கைகளை ஏற்கும்படி கோரி கம்யூனிஸ்ட் கட்சி தமிழகத்தில் பெரும் பிரச்சார இயக்கத்தை கட்டவிழ்த்துவிட்டது. சங்கரலிங்கனாரை சமூக விரோதிகள் தாக்கவந்தபோது அவர்களை விரட்டியடித்து, அவரைப் பாதுகாத்ததும் கம்யூனிஸ்ட் கட்சிதான். அன்றைய தமிழக முதல்வரான காமராஜர், சங்கரலிங்கனாரின் கோரிக்கைகளை ஏற்க மறுத்தார். 77 நாட்கள் நீடித்த உண்ணாவிரதத்திற்குப் பிறகு சங்கரலிங்கனார் அக்டோபர் 13ம் தேதி அதே பந்தலிலேயே உயிர்நீத்தார். காமராஜரின் பிடிவாதம் ஒரு சிறந்த தேசபக்தனின் உயிரைக் குடித்தது.

“தமிழ்நாடு எனப் பெயரிடக்கோரியும் “தட்சிணப் பிரதேச” திட்டத்தை எதிர்த்தும் 1956ம் ஆண்டு பிப்ரவரி 20ம் தேதி தமிழக மெங்கும் சர்வக்கட்சி ஆதரவில் ஹர்த்தால் நடத்துவதென்றும், சென்னை நகரில் மாபெரும் கண்டன பேரணியை நடத்துவதென்றும் கம்யூனிஸ்ட் கட்சி திமுக, தமிழரசுக் கழகம் ஆகிய கட்சிகள் கூட்டாக முடிவு செய்து செய லில் இறங்கின.

1956 பிப்ரவரி 20ம் தேதி தமிழகமே வெறிச் சோடிக் கிடந்தது. தலைநகரம் சென்னையில் கடைகள் அடைக்கப்பட்டு வேலை நிறுத்தம் வெற்றிகரமாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. ஐலண்டு மைதானத்திலிருந்து எம்.ஆர்.வெங்கட்ராமன், ஜீவா, அண்ணா, ம.பொ.சிவஞானம் ஆகியோர் தலைமையில் மாபெரும் பேரணி புறப்பட்டு, திருவல்லிக் கேணி கடற்கரையை நோக்கிச் செல்லும் என்று அறிவிக்கப்பட்டிருந்ததால், ஆயிரக்கணக்கானோர் ஐலண்டு மைதானத்தில் திரண்டு நிற்கின்றனர்.

பேரணி புறப்படவேண்டிய நேரத்திற்கு முன்பே எம்.ஆர்.வி., ஜீவா, ம.பொ.சி. ஆகியோர் வந்துவிட்டனர். ஆனால், ஊர்வலம் புறப்பட வேண்டிய நேரத்தில் கூட என்ன காரணத்தாலோ அண்ணா வரவில்லை.

எனவே எம்.ஆர்.வி.யும், ஜீவாவும், ம.பொ.சி.யும் தலைமை தாங்க ஊர்வலம் புறப்படத் தொடங்கியது. அவ்வளவுதான்! ஐலண்டு மைதானத்தைச் சுற்றிலும் நிறுத்தப்பட்டிருந்த போலீஸ் படை. குண்டாந்தடிகளுடன் எம்ஆர்வி மீதும் ஜீவா மீதும் பாய்ந்தது. வயதா னோர் என்றும் பாராமல் மிருகத்தனமாக இவர் மண்டை மீதும், மார்பிலும், தொடையிலும், தடி கொண்டு தாக்கத் தொடங்கியது. இருவர் தலையிலிருந்தும் ரத்தம் பெருக்கெடுத்து ஓடுகிறது. தடியடி நிறுத்தப்படவில்லை. உருக்கு மனிதரான எம்ஆர்வி தன் மீது விழும் தடியடிகளை தாங்கிக் கொண்டிருக்கும் நேரத்திலேயே, ஒரு கையால் ஜீவாவின் தலையிலும், முகத்திலும் விழும் சில அடிகளையும் தாங்கிக்கொண்டார்.

ஊர்வலத்தினர் மீதும் தடியடி நடத்தப்பட்டு, சிதறடிக்கப்படுகிறார்கள்.

பல நிமிடங்களுக்குப் பிறகு ஜீவா மீதும், எம்ஆர்வி மீதும் தடியடி நிறுத்தப்படுகிறது. ரத்தப்பெருக்கெடுத்தோடும் நிலையில் அவர்கள் மருத்துவர்களிடம் அழைத்துச் செல்லப்பட்டனர்.

தமிழ் மொழியைக் காப்பதற்காகவும், தமிழக மக்களின் உரிமைகளைக் காப்பதற்காகவும், தமிழக கம்யூனிஸ்ட் தலைவர்கள் ஐலண்டு மைதானத்தில் குருதி சிந்தியதை தமிழக வரலாறு மறக்க முடியுமா?

என்.ராமகிருஷ்ணன் எழுதியுள்ள வரலாற்று நூலிலிருந்து.

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.