Sep 8, 2010

ம.பொ.சி. என்ற மாமனிதர்!


உடல் மண்ணுக்கு உயிர் தமிழுக்கு என்ற வீர வரியைத் தாரக மந்திரமாகக் கொண்டு ஓயாதுழைத்த உத்தமத்தலைவர் ம.பொ.சி. மூதறிஞர் இராஜாஜி காங்கிரஸ் கட்சியை விட்டு விலகியபோது, அவருக்கெதிராக எழுந்த புயல் போன்ற எதிர்ப்புக்கு ஈடு கொடுத்தவர் தளபதி ம.பொ.சி அவர்கள். ம.பொ.சிவஞானம் அவர்கள் 1906-ம் ஆண்டு ஜூன் மாதம் 26-ம் நாள் ஆயிரம் விளக்குப் பகுதியில் பிறந்தார். தந்தையின் பெயர் பொன்னுசாமி. தாயார் பெயர் சிவகாமி. இவரையும் சேர்த்து குடும்பத்தில் மொத்தம் 9 பிள்ளைகள்.

பள்ளியில் மூன்றாம் வகுப்பு வரை தான் படித்தார். அதற்கு மேல் படிக்க குடும்பத்தில் பண வசதி இல்லை. எனவே ஓர் இடத்தில் வேலையில் சேர்ந்தார். பின்னாளில் ம.பொ.சி தமிழில் சிறந்து விளங்கக் காரணம், இளமையில் அவரது தாயார் சொல்லிக் கொடுத்த அல்லியரசாணிமாலை, பவளக்கொடி மாலை போன்ற நூல்களேயாகும். தேவையான அளவிற்கு அவருக்கு ஆங்கில அறிவு இருந்தது.

1928-ம் ஆண்டு சைமன் கமிஷன் எதிர்ப்பு, 1932-ஆம் ஆண்டு சட்டத்தை மீறி ஊர்வலம், ஆங்கில அரசை எதிர்த்து எழுதப்பட்ட துண்டுப் பிரசாரங்களை வழங்கியதற்காகவும், பல மாதங்கள் சிறைத் தண்டனை பெற்றார். விடுதலைப் போரில் 1928 முதல் 1947 வரை ஆறு முறை சிறைத் தண்டனை அனுபவித்தார். இன்று மாநில சுயாட்சி பற்றிப் பேசப்படுகிறது. மாநில சுயாட்சி என்னும் தத்துவத்தை முதன் முதலாகச் சிந்தித்து தமிழர்களுக்கு வழங்கிய தலைவர் ம.பொ.சி தான்.

காங்கிரஸின் எதிர்ப்பையும், திராவிடர் கழகத்தின் முயற்சியையும் முறியடிக்கத் "தமிழர் முரசு' என்னும் பெயரில் மாதப் பத்திரிகை ஒன்றை 1946-ம் ஆண்டு மே மாதம் வெளியிட்டார். 1956-ஆம் ஆண்டு நவம்பர் முதல் தேதி தமிழர் மாநிலம் தனியாக பிரித்து அமைக்கப்பட்டது. சென்னையை ஆந்திராக்காரர்கள் உரிமை கொண்டாடாமல் காப்பாற்றப்பட்டது. அதில் பெரும் பங்கு ம.பொ.சி.க்கு உண்டு.

1946-ம் ஆண்டே ம.பொ.சி தமிழகத்துக்கு சுயநிர்ணய உரிமை வேண்டுமென்று கோரினார். மாநில அரசின் எந்த அதிகாரத்திலும் மத்திய அரசின் மேலாதிக்கம் இருக்கக்கூடாது மாநிலங்களுக்குத் தனியே மாநிலக் கொடி, மாநில கீதம், அரசியலமைப்புச் சட்டம் எல்லாம் இருக்க வேண்டும் என்றார். அதற்கு எடுத்துக் காட்டாக, சோவியத்து யூனியன், அமெரிக்கா போன்ற நாடுகளை கூறினார்.

அந்த நாளில் தனித் திராவிட நாடு கேட்டவர்கள், மாநில சுயாட்சிக் கொள்கையைக் கேலி பேசினார்கள். நாங்கள் கேட்பது நாலணா, அதில் கிராமணியார் கேட்பது காலணாவாக இருக்கிறது என்றார்கள். பின்னர் திராவிடத் தனி நாடு கோரிக்கை கைவிடப்பட்டு மாநில சுயாட்சி கோரிக்கையை திராவிட இயக்கத்தாரும் ஏற்றுக் கொண்டது காலத்தின் கட்டாயம் என்றார் ம.பொ.சி.


""ம.பொ.சி தமிழுக்கும் தமிழினத்துக்கும் தமிழ்நாட்டை வாழ்விப்பதற்காக அவர் நடத்திய போராட்டங்களுக்காக அவரை நாங்கள் கையெடுத்துக் கும்பிடுகிறோம்'' என்றார் கம்யூனிஸ்ட் தலைவர் ஜீவா. 

1952-இல் நடந்த முதல் பொதுத்தேர்தலில் காங்கிரஸ் வெற்றிக்கு அரும்பாடுபட்டார் ம.பொ.சி. இருப்பினும் பல கசப்பான சம்பவங்களுக்குப் பிறகு காங்கிரஸிலிருந்து வெளியேறினார். காங்கிரஸில் தாம் வகித்து வந்த அனைத்துப் பொறுப்புகளிலிருந்தும் ஏன் சாதாரண உறுப்பினர் நிலையில் இருந்தும் கூட முற்றிலுமாக விலகிவிட்டார்.

"தமிழன் குரல்' என்ற இதழை 1954-55-ம் ஆண்டுகளில் ம.பொ.சி நடத்தி வந்தார். 1954-இல் சென்னை மாநகராட்சிக் கல்விக் குழுத்தலைவராக இருந்து மாநகராட்சியின் கொடியில் தமிழ் மூவேந்தரின் சின்னங்களாகிய வில், புலி, மீன் போன்ற சின்னங்களைப் பொறித்திடத் தீர்மானித்துப் பிறரையும் ஒப்புக்கொள்ள வைத்து வெற்றி பெற்றார்.

"மதராஸ் மனதே' என்று குரலெழுப்பி ஆந்திரர்கள் போராட்டம் செய்தனர். அப்போது மாநில முதலமைச்சராக இராஜாஜி இருந்தார். அவரது ஆதரவுடன் சென்னை மாநகரம் தமிழகத்தின் தலைநகராக நிலைநிறுத்திப் பாதுகாக்க ம.பொ.சி. அரும்பாடுபட்டார். ""தலையைக் கொடுத்து தலைநகரைக் காப்போம், காலைக் கொடுத்து கன்னியாகுமரியைக் காப்பாற்றுவேன்'' என்றார் ம.பொ.சி.

1954-ஆம் ஆண்டில் தேவி குளம், பீர்மேடு தாலுக்காக்களைத் தமிழகத்தோடு சேர்க்கப்பட்ட வேண்டும் என்று போராடினார்கள். மூணாறில் நேசமணி உள்ளிட்ட பலர் கைது செய்யப்பட்டனர். நாகர்கோவில் தெற்கெல்லைப் போராட்டம் தொடர்ந்தது. மூணாறு, நாகர்கோவிலில் இரண்டு இடங்களிலும் ம.பொ.சி முக்கியப் பங்கு வகித்தார். அப்போதைய கேரள முதல்வர் பட்டம் தாணுபிள்ளையின் ஆட்சி ஈவு இரக்கமின்றி 11 தமிழர்களைச் சுட்டுக் கொன்றது.
""ம.பொ.சி எந்தப் பணியைச் செய்தாலும், எத்துறையில் நின்றாலும் அவரது பேச்சும், மூச்சும் தமிழுக்காகவே இருக்கும்'' என்றார் முதல்வர் கருணாநிதி. 

வீரபாண்டிய கட்டபொம்மன் கப்பலோட்டிய தமிழன் போன்ற தலைப்புகளில் நூல்களை எழுதினார். இவர் எழுதிய "வள்ளலார் கண்ட ஒருமைப்பாடு' என்ற நூலுக்கு சாகித்ய அகாதமி விருது கிடைத்தது. 3.10.1995-ம் ஆண்டு நம்மை விட்டுப் பிரிந்தார். சென்னையில் வாழ்ந்தவர்களுக்கும், தமிழ் மொழியை அறியாதவர்களுக்கும், தமிழர் அல்லாதவர்களுக்கும் சென்னையில் பல இடங்களில் சிலைகள் வைக்கப்பட்டிருக்கின்றன. ஆனால் தமிழுக்காகவும், தமிழர்களுக்காகவும், ஏன் இந்தியத் திருநாட்டின் விடுதலைக்காகவும், தன் வாழ்க்கையே அர்ப்பணித்துப் பாடுபட்ட அவருக்கு சென்னையில் ஒரு சிலையோ, ஒரு மணிமண்டபமோ, தெருவிற்குப் பெயரோ, நினைவுத் தூணோ வைக்கப்படவில்லை என்பதுதான் வேதனை.

நன்றி:
தினமணிகதிர்,முரண்சுவை-22, 20 Jun 2010,  ராஜேஷ், 

5 comments:

 1. நல்ல தகவல்கள் நன்றி

  ReplyDelete
 2. சேராத இடம்சேர்ந்து வஞ்சத்தில் வீழ்ந்தாரப்பா

  ReplyDelete
 3. மதிப்பிற்குரிய ம பொ சி அவர்களைப் பற்றிய மிக அருமையான அஞ்சலி- வாழ்க்கை சரித்திரம்.

  தமிழ் தமிழ்நாடென்று சொல்லி கோடிகள் சேர்த்த "கேடி"களுக்கிடையே, தமிழுக்கும், தமிழ்நாட்டிற்கும் வாழ்க்கையை அர்ப்பணித்த செம்மல்.

  விரிவான விளக்கமான அற்புதமான கட்டுரைக்கு மிக்க நன்றி.
  " தமிழன் - நியூயார்க். அமெரிக்கா".

  ReplyDelete
 4. good information....valzthukal,,,

  ReplyDelete

Note: Only a member of this blog may post a comment.