Oct 11, 2010

அண்ணாபோல் தமிழரசுக்கழகத்தை அரசியல் கட்சியாக்கி இருந்தால் ம.பொ.சியும் அரசியலில் வென்றிருப்பார்!


-அன்னாரின் 105 வது பிறந்தநாளில் அருகோ உரை


அண்ணா, உப்புசப்பில்லாத பெரியார் - மணியம்மை திருமணத்தைப் பிரச்சனையாக்கியது, திமு.க மூலம் பதவி அரசியலுக்கு வர வேண்டும் என்பதற்குத்தான். அதற்காகத்தான் அதைப் பிரச்சனையாக்கினார். சிலம்புச்செல்வர் ம.பொ.சிக்கோ அவ்வாய்ப்பு, தமிழரசுக்கழகத்தைக் காங்கிரசிலிருந்து வெளியேற்றியதன் போது வலிய வந்தது. அதைப் பயன்படுத்திக் கொண்டு ம.பொ.சி தமிழரசுக்கழகத்தை அரசியல் கட்சியாக்கி, அடுத்த தேர்தலில் போட்டியிடுவோம் என்று அறிவித்திருப்பாரானால், காங்கிரசில் ஒரு சுடுகுஞ்சி கூட மிஞ்சியிருக்காது. அத்தனை பேரும் ம.பொ.சி பின்னால் வந்திருப்பார்கள்.

ஏனெனில், என்னதான் கொள்கை பேசினாலும், பதவிக்காகப் பொது வாழ்க்கையில் புகுபவர்கள்தாம் இந்நாட்டில் மிகுதி. அப்போதுதானே பொறுக்கித் தின்ன முடியும்?

மேலும் அக்காலத்தில் அண்ணாவுக்கு நிகரான பேச்சாளராக ம.பொ.சி இருந்ததுடன், தி.மு.கவுக்கு நிகராக எழுத்தாளர்கள், பேச்சாளர்கள், நடிகர்கள், கலைஞர்கள் என நிரம்பிக் கிடந்தது தமிழரசுக்கழகத்தில்தான். ம.பொ.சி ஆதரித்தவரைதான் சுதந்திரத்திற்குப்பின்  நடந்த 1952, 1957, 1962 பொதுத் தேர்தல்களில் தமிழ்நாட்டில் காங்கிரசால் வென்று ஆட்சியமைக்க முடிந்தது.
1967 தேர்தலில் ம.பொ.சி தி.மு.க கூட்டணியில் சேர்ந்த பிறகு, அது தேர்தலில் வெற்றி பெற்று தமிழக ஆட்சிக்கு இன்று வரை வளர முடியவில்லை என்பதே சான்றாகும்.

ஆகவே, காங்கிரசிலிருந்து வெளியேற்றப்பட்ட 1953 –லேயே ம.பொ.சி தமிழரசுக்கழகத்தை அரசியல் கட்சியாக மாற்றியிருப்பாரேயானால், இந்திய தேசியம், திராவிட தேசியம் இரண்டும் ஒரு சேர ஓரங்கட்டப்பட்டு, தமிழ்த் தேசியம் ஆட்சிக்கு வந்திருக்கும். திராவிட தேசியத்திற்கு வழி விடாமல், இலங்கையில் தந்தை செல்வா அமைத்த தமிழரசுக் கட்சிதான் கொடி, படையுடன் தமிழீழத் தனியாட்சி காணும் வரை சென்றது என்பதும், புலிகள் அமைத்த அந்த ஆட்சி, தி.மு.கவும் பங்கு பெறும் இந்திய அரசின் உதவியுடன் இனக்கொலை மூலம் முடிக்கப்பட்டதென்றாலும், இன்றும் அங்கே தமிழ்த்தேசியக் கூட்டமைப்புதான் தமிழ் மக்களுடைய பேராதரவு கொண்ட கட்சியாக இருக்கிறது என்பதும் கண்கூடான உண்மையாகும்.

தமிழரசுக் கட்சியை அரசியல் இயக்கமாக்காமல், தந்தை செல்வா வெறும் பண்பாட்டு இயக்கம் என்ற அளவில் நிறுத்தியிருப்பாரானால், அங்கும் திராவிட இயக்கம் புகுந்து தமிழ்த் தேசியத்தைத் தலையெடுக்காமல் செய்திருக்கும். உள்ளபடி அங்கும் திராவிடக் கட்சிக் கிளையைச் சிலர் தொடங்கிப் பார்த்தார்கள். ஆனால், தமிழரசு அரசியல் மூலம் தந்தை செல்வா அதற்கு வழி விடவில்லை. அந்த வஞ்சத்தைத் தான் திராவிட அரசியல் இந்திய அரசியலுடன் இணைந்து 2009 இல் தீர்த்துக் கொண்டது போலும். அதை மறைக்கத்தான் கோவை செம்மொழி மாநாடு போலும்.

இவ்வாறு, சென்னை குரோம்பேட்டை ம.பொ.சி நகரில் அவருடைய திருவுருவச் சிலை முன்னால் நடந்த அன்னாரின் 105 ஆவது பிறந்தநாள் விழாவில் கலந்து கொண்டு பேசுகையில் அருகோ குறிப்பிட்டார்.

சிலம்புச்செல்வர் டாக்டர் ம.பொ.சி தமிழ்ப்பேரவை சார்பில் 26.06.2010 அன்று, பெ.சு.மணி, பெ. பழனி முன்னிலையில் நடைபெற்ற அவ்விழாவில் பேரவைச் செயலாளர் வெ. இராமானுஜன் வரவேற்றார். புலவர் சி. ஞானமணி, பாவலர் மு. இராமச்சந்திரன், சூரிய சந்திரானந்தா, விச்சூர் வெ. கிருஷ்ணன், க. உத்தண்டன், மூலக்கடை மு. இராமச்சந்திரன், ஆதி. ஞானசேகரன், பட்டுக்கோட்டை இராசகோபால் ஆகியோரும் பேசினர். அ. வெங்கடேசன் நன்றி நவின்றார்.

பேரவை சார்பில் ம.பொ.சி சிலைக்கு பாவலர் இராமச்சந்திரனும் சூரிய சந்திரானந்தாவும் மாலை அணிவித்தனர். அண்ணல் காந்தி சிலைக்கு அருகோ மாலையணிவித்தார். விழாவுக்கு வந்திருந்தவர்கள் அனைவருக்கும் சர்க்கரைப் பொங்கல் வழங்கப்பட்டது.

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.