Oct 12, 2010

வடக்கெல்லை மீட்புப் பொன் விழா


வடக்கெல்லை மீட்புப் போராளிகளில் ஒருவரான ஆற்காடு நரசிம்மன் ஆற்காடு மகாலட்சுமி கல்லூரியில் வடக்கெல்லை மீட்புப் பொன் விழா - சிலம்புச் செல்வர் ம.பொ.சி 16 ஆம் ஆண்டு நினைவு நாள் - திருத்தணியில் தங்கத்தேர் இழுத்தல் ஆகிய முப்பெரு விழாவை, திருத்தணி வட்டம் ஆந்திராவுக்குப் போய்த் தமிழகத்திற்கு மீண்ட 50 ஆம் ஆண்டாகிய 01-04-2010 அன்று மிகச் சிறப்பாக நடாத்தினார்.

அன்று காலை ஆற்காடு மகாலட்சுமி கல்லூரியில் ம.பொ.சி பேரன் திருஞானம் தலைமையில், கல்லூரித் தாளளர் டி. எல். பாலாஜி, முதல்வர் பி. இராமமூர்த்தி முன்னிலையில் ஆ. செ. நரசிம்மன் வரவேற்புரையுடன் விழா தொடங்கியது. முன்னாள் தமிழரசுக்கழகப் பொதுச் செயலாளர் கலவை அ. கோபாலகிருட்டிணம், செயலாளர் புலவர் ஞானமணி, முனைவர் அருகோ, கவிப்பேரரசு அருமையார், பாவலர் மு. இராமச்சந்திரன், சூரிய சந்திரானந்தா, தங்க. கலியமூர்த்தி ஆகியோர் உரையாற்ற, எல்லைப்போரில் பங்கு பெற்ற ம.பொ.சி தமிழ்ப் பேரவைச் செயலாளர் வெ. இராமானுசம், அரங்கநாதப் பிள்ளை, இராமசாமி மற்றும் தியாகிகளுக்கு, பொன்னாடை அணிவித்து, சந்தன மாலை போட்டுச் சிறப்புச் செய்தனர். தமது உலகத் தெய்வநெறி மன்றம் சார்பில் சூரிய சந்திரானந்தா “தேசிய தெய்வத் தமிழரசுச் செம்மல்” என்ற பட்டயமும் விருதும் வழங்கிச் சிறப்பித்தார். கல்லூரி மாணவிகள், பேராசிரியர்கள் அனைவரும் கலந்து கொண்டதுடன், அதன் பள்ளி முதல்வர் உஷாராணி, உலகத்தமிழ் வளர்ச்சி மன்றத் தலைவர் புகழேந்தி, ‘உதவும் உள்ளங்கள்’ செயலாளர் உட்பட மேலும் பலர் கலந்து கொண்டனர்.

இவ்விழாவில் பங்கு கொண்ட சிறப்பு அழைப்பாளர்கள் அனைவரும் அப்படியே திருத்தணிக்குச் சென்று, அங்கு மலைக் கோவில் வளாகத்தில் இரவு நடைபெற்ற தங்கத் தேர் திருவலத்திலும் கலந்து கொண்டனர். திருத்தணியை மீட்க உதவிய தணிகை வேலன், திருப்பதி உட்பட ஆந்திராவில் உள்ள அனைத்துத் தமிழ்ப்பகுதிகலையும் தாய்த் தமிழகத்துடன் சேர்க்க அருள் புரிய வேண்டும் என்று பிரார்த்தனை செய்ய்யப்பட்டது. அங்கு சிற்றுரையாற்றிய அருகோ, “எல்லை மீட்பு என்பது 1960 உடன் முடிந்து விடவில்லை. தங்கள் தாய் மண்ணையிழந்த யூதர்கள் 1000 ஆண்டுக்குப் பிறகும் அதைத் திரும்பப் பெற முடிந்தது என்றால், அதற்கு அவர்களின் கடவுள் அருள் புரிந்ததைப் போல நாமும் உண்மையுடன் அதற்காக உழைத்தா;ல் தமிழ்க் கடவுளாகிய முருகனும் அருள் புரிவார்” என்று குறிப்பிட்டு, “ தமிழ்ப் பகுதிகள் அனைத்தும் தாய்த் தமிழகத்துடன் இணையும் வரை - அகண்ட தமிழகம் அமையும் வரை ம.பொ.சியும், மங்கலங்கிழாரும், பெ.சு.மணியும் தொடங்கிய போர் முற்றுப் பெறாது” என்றார்.

 நன்றி: எழுகதிர், மே 2010.

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.