Oct 12, 2010

திருத்தணியில் வடவெல்லை மீட்புப் பொன்விழா


தமிழன் இழந்த மண் வரைபடத்தை அருகோ திறந்தார்!

வழக்கறிஞர் குப்பன் எடுத்த மாபெரும் விழா!!

தணிகை மீட்சிப் பொன்விழாப் பொதுக்கூட்டம் 02-04-2010 அன்று திருத்தணிகை, கமலா திரையரங்கம் அருகில் எழுச்சியுடன் நடைபெற்றது. தொடக்கத்தில் தேனிசை செல்லப்பாவின் இசை நிகழ்ச்சி நடைபெற்றது.
தணிகை மீட்சிப் பொன்விழாக்குழுத் தலைவர் வழக்கறிஞர் பா. குப்பன் நிகழ்ச்சிக்குத் தலைமை ஏற்றார். வாகையூரான் அனைவரையும் வரவேற்றார். இளங்கோ நிகழ்ச்சிகளைத் தொகுத்துரைத்தார்.

மேடைக்கு முன்பு ஏற்ற்பாடு செய்யப்பட்டு இருந்த ஐந்நூறு இருக்கைகளிலும் மக்கள் அமர்ந்திருந்தனர். இடம் கிடைக்காதவர்கள் சுற்றி நின்றிருந்தனர்.

1956 இல் மொழிவழி மாநிலங்கள் பிரிக்கப்பட்டபோது ஆந்திரத்துடன் இணைக்கப்பட்ட திருத்தணிகை மற்றும் அதைச் சுற்றியுள்ள முன்னூற்றுக்கும் மற்ற்பட்ட சிற்றூர்கள் ம.பொ.சி, தலைமையில் நடைபெற்ற மாபெரும் மக்கள் போராட்டத்தின் விளைவாக 1960ஆம் ஆண்டு மீனம் (பங்குனி) 19ஆம் நாளன்று தமிழ்நாட்டுடன் இணைக்கப்பட்டது. அந்த ஐம்பது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் வகையில் விழா ஏற்ற்பாடு செய்யப்பட்டது.

வடக்கெல்லை மீட்புப் போராட்டத்தில் ம.பொ.சி., தமிழ் மாமுனிவர் மங்கலங்கிழார், தளபதி விநாயகம் ஆகியோருடன் பங்கேற்ற ஐம்பதுக்கும் மேற்ற்பட்ட தமிழ்ச் சான்றோர்கள் விழாவுக்கு வருகை தந்தனர். எழுபது, எண்பது வயது கடந்த தமிழ்ச் சான்றோர்களின் வருகை அனைவரையும் நெகிழ்ச்சிப் படுத்தியது. எம். ஆர். எப் ஒன்றுபட்ட தொழிற்சங்கத்தின் சார்பாக ஏராளமான தொழிலாளர்கள், கல்லூரி மாணவர்கள் அதிக எண்ணிக்கையில் ஆர்வத்துடன் வந்திருந்தனர்.

வழக்கறிஞர் பா. குப்பன் தனது தலைமை உரையில், “மீசை முளைப்பதற்ற்கு முன்பு திராவிடர் கழகம் சென்றேன். எனது இளமை, உழைப்பு என அனைத்தையும் செலவு செய்தேன். என் மண், மக்கள் மொழியைக் காக்க அது தவறி விட்டது. தலை நரைத்த பின் திராவிட மாயையிலிருந்து வெளியேறி, தமிழ்த் தேசிய வெளிச்சத்திற்கு வந்துள்ளேன். இனி திராவிட இயக்கங்களின் பொய்மையைத் தோலுரிப்பதே எனது வாழ்நாள் பணி” எனச் சூளுரைத்தார்.

வடக்கெல்லைப் போராட்டத்தில் பங்கேற்றவர்கள் சார்பாகப் பேசிய மருத்துவர் தி.வி.ச. சேகர்வர்மா “ நாங்கள் பள்ளியில் படித்தபோது தெலுங்கு ஆசிரியர்களே எங்களுக்குத் தமிழ் கற்பித்தனர். நமஸ்காரம் எனச் சொல்ல மறுத்து வணக்கம் எனச் சொன்னதற்காக நான் கடுமையாகத் தண்டிக்கப்பட்டேன். ம.பொ.சியின் அழைப்பை ஏற்று என்னைப் போல் ஆயிரக்கணக்கானவர்கள் திருப்பதி வரை தமிழகத்துடன் இணைக்கக் கோரிப் போராடினோம். சிறை சென்றோம். சிறைக் கொடுமைகளை அனுபவித்தோம். சிறையில் அவமானப்படுத்தப்பட்டோம். இறுதியில் திருத்தணிகை வரையே கிடைத்தது. எங்களைப் பெருமைப்படுத்தியிருக்க வேண்டிய தமிழக அரசோ எங்கள் போராட்ட வரலாற்றை இருட்டடிப்புச் செய்து விட்டது” என வருந்தினார்.

எழுகதிர் ஆசிரியர் அருகோ தனது சிறப்புரையில் “ தமிழக எல்லைப் போராட்டத்திலும், நதிநீர்ச் சிக்கல்களிலும் திராவிட இயக்கங்கள் தொடர்ந்து தமிழகத்துக்கு இரண்டகமே செய்து வருகின்றன” என்பதை ஆதாரபூர்வமாய் விளக்கினார். தமிழன் இழந்த மண் வரைபடத்தை விழா மேடையில் திறந்து வைத்தார்.

முனைவர். க. நெடுஞ்செழியன் தனது சிறப்புரையில் “ சாதியற்று இருந்த தமிழ்ச் சமூகத்தில் ஆரியர்கள் படிப்படியாய் உள்நுழைந்து சாதியைப் புகுத்தி, பின்னர் கெட்டிப்படுத்தினர். தமிழனிடம் சாதிப்பித்து ஒழிய வேண்டும் ” எனப் பேசினார்.

இறுதியாய் சிறப்புரை ஆற்றிய தமிழ்த் தேசியப் பொதுவுடைமைக் கட்சிப் பொதுச் செயலாளர் பெ. மணியரசன் “ இந்தியாவின் தமிழர் விரோதப்போக்கில் மாற்றம் கொண்டு வர இயலும் என்ற கற்பனையிலிருந்து ஒவ்வொரு தமிழனும் விடுபட வேண்டும். ஆரியம் என்பது நமக்கு உண்மையாகவே எதிராய்ச் செயல்படும் கருத்தியல். திராவிடம் தான் நம்மை ஏமாற்றிக் கொண்டிருக்கும் மாயை. திராவிட மாயையிலிருந்து விடுபட்டு இறையாண்மை கொண்ட குடியரசை அமைப்பது நமது இறுதி இலக்காய் இருத்தல் வேண்டும் “ எனப் பேசினார்.

வழக்கறிஞர் அ. சிவபிரசாத் நன்றி கூற விழா எழுச்சியுடன் நிறைவடைந்தது. மங்கலங்கிழார் கல்வி அறக்கட்டளைச் செயலாளர் கு.மு. கணேசன் உட்பட தமிழ் அறிஞர்கள், ஆர்வலர்கள் திரண்டு வந்து சிறப்பித்தனர்.
நன்றி: எழுகதிர், மே 2010.

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.