Oct 12, 2010

பொன்விழாவை ஒட்டியேனும் தமிழர்க்குப் புதுநம்பிக்கை பிறக்கட்டும்


-முனைவர் அருகோ

மொழிவழியில் இன்றைய தமிழ்நாடு அமைந்த 1956 நவம்பர் முதல் நாளைத் தமிழக அரசு ஆண்டுதோறும் கொண்டாட வேண்டும். கொண்டாடுவதில்லை. மாறாக, தாங்களே போராடித் தாய்த் தமிழகத்துடன் இணைந்த கன்னியாகுமரி மாவட்ட மக்களே அதை (இராச்யோற்சவ விழாவை ) கொண்டாடுகின்றனர்.

அதுபோல, ஆந்திராவுடன் இணைக்கப்பட்டு ம.பொ.சி., மங்கலங்கிழார், ந. அ. இரசீது, விநாயகம் போன்றோரின் தலைமையில் போராடி, திருத்தணி வட்டத்தையும், திருவாலங்காட்டையும் தமிழகத்துடன் இணைத்த 1960 ஏப்ரல் முதல் நாளையும் அப்பகுதி மக்கள்தான் கொண்டாடுகிறார்களே தவிர, தமிழக அரசு கவலைப்படுவதே இல்லை. ஆண்டுதோறும்தான் கொண்டாட மனமில்லை; கடந்த 01-04-2010 அதன் பொன்விழா நாள். அதையாவது தமிழக அரசு கொண்டாடியிருக்கலாம். செய்யவில்லை.

தமிழனுக்கு தமிழ்மண் மீது, மொழி மீது, பண்பாட்டின் மீது பற்று வந்து விடக் கூடாது என்ற வைராக்கியம் போலும்! அந்த வைராக்கியத்தை உடைத்தாக வேண்டும்.

வடவெல்லை மீட்பர்களுக்கு நமது வணக்கத்தையும் வாழ்த்தையும் உரித்தாக்குகிறோம்.

இசுரேலை அமைத்த பிறகு கூட யூதர்களின் தாய்மண் தாகம் தீரவில்லை. “நைல் நதி முதல் யூப்ரடீசு நதி வரையுள்ள அகண்ட இசுரேலை அமைப்போம் “ என்று இன்றும் யூதர்கள் சூளுரைக்கின்றனர்.

நம்மைப் போல் ஒரு தன்னாட்சி நாடின்றித் தவிப்பவர்கள் குர்து மக்கள் இருந்தும் “ தங்களின் 74000 சதுரக்கல் பரப்பளவு கொண்ட அகண்ட குர்திசுத்தானத்தை அமைத்தே தீருவோம் “ என்று இன்றும் போராடி வருகின்றனர்.

ஏனென்றால், இழந்தவை மீட்க முடியாதைவையல்ல. இழந்து 1000 ஆண்டுகளுக்குப் பின் யூதர்களும், 60 ஆண்டுகளுக்குப் பாலத்தீனர்களும் மீளப் பெற்று வரலாறு படைத்துள்ளனர்.

இந்தியாவிலும் அம்மாநிலத்தில் 50 விழுக்காடு கூட இல்லாத கருநாடகக் கன்னடர்களும் அந்த வரலாற்றைப் படைத்துள்ளனர்.

கையாலாகத அரசியல்வாதிகளையிட்டு, தமிழர்கள் மட்டும் ஏன் அந்த நம்பிக்கையின்மைக்கு இடம் கொடுக்க வேண்டும்?

நம்புவோம். போராடுவோம். அகண்ட தமிழகம் நாளை அமைவது உறுதி.

நன்றி: எழுகதிர், மே 2010.

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.