Nov 10, 2010

தமிழரசுக் கழகத்துக்கு வாழ்த்து

- நாமக்கல் கவிஞர்.

தமிழர்களின் தனித்தெய்வம் முருகன் கோயில்
     தலமாகும் திருத்தணியைத் தமிழ்நாட் டாரின்
அமைதிகெட ஆந்திரத்தில் சேர்த்தார் என்ற
     அநியாயம் அதைஎதிர்த்தே அறப்போர் செய்து
நமதுடைமை திருத்தணியை நமக்கே மீட்ட
     நற்பணியால் பெரும்புகழுக் குரிய ராகும்
தமிழரசுக் கழகத்துத் தொண்ட ரோடும்
     தலைவர் சிவஞானமவர் தழைத்து வாழ்க.

ஓலமிடும் கடலலைசேர் குமரி யோடும்
     ஒட்டவைத்துத் தமிழ்நாஞ்சில் நாட்டை மீட்டோம்.
வேலவனின் திருத்தணியை மீட்டோம் இன்னும்
     வேங்கடவன் திருப்பதியும் மீட்போம் என்று
காலமெல்லாம் முழங்கிவரும் தமிழ ரசுக்
     கழகத்தின் விருப்பம்கை கூடு மானால்
ஞாலமெல்லாம் வியக்குமொரு வெற்றி காண்போம்;
     நம்முடைய ஞாயபலம் சிறக்க வாழ்வோம்.

அறம்மிகுந்த தமிழ்மொழியின் சிறப்பைப் போற்றி
     அதுவழங்கும் திருநாட்டின் நலத்தைப் பேணி
மறம்கடந்த தமிழினத்தின் மாண்பைக் காத்து
     மாநிலத்தில் யாவரொடும் மருவி வாழத்
திறமளிக்கும் சன்மார்க்கம் திசைதப் பாமல்
     தீமைகளைத் தியாகத்தால் வெல்வோம் என்னும்
அறஞ்சிறந்த கொள்கைகளே தாங்கி நிற்கும்
     தமிழரசுக்கழகத்தின் தகைமை வெல்க.

                                               
(திருத்தணிகை தமிழ்நாட்டவர்க்கு மீண்டபோது மகிழ்ந்து பாடியது)

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.