Nov 16, 2010

தோழர் குணாவுக்குக் கடிதம்

நாள் 02.11.2009

மதிப்பிற்குரிய திரு. குணா அவர்களுக்கு,

வணக்கம். நலம், நலமே சூழ்க.

      தாங்கள் எழுதிய "திராவிடத்தால் வீழ்ந்தோம்" என்ற நூல்  குறித்து நண்பர்கள் மூலம் பலமுறை அறிந்திருக்கிறேன். எனினும், அண்மையில்தான் அதனை (ஐந்தாம் பதிப்பு) வாசித்தேன்.  தாங்கள் குறிப்பிட்டுள்ள கருத்துகள் பெரிதும் சரியே. காலத்தின் தேவையாகவே இந்நூலைப் பார்க்கிறேன்.

      எனினும், இந்நூலில் ம.பொ.சி. (என் பாட்டனார்) பற்றிக் கூறப்பட்டுள்ள இரு கருத்துகள் பற்றிச் சில தகவல்களைத் தங்களுடன் பகிர்ந்து கொள்ள விழைகிறேன். பக்கம் 47-இல் இராஜாஜி பின்னின்று இயக்க ம.பொ.சி. நடத்திய எல்லை மீட்புப் போராட்டம் என்று குறிப்பிட்டுள்ளீர்கள். ம.பொ.சி. தனது வாழ்க்கை வரலாற்று நூலான எனது போராட்டம் என்ற நூலிலே தமிழக எல்லைகளை மீட்கப் போராடுகையில், குறிப்பாக வடக்கெல்லைப் போரில் இராஜாஜி தலைமையிலான அரசு அவரைக் கைது செய்து சிறையில் அடைத்ததையும் இராஜாஜிக்கு அவர் எழுதிய கடிதத்தையும் பற்றிக் குறிப்பிட்டிருப்பார். அக்கடிதத்திலேயே தாங்கள் என் தலைவர். அந்த வகையில் தங்கள் ஆணைக்குக் கட்டுப்பட்டவன். ஆனால் தலைவர்கள் வருவார்கள்; போவார்கள்; தமிழ்நாடு அப்படி வந்து போகும் பொருளல்ல. என்றென்றும் நிலைத்திருக்கும் புனித பூமி. தலைவருக்குக் காட்டவேண்டிய மரியாதைக்காக, தமிழகத்தின் எல்லைகளைப் பறி கொடுக்க என்னால் இயலாது, என்று எழுதியிருப்பார் (எனது போராட்டம், பக். 369-370). இக்கடிதம் தமிழக வடக்கெல்லைப் போருக்கு எதிராக இராஜாஜி இருந்தார் என்பதைக் காட்டி நிற்கும். மங்கலங்கிழார் அழைப்பின் பேரில் ம.பொ.சி. வடக்கெல்லைப் போராட்டத்தில் ஈடுபட்டார் என்பது வரலாறு. ஆயினும் சென்னைத் தலைநகரை மீட்பதிலே இராஜாஜி உதவி செய்ததையும் அவர் பங்கையும் எனது போராட்டத்திலேயே மிகவும் விரிவாகப் பதிவு செய்திருப்பார் ம.பொ.சி.

      மற்றொன்று, பெரியார் வேலூர் கூட்டத்திலே சொன்னதாக நீங்கள் பதிவு செய்திருக்கும் கருத்து (திராவிடத்தால் வீழ்ந்தோம், பக்.47). அது பற்றிய உங்கள் எண்ணம் உண்மையே. அதற்கு அரணாக, இதே விடயம் பற்றி ம.பொ.சி. எனது போராட்டத்திலே கூறியிருப்பதை நகலெடுத்து இணைத்துள்ளேன். தட்சிண ராஜ்யம் திட்டத்தை எதிர்க்கவும், தேவிகுளம்-பீர்மேடு தாலுக்காக்களை மீட்கவும், தமிழ்நாடு பெயர் கோரிக்கைக்கு வெற்றி தேடவும் அனைத்துக் கட்சிகளும் கலந்த ஒரு கூட்டணியை அமைக்க விரும்பி ம.பொ.சி. மூன்று முறை பெரியாரைச் சந்தித்துப் பேசியபோதும், அப்போராட்டத்தில் தான் பங்கேற்க வேண்டுமானால் தி.மு.க. இல்லாத கூட்டணி அமைக்கப்படவேண்டும் (அதாவது - தி.மு.க. இதில் பங்கேற்கக் கூடாது) என்பதே பெரியார் விதித்த நிபந்தனை என்பதையும், இந்த விடயத்தில் - அனைத்துக் கட்சிகளையும் போராட்டத்தில் இணைக்க எண்ணிய - ம.பொ.சி.யால் பெரியாரைத் திருப்திப்படுத்த முடியவில்லை என்பதையும் அவரது தன்வரலாறு தெரிவிக்கிறது (எனது போராட்டம், பக். 501-504).

      திராவிடத்தால் வீழ்ந்தோம் என்ற நூல் ஐந்து பதிப்புகள் கண்டிருப்பதும், திருத்திய பதிப்புகளாக வெளிவருவதும் மகிழ்ச்சிக்குரியது. அடுத்தடுத்த பதிப்புகளில் இணைக்க இத்தகவல்களும் தங்களுக்கு உதவியாக இருக்கும் என்று நம்புகிறேன்.

                            என்றும் நட்புடன்,

                               தி.பரமேசுவரி

1 comment:

  1. ஐயா ம.பொ.சி.அவர்கள் எவர் தூண்டியும் போராட்டம் நடத்தியதில்லை. அல்லது விளம்பரத்துக்காக எதையும் செய்பவரும் இல்லை. தன் மனத்துக்கு சரி என்று தோன்றினால் அதற்காக எதையும் தியாகம் செய்ய வல்லவர். எல்லைப் போராட்டம் எவராலும் தூண்டப்பட்டதல்ல; அவர் மனத்தில் தமிழன் வஞ்சிக்கப்படுகிறான் என்ற உணர்வினால் உண்டான இயற்கையான உணர்ச்சி வெளிப்பாடு எல்லைப் போராட்டம். ஆனால் ஆந்திரர்கள் சென்னைக்கு உரிமை கொண்டாடி "மதறாஸ் மனதே" என்ற போது "தலைகொடுத்தேனும் தலை நகரைக் காப்போம்" என்றெழுந்தவர் ஐயா. அதற்கு ராஜாஜி ஆதரவு இருந்தது. அப்போதைய சென்னை மேயர் டி.செங்கல்வராயன் நேரடியாகவும் அந்தப் போரில் ஈடுபட்டார். சென்னை துறைமுகம் அருகில் முதல் லைன் பீச் சாலையில் ஒரு விளக்குக் கம்பத்தின் உச்சியில் அமைந்திருந்த ஒரு மர மேடையில் நின்று செங்கல்வராயன் கடல்போல் திரண்டிருந்த போராட்டக் காரர்கள் மத்தியில் பேசிய பேச்சை நேரடியாகக் கேட்டவன் நான். ஐயாவின் போராட்டங்களில் தமிழர்களின் நலன் நாட்டு நலன் தேசிய நலன் இவை மட்டுமே இருந்தன. சுயநலம், சுய விளம்பரம் எதுவுமே கிடையாது. யாரையும் திருப்தி செய்யவும் அவர் எந்தச் செயலையும் செய்ததில்லை.

    ReplyDelete

Note: Only a member of this blog may post a comment.