Nov 16, 2010

மாநில சுயாட்சியும் சட்ட மேலவைக் கலைப்பும்

- சிலம்புச்செல்வர் ம.பொ.சி (1.6.1986, செங்கோல்)

நன்றி: இளந்தமிழன், ஜூலை 2010

தமிழகத்தில் ஆளும் கட்சியாகவுள்ள அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் மாநிலங்களுக்குக் கூடுதல் அதிகாரம் கோரி வருகின்றது. இதனை, அண்மையில் சென்னைக்கு வந்த நீதிபதி சர்க்காரியா கமிஷனுக்குத் தந்த மனுவிலும் வலியுறுத்தியுள்ளது, அ.தி.மு.க வின் செல்வாக்கிலுள்ள தமிழக அரசு.
இதற்காக அதனைப் பாராட்டலாம்.

ஒரு அரசியல் கட்சியாயினும் சரி; அதன் செல்வாக்கிலுள்ள அரசானாலுஞ்சரி; தன் கொள்கை வழியில் நடந்து கொள்ளக் கடமைப்பட்டிருக்கின்றன.

குறிப்பாக, மாநிலங்களுக்குக் கூடுதல் அதிகாரங்கள் கோரும் ஒரு கட்சியின் ஆட்சி, தானே விரும்பி மத்திய அரசின் தலையீட்டைக் கோருவது முறையாகாது.


தமிழக சட்ட மேலவையைக் கலைக்கும் விஷயத்திலே அ.தி.மு.க அரசு தன் மாநில சுயாட்சிக் கோரிக்கைக்கேற்பச் செயல்பட்டுள்ளதா?

ஒரு மாநிலத்தின் சட்ட மேலவையைக் கலைப்பது பற்றி அரசியல் சட்டத்தின் 169(1) விதி கீழ் வருமாறு கூறுகிறது:

சட்டப் பேரவையின் மொத்த உறுப்பினர்களில் பெரும்பான்மையோராலும், சட்டமன்ற கூட்டத்திற்கு வந்திருந்து வாக்களிக்கும் உறுப்பினர்களில் 3 இல் 2 பங்குக்குக் குறையாத பெரும்பான்மை உறுப்பினர்களாலும், அத்தகைய தீர்மானம் ஒன்றை நிறைவேற்றினால், நாடாளுமன்றம் சட்டம் ஒன்றை இயற்றி, சட்ட மேலவை உள்ள ஒரு மாநிலத்தில் அச்சட்ட மேலவையை எடுத்துவிட அல்லது அத்தகைய மேலவை இல்லாத ஒரு மாநிலத்தில் அத்தகைய மேலவை ஒன்றை உருவாக்க ஏற்பாடு செய்யலாம்.

இதன்படித்தான் 14.5.66 இல் தமிழக சட்டப் பேரவையானது, கீழ்வரும் தீர்மானத்தை நிறைவேற்றியது:

அரசியல் சாசனத்தின் 169 ஆவது ஷரத்தின் 1 ஆவது பிரிவின்படி தமிழ்நாடு சட்டமன்ற மேலவை ஒழிக்கப்பட வேண்டும் என்று தமிழ்நாடு சட்ட மன்றப் பேரவை தீர்மானிக்கிறது.

இந்தத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதும் தமிழக சட்டமன்ற மேலவை ஒழிக்கப்பட்டதாகி விடவில்லை. ஏனெனில், அதற்கான இறுதி அதிகாரம் மாநில அரசுகளில் ஒன்று என்ற வகையில் தமிழக அரசுக்கு இருக்கவில்லை. அதனால், தமிழக சட்டப் பேரவை நிறைவேற்றியுள்ள தீர்மானம் மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டு, அதன் அங்கீகாரத்திற்காக - அதாவது, அதன் தலையீட்டிற்காகத் தமிழக அரசு காத்துக் கொண்டிருக்கிறது.

நடைமுறையிலுள்ள அரசியல் சட்டப்படி இதில் தவறு எதுவும் இல்லையென்று சொல்லலாம். ஆனால், மாநில சுயாட்சி கோரி வரும் அ.இ.அ.தி.மு.க அரசானது, வேறு வகையான நடைமுறையைக் கடைப்பிடித்த்டிருக்கலாம். அதாவது, மேலவையைக் கலைக்கும் அதிகாரத்தைப் பெற முதலில் அது முயற்சி செய்திருக்கலாம். இதற்கு தி.மு.க ஆட்சிக் காலத்திலே, அதனால், நீதிபதி ராசமன்னார் தலைமையில் நியமிக்கப்பட்ட  மைய மாநில உறவு ஆய்வுக்குழு வின் அறிக்கை  வழிகாட்டுகிறது.

அந்த அறிக்கையானது, மத்திய அரசின் தலையீட்டைக் கோரி அதன் மூலம் தன் வசமுள்ள சட்டமன்ற மேலவையை மாநில அரசு ஒழிப்பதை விரும்பவில்லை.

உண்மையான சமஷ்டி ஆட்சி நிலவும் உலக நாடு எதிலும் சட்டமன்ற மேலவைக் கலைப்பு அதிகாரம் மைய அரசிடம் இல்லை; மாநில அரசிடமே இருக்கிறது. தமிழர் வசமுள்ள ஒரு அவையைக் கலைப்பதற்கு மைய அரசின் தலையீட்டைக் கோருவது, என்றென்றைக்குமே மாநில அரசுக்கு சுயாட்சி கிடைக்காதபடி செய்து விடும். இது, நீதிபதி ராசமன்னார் குழு தனது அறிக்கையில் எடுத்துக் காட்டியிருப்பதாகும்.

தமிழக சட்டமன்ற மேலவையை ஒழித்து விடுமாறு மாநில சட்டப் பேரவை மத்திய அரசைக் கேட்டுக் கொண்டதால் மட்டுமே, அதனை நிறைவேற்றி வைக்க மத்திய அரசு கட்டுப்பட்டிருக்கவில்லை. தமிழக சட்டப் பேரவையின் தீர்மானத்தை ஏற்று, சட்டமன்ற மேலவையைக் கலைக்க மத்திய அரசு மறுக்கவும் செய்யலாம். அப்படி மறுத்தது, முன்னர் ஆந்திர மாநிலத்திலே!

அதனால், இது, மாநில அரசின் சுயமரியாதைப் பிரச்சினையாகிறது.

தமிழக சட்டப் பேரவையின் கோரிக்கையை ஏற்க மத்திய அரசு மறுக்குமானால் என்ன செய்வது? இதனால், மாநில - மத்திய அரசுகளிடையே மோதல் ஏற்படுவது தவிர்க்க முடியாததாகி விடும்.

அப்படித்தான் ஏற்ற்பட்டது ஆந்திர மேலவைக் கலைப்பு விஷயத்திலே!

அதனாற்றான், நீதிபதி ராசமன்னார் தலைமையில் அமைந்த மைய - மாநில உறவு ஆய்வுக்குழு இந்திய அரசியல் சட்டத்தின் 169 (1) விதியைத் திருத்த வேண்டுமென்று பரிந்துரைத்தது. அதாவது, ஒரு மாநிலத்தில் சட்ட மேலவை இல்லையானால், அதனை அமைத்துக் கொள்ளவும் இருக்குமானால், அவசியமில்லையெனத் தோன்றும்போது அதை ஒழித்திடவும் மாநில சட்டமன்றப் பேரவைக்கே இறுதி அதிகாரம் இருக்க வேண்டும் என்கிறது நீதிபதி ராசமன்னார் கமிஷனின் பரிந்துரை. அந்தப் பகுதி வருமாறு:

 அமெரிக்க ஐக்கிய நாடுகள், ஸ்விட்சர்லாந்து, ஆஸ்திரேலியா ஆகியவற்றில் மாநிலத்தின் சட்டமன்ற அவைகளின் எண்ணிக்கையை முடிவு செய்வது அந்த மாநிலமேயாகும். அதில் இணைப்பாட்சி அரசுக்கு அல்லது பொது அரசுக்குத் தொடர்பு ஏதுமில்லை. ஆகவே, சட்டமன்ற மேலவையை நீக்குவதற்கு அல்லது ஏற்படுத்துவதற்கு வகை செய்ய மாநில சட்டப் பேரவைக்கு அதிகாரம் அளிக்கும் வகையில் உறுப்பு 169 (1) - திருத்தப்படலாம் என்று பரிந்துரைக்கிறோம்
     (மைய- மாநில உறவு ஆய்வுக்குழு அறிக்கை - தமிழ்: பக்கம் 62)

நீதிபதி சர்க்காரியா கமிஷனிடம் அ.தி.மு.க அரசு கொடுத்த சாட்சியத்திலே கூட இந்தக் கோரிக்கை வலியுறுத்தப்படவில்லையென்பது சட்டமன்றத்தின் இரு அவைகளிலும் வைக்கப்பட்ட அறிக்கையிலிருந்து தெரிகிறது. அது வருமாறு:

169 ஆம் பிரிவில் என்ன சொல்லியிருப்பினும், சட்டப் பேரவையின் மொத்த உறுப்பினர்களில் பெரும்பான்மையோராலும், சட்டமன்றக் கூட்டத்திற்கு வந்திருந்து வாக்களிக்கும் உறுப்பினர்களில் 3 இல் 2 பங்குக்குக் குறையாத பெரும்பான்மை உறுப்பினர்களாலும், அத்தகைய தீர்மானம் ஒன்றை நிறைவேற்றினால், நாடாளுமன்றம் சட்டம் ஒன்றை இயற்றி சட்ட மேலவை உள்ள ஒரு மாநிலத்தில் அச்சட்ட மேலவையை எடுத்துவிட அல்லது அத்தகைய மேலவை இல்லாத மாநிலத்தில் அத்தகைய மேலவை ஒன்றை உருவாக்க ஏற்ற்பாடு செய்யலாம் என்ற சொற்றொடரைக் கொள்ள வேண்டும். இப்பகுதியைக் கீழ்கண்டவாறு மாற்றியமைத்தல் நலம்.

குடியரசுத்தலைவர் மாநில சட்டப் பேரவையின் அத்தகைய தீர்மானம் வரப் பெற்றதிலிருந்து 14 நாட்களுக்குள் சட்ட மேலவையை எடுத்து விடுவது அல்லது உருவாக்குவது தொடர்பான அவசியம் பற்றி அல்லது அவசரம் பற்றி ஆலோசனை கூறுவதற்காக அத்தகைய தீர்மானத்தை இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தின் 143 ஆம் பிரிவின் கீழ் உச்ச நீதி மன்றத்திற்கு அனுப்பி உச்ச நீதிமன்றம் அதற்கு எதிராக ஆலோசனை கூறியிருந்தாலன்றி, சட்டப் பேரவையின் மொத்த உறுப்பினர்களில் பெரும்பான்மையோராலும், சட்ட மன்றக் கூட்டத்திற்கு வந்திருந்து வாக்களிக்கும் உறுப்பினர்களில் 3 இல் இரண்டு பங்குக்குக் குறையாத பெரும்பான்மை உறுப்பினர்களாலும், அத்தகைய தீர்மானம் ஒன்றை நிறைவேற்றினால் நாடாளுமன்றம், சட்டம் ஒன்றை இயற்றி, சட்ட மேலவை உள்ள ஒரு மாநிலத்தில் அச்சட்ட மேலவையை எடுத்துவிட அல்லது அத்தகைய மேலவை இல்லாத ஒரு மாநிலத்தில், அத்தகைய மேலவை ஒன்றை உருவாக்க ஏற்பாடு செய்ய வேண்டும்.

ராசமன்னார் கமிஷனின் பரிந்துரையை விடவும் அ.தி.மு.க அரசின் கோரிக்கையே எனக்குப் பிடித்திருக்கிறாது. ஆம்; இந்திய தேசிய ஒருமைப்பாடும் தமிழ் மாநிலத்தின் உரிமைப்பாடும் இணைந்திருக்கிறதல்லவா!

( மாநில - மத்திய உறவுகள் குறித்துத் தமிழ்நாடு அரசின் கருத்துகள் - தமிழ்: பக். 45 )

இந்தச் சூழ்நிலையில் நீதிபதி சர்க்காரியா கமிஷன் அறிக்கை வெளியாகி அதன் மீது மத்திய அரசு இறுதி முடிவு எடுக்கும் வரையிலாவது தமிழக சட்டமன்ற மேலவையைக் கலைக்கும் விஷயத்திலே அ.இ.அ.தி.மு.க அரசு சிறிது பொறுமை காட்டியிருக்கலாம்.

மாநில சுயாட்சி, அதாவது, அதிகாரப் பரவல் கொள்கையில் உறுதிப்பாடுடைய அதனிடம் இதனை எதிர்பார்க்கத் தமிழின மக்களுக்கு உரிமை உண்டு.

                                                                                         
(சட்ட மேலவையை முதல்வர் எம்.ஜி.ஆர் கலைத்தபோது ஐயா ம.பொ.சி எழுதியது )

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.