Dec 8, 2010

"நான் ம.பொ.சியின் ஆள் என்றதும் எம்.ஜி.ஆர். மகிழ்ந்து போனார்'' : தமிழ் பற்றாளர் த. மணி

- மணி ஸ்ரீகாந்தன் 
நன்றி: http://www.thinakaran.lk

கொழும்பு கலை இலக்கிய வட்டத்தில் த. மணிக்கு ஒரு நிலையான பெயர் இருக்கிறது. ஆரம்பகாலத்தில் சிலம்புச் செல்வர் ம. பொ. சி. யின் கொள்கைகளை கொழும்பில் பரப்புவதற்காக ரொம்பவும் பாடுபட்டவர்தான் இவர். பட்டிமன்றம், நாடகம் என்று கலையுலகில் ஒரு ரவுண்ட் வந்தவர்.

தனது எழுபதாவது வயதிலும் இன்றும் உழைத்துக் கொண்டுதான் இருக்கிறார். கொழும்பிலுள்ள ஒரு நிறவனத்தில் கணக்காளராக பணியாற்றிவரும் த. மணியின் அந்தக் கால அனுபவங்கள் பற்றி கேட்டோம். தனது இனிக்கும் அனுபவங்களை இப்படி சுவைப்படச் சொல்கிறார் த. மணி.

"இப்போ எனக்கு எழுபது வயதாகிறது. சும்மா ஓய்வாக இருந்து சாப்பிட வேண்டிய வயதானாலும் கூட இன்றும் உழைத்துக் கொண்டுதான் இருக்கிறேன். ஏனென்றால் என் இளம் வயதில் சேமித்து வைக்காமல் செல்வத்தைத் தவறவிட்டுட்டேன்" என்று வருத்தப்படும் த. மணி தனது பூர்வீகம் பற்றி இப்படி விவரிக்கிறார்.
"எங்க அப்பா பெயர் ராஜகோபாலபிள்ளை தங்கப்பபிள்ளை. எங்க அப்பாவும், அம்மாவும் தமிழ் நாட்டிலிருந்து இலங்கைக்கு வந்து கொழும்பில குடியேறி இங்கேயே பிரஜாவுரிமை பெற்று இலங்கையை நிரந்தர வதிவிடமாக மாற்றிக்கொண்டார்கள். என் அம்மா பெயர் ஜெகநாத அம்மாள்.
அப்பா லேடீஸ் டெய்லராக உடுகம்பளையில் வசதியாக இருந்தார். நான் பிறந்தது கண்ணாரத்தெருவில்தான். எனக்கு ஒரு சகோதரரும் ஒரு தங்கையும் இருந்தார்கள். இப்போ நான் வசிப்பது உணுப்பிட்டி வத்தளையில்" என்றவரிடம் பாடசாலை கல்வி பற்றிக் கேட்டோம்.

"அரிவரி படிக்கப் போனது விவேகானந்த ஸ்கூலுக்குத் தான்! எங்க வீட்டுப் பக்கத்திலேயே ஸ்கூல் இருந்ததால் நானே தனியா ஸ்கூலுக்குப் போயிடுவேன்.

ஒரு அரைக்கால் சட்டை, வெள்ளை சட்டையை போட்டுக்கிட்டு அந்த அதிகாலை வேளையில் பாடசாலை செல்வது ஒரு சுகமான அனுபவம்! மீண்டும் அப்படியொரு காலம் வாராது" என்று ஏக்கமாக எம்மை பார்க்கும் மணி, மேலும் தமது பள்ளி அனுபவம் பற்றி இப்படித் தொடர்கிறார்.
"அந்தப் பாடசாலையில் ஆறுமுகம் என்று ஒரு வாத்தியார் இருந்தார். அவர்தான் எனக்கு அகரம் கற்றக்கொடுத்த ஆசான். அதன் பிறகு, செல்லத்துரை மாஸ்டர், நடராஜா ஆகியோரும் எனக்கு படிப்பித்தார்கள்.

இவர்களில் கே. நடராஜா நல்ல இலக்கிய கலை ஆர்வம் மிக்கவர். அவரின் தூண்டுதலால்தான் நான் கலையுலகில் கொஞ்சமாவது பிரகாசிக்க முடிந்தது.

சின்ன வயது நண்பர்களின் பெயர்கள் இப்போது ஞாபகத்தில் இல்லை. எனக்கு பன்னிரெண்டு வயதாக இருக்கும் போது, சண்முகம் சர்மா, சுப்பிரமணியம் சர்மா, கே. நவசோதி ஆகியோர் எனக்கு நண்பர்களாக இருந்தார்கள்" என்ற த. மணியிடம் கொழும்பு இலக்கிய வட்டத்தில் நீங்கள் எப்படி பிரவேசம் செய்தீர்கள் என்று கொக்கி போட்டோம்.
"அப்போது ஐம்பத்திரெண்டாம் ஆண்டாக இருக்கும்... ஆட்டுப்பட்டித்தெருவில் சென்போல்ஸ் வாலிபர் சங்கம் என்று ஒரு அமைப்பு இயங்கி வந்தது.
                                        (ம. பொ. சியுடன் த. மணி இடமிருந்து வலமாக முதலில் அமர்ந்திருப்பவர்.)    
அந்த அமைப்பின் ஒரு நிகழ்வாக பாரதி சொற் பயிற்சி என்ற பயிற்சி நிகழ்வு ஒவ்வொரு சனிக்கிழமையும் ஆட்டிப்பட்டித் தெருவில் அரங்கேறி வந்தது. அப்போது முற்போக்கு எழுத்தாளர் சங்கம் வெள்ளவத்தை பகுதியிலேயே இயங்கி வந்தது.
      
"அந்த சங்கத்தை சேர்ந்த பலரும் பாரதி சொற் பயிற்சி நிகழ்வில் கலந்து கொள்ள வருவார்கள். குறிப்பாக எச்.எம். பீ. மொஹிதீன், சில்லையூர் செல்வராஜன், ஜுபைர் இளங்கீரன், நீர்வை பொன்னையன், டொமினிக் ஜீவா உள்ளிட்ட பலரும் கலந்து கொள்வார்கள்.
சும்மா ஏதோ நிகழ்வு நடக்கிறதே என்று வேடிக்கை பார்க்கத்தான் நான் சென்றேன். ஆனால் அங்கே நடக்கும் சொற்போர் சரவெடிகளால் கவரப்பட்டு அந்த பாரதி சொற்பயிற்சி மன்றத்தில் நானும் ஐக்கியமானேன்.
தமிழ்நாட்டு பத்திரிகைகள், சஞ்சிகைகள் எல்லாம் சாதாரணமாக கொழும்பில் விற்கப்பட்டு வந்த காலம். அதிகமான தமிழ்நாட்டு பத்திரிகைகளையே நம்மவர்கள் வாசித்து பழக்கப்பட்டிருந்தார்கள்.
நான் மட்டும் விதிவிலக்காக இருக்க முடியுமா! எல்லோருக்கும், அண்ணாவையும், பெரியாரையும், பிடித்துப் போக எனக்கு ம. பொ. சியை ரொம்பவும் பிடித்திருந்தது. தங்களின் அபிமான தலைவர்களின் கட்சி கழகங்களின் பெயரால் அவரவர் மன்றங்களை ஆரம்பித்து தெருவுக்கு தெரு பிரசார பணிகளை முன்னெடுத்து வந்திருந்தார்கள்.
எனக்கும் அவர்கள் போல ஒரு மன்றம் ஆரம்பிக்க ஆசை. எனது நண்பர்களான சீதாராமன், குமாரசாமி உள்ளிட்ட சிலரை இணைத்துக் கொண்டு ம. பொ. சி. மன்றத்தை ஆரம்பித்தேன்.
அங்கு மன்றத்தின் பெயரால் நடைபெறும் சமூகப்பணிகள் இலக்கிய நிகழ்வுகள் போன்றவற்றை நிழல் படங்கள் எடுத்து ஐயா ம. பொ. சிக்கு அனுப்பி வந்தோம். அவற்றைப் பார்த்து மகிழும் ஐயா தனது கைப்படவே கடிதம் எழுதி அனுப்புவார். பிறகு ஐயாவை இலங்கைக்கு அழைத்து வந்தோம்.
எமது அனேக நிகழ்வுகளில் ஐயா கலந்து சிறப்பித்ததை நினைத்தால் ரொம்பவும் பெருமையாக இருக்கிறது. ம. பொ. சி. ஐயா மூன்று முறை இலங்கைக்கு வந்திருக்கிறார்.
   
கடைசியாக அவர் இங்கு வந்த போது, எமது மன்ற உறுப்பினர்கள் 'ம. பொ. சி. மன்றத்தின் பெயரை மாற்றி பாரதி மன்றம் என்று வைத்தால் நல்லாயிருக்கும்' என்று யோசனை சொல்ல, நானும் ஐயாவிடம் இது பற்றி கேட்க, ஐயாவின் முகத்தில் ஒரு மலர்ச்சி தோன்றியது. "ரொம்பவும் நல்ல விசயம். நான் ஒரு தனி மனிதன். ஆனால் பாரதி உலகம் முழுவதும் தெரிந்த ஒரு தேசிய கவிஞன். நிறையவே பாடி சாதித்திருக்கிறான். அவனின் பெயரை எனது மன்றத்திற்கு சூட்டுவது ரொம்பவும் சிறந்தது. ஆனால் எனது கொள்கைகளை மட்டும் அப்படியே மன்றம் பின்பற்ற வேண்டும்" என்று ஆசி வழங்கினார்.
அதுவரை காலமும் ம. பொ. சி. மன்றமாக இயங்கி வந்த எமது மன்றம் பாரதி கலா மன்றமாக பெயர் மாற்றம் பெற்று செயற்படத் தொடங்கியது. இலங்கை வானொலியில் சற்சொருபவதிநாதன், சில்லையூர் செல்வராஜன் உள்ளிட்ட பலர் பாரதி கலா மன்றத்தின் வளர்ச்சிக்காக தமது ஆதரவையும், உதவியையும் செய்தார்கள் என்பதை மறக்க முடியாது. நாடகத் துறையில் ராஜேந்திர மாஸ்டர் இயக்கிய திருந்தியவர்கள் அப்புறம் நீயே என் தெய்வம் உள்ளிட்ட சில நாடகங்களை எழுதியிருக்கிறேன்.
   
இப்போது...   
அப்போது வித்தகரின் சிருஷ்டி இலக்கிய வாசகர் மன்றத்தின் ஒன்று கூடல் புதுச்செட்டி தெருவில் உள்ள வித்தகனின் வீட்டில் நடைபெறும். கொழும்பில் உள்ள அனைத்து கலைஞர்களும் அங்கே வந்து விடுவார்கள்.
அப்படி வந்தவர்களில் இன்று பலரும் பல இடங்களுக்கு இடம்பெயர்ந்து, புலம்பெயர்ந்து சென்று விட்டார்கள்.
குறிப்பிட்ட சிலர்தான் இன்னமும் கொழும்பில் இருக்கிறார்கள். அவர்களில் சிலரை கொழும்பின் பிரதான வீதிகளை கடந்து செல்லும் போது காண்பதுண்டு. வணக்கம் சொல்லிவிட்டு அவர்களும், நானும் போய்கிட்டே இருக்கிறோம். இலக்கியம், கலை பற்றி இன்று பேசுவதற்கு எவருக்கும் நேரமில்லை.
அவர்களில் சிலர்தான் இன்னமும் கலையோடு வாழ்ந்து வருகிறார்கள். மக்கள் தொலைக்காட்சியில் இவர்கள் நிகழ்ச்சியை செய்து வரும் வி. கே. டி பாலனை அடிக்கடி தொலைக்காட்சியில் பார்ப்பதுண்டு. வித்தகன் வீட்டில் பார்த்து பேசியதற்கு பிறகு அவரை நான் தொலைக்காட்சியில்தான் பார்த்திருக்கிறேன்.
செல்லசாமியின் தேர்தல் வெற்றிக்காக ரொம்பவும் பாடுபட்டவர்தான் இந்த வி. கே. டி. அப்போது ரொம்பவும் அமைதியான சுபாவம். ஆனால் நல்ல உழைப்பாளி. இன்று அமைதியாகவும், ஆளுமையாகவும் பேசுகிறார்.
அவரை தொலைக்காட்சியில் பார்க்கும் போது ரொம்பவும் பெருமையாக இருக்கிறது என்றவரிடம் கொழும்பு பட்டிமன்றங்களின் முன்னோடி என்று உங்களை சொல்கிறார்களே? என்று கேட்டோம்.
விவேகானந்த சபையில் ஆழ்வார் பிள்ளை என்பவர்தான் விவாத நிகழ்ச்சிகளை நடத்தி வந்தார். ஒருமுறை என்னையும் ஒரு குழுவை அமைத்துக் கொண்டு அவர்களோடு விவாதம் செய்ய வரும்படி அழைத்தார்.
நானும் என் நண்பர்கள் சிலரை அழைத்துச் சென்று விவாதம் செய்தேன். அப்படி நான் பேசிய பட்டிமன்ற விவாதங்களில் கம்பளை தாசனும் என் அணியில் அங்கம் வகித்தார்.இன்று கொழுமபில் பட்டிமன்றங்கள் நடப்பது அரிதாகிவிட்டது. சேட்டிலைட் தொலைக்காட்சிக்குள் வாழ்க்கையை எல்லோரும் தொலைத்துக் கொண்டிருக்கிறார்கள்.
உங்கள் வாழ்க்கையில் காதல் என்ன செய்தது? என்று கேட்டோம்.
சினிமாவில் வருவது போல ஒரு பெண்ணை துரத்தித் துரத்திக் காதலிக்கும் அளவிற்கு எனக்கு தைரியம் இருக்கவில்லை. இப்போது மாதிரி அப்போது இல்லை.
காதல் என்றால் என்னவென்று தெரியாமலேயே வளர்ந்த காலம் அது. ஒரு பெண்ணை தொட்டு பேசினாலே பெரிய குற்றம் மாதிரி பார்த்த காலம்.
இப்போ அப்படியா! ஒரு பெண்ணும் ஆணும் கை குலுக்கி கொண்டு ஹாய் சொல்லிக் கொண்டே பக்கத்தில் அமர்ந்து பேசிக் கொள்கிறார்கள் என்று நிகழ்காலத்தை நினைத்துப் பெருமூச்சு விடும் மணியிடம் திருமணம் பற்றி கேட்டோம்.
என் நண்பர்களும், எனது குடும்பத்தினரும் பார்த்து பேசித்தான் எனக்கு கல்யாணம் செய்தார்கள். மனைவி பெயர் தேவிகாராணி. எனது முப்பத்தோராவது வயதில் எனக்குத் திருமணம் நடைபெற்றது.
ஜெம்பட்டா தெருவில் இருந்த ஒரு மண்டபத்தில் திருமணம் நடந்தது. திருமணத்திற்கு தினகரன் பத்தரிகையில் பணிபுரிந்த பாலச்சந்திரன், எஸ். ஆர். நடராஜா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு வாழ்த்தினார்கள் எனது நண்பரும் படப்பிடிப்பாளருமான கோலி என்பவர் திருமணப்படங்களை எடுத்தார்
மறக்க முடியாத நபர்கள்!
என் வாழ்க்கையில் எத்தனையோ பேர் வந்து போனார்கள். ஆனால் இன்றும் மனதை விட்ட அகலாது நிற்பவர்கள் கொஞ்சம் பேர்தான். அவர்களில் சிலம்புச் செல்வர் ம. போ. சி. பி.பி. தேவராஜ், ரவூப் ஹக்கீம் உள்ளிட்ட சிலரை இன்றும் நினைக்கிறேன். மறக்க முடியவில்லை
ரொம்பவும் மகிழ்ச்சியாக இருந்தது?
நண்பர்களுடன் இருக்கும் ஒவ்வொரு நிமிடத்தையும் மகிழ்ச்சியான பொழுதாகவே நான் நினைக்கிறேன்.
மறக்க முடியாத ஒரு சம்பவம் பற்றிக் கேட்டோம்.
ஒரு நாள் இரவு நண்பர் கம்ப ளைதாசன் எங்கள் வீட்டிற்கு வந்தார். எம். ஜி. ஆரும், சரோஜாதேவியும் கொழும்புக்கு வந்திருக்கிறார்கள்.
அவர்களுக்கு ஒரு தேநீர் விருந்துபசாரம் வழங்கவிருக்கிறோம். அந்த நிகழ்வில் எம். ஜி.ஆரை வாழ்த்தும் ஒரு வாழ்த்துப்பா ஒன்றை எழுதித்தர வேண்டும் எனக் கேட்டார்.
நானும் எனக்கு தெரிந்த விடயங்களை வைத்து ஒரு வாழ்த்துப்பா தயார் செய்து கம்பளையிடம் கொடுத்தேன். அடுத்த நாள் எம். ஜி. ஆரை பாராட்டும்அந்த நிகழ்விற்கு நானும் சென்றிருந்தேன்.
கம்பளை வாசித்த வாழ்த்துப்பாவை செவிமடுத்த புரட்சித் தலைவர் யார் இதை எழுதியது என்று கேட்டிருக்கிறார். உபசாரம் முடித்து அவர் விடைபெற்றுச் செல்லும் போது வரிசையாக நின்றிருந்த எங்களிடம் வந்து கை குலுக்கினார்.
நெற்றியில் திருநீறும் குங்குமமுமாக நின்றிருந்த என்னைக் கண்டதும், "நீங்கள் யாரென்று சொல்லவே இல்லையே" என்றார் எம் ஜி. ஆர். அதற்கு "நான் அய்யா ம. பொ.சியின் ஆள்தான் நான்" என்றேன்.
"ஆ அப்படியா? அய்யாவும் நாங்களும் இப்போ ஒன்றாகிவிட்டோம். உங்களை பார்த்தது ரொம்பவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. நாங்கள் நிறைய பேச வேண்டி இருக்கிறது. ஆனால் என்னை வீரசேசரி பத்திரிகை நிறுவனத்திற்கு அழைத்திருக்கிறார்கள் அதற்கு செல்ல வேண்டி இருக்கிறது. எதுவும் நினைத்துக் கொள்ளாதீர்கள் மன்னியுங்கள்! "என்று கூறி விட்டுச் சென்றார் எம். ஜி. ஆர். எவ்வளவு பெரிய மனிதர்; என்னிடம் இவ்வளவு பண்புடன் பேசினாரே என்பதை நினைக்கும் போதே என் உட்பு சிலிர்க்கிறது
ம்.... அது ஒரு காலம் என்று நீங்கள் இன்றும் நினைத்து ஏங்குவது?
நான் அப்போ விவேகானந்தா சபை பள்ளிக்கூடத்தில் படித்துக் கொண்டிருந்தேன். எங்கள் பள்ளிக்கூடத்துக்குப் பக்கத்தில் ஒரு சுடுகாடு இருந்தது.
அங்கே பேய் குடியிருப்பதாக பேசிக் கொள்வார்கள். ஆனால் நாங்கள் அதற்கெல்லாம் பயப்படவில்லை. பள்ளிக்கூடம் முடிந்ததும் பையன்களோடு சேர்ந்து அந்த சுடுகாட்டுக்கு மேலேதான் கிரிக்கெட், புட்போல் விளையாடுவோம்.
சுடுகாட்டுக்கு மேலே புதர்மண்டிக் கிடந்த காட்டையெல்லாம் அழித்த பிறகு அந்த இடம் ஒரு சிறிய மைதானம் போலவே மாறிவிட்டது. அந்த இடம் இப்போது இல்லை.
அந்த சுடுகாட்டுக்கு மேலே இருந்த மைதானத்தில்தான் இப்போது ஆட்டுப்பட்டித் தெரு மகளிர் கல்லூரி அமைந்திருக்கிறது. அந்த இடத்தைக் கடந்து போகும் போது அந்த சுடுகாட்டு மைதானம் ஞாபகத்தில் வரும்"
வாழ்க்கையைப் பற்றிய அவரின் புரிதலை த. மணி இப்படிச் சொல்கிறார்.


வாழ்க்கைப் பேறு என்பது ஒரு முறைதான் வரும்! அதை இனிமையானதாக நாம்தான் மாற்றி வாழ வேண்டும். என் வாழ்க்கை பயணத்தில் என்னோடு பயணித்தவர்கள் எல்லோருமே நல்லவர்கள்.
அதனால் நான் 1சீழிu தவறி விழவில்லை. இன்றும் அப்படித்தான் வாழ்கிறேன். வாழ்க்கை ரொம்பவும் மகிழ்ச்சியானது. ஒரே ஒருமுறை கிடைக்கும் வாழ்க்கையை அப்படித்தான் பார்க்க வேண்டும் "என்று கூறி முடித்தக் கொண்டார் த. மணி.

2 comments:

  1. இனிய மலரும் நினைவுகள்.
    பகிர்தலுக்கு மிக்க நன்றி,பரமேசுவரி

    ReplyDelete
  2. பகிவுக்கு நன்றி சகோ..தொடருங்கள் உங்கள் சிறப்பான பணியை..

    ReplyDelete

Note: Only a member of this blog may post a comment.