Dec 28, 2010

எழுத்தாளர் ஜெயமோகனுக்கு எழுதிய கடிதம்

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,
 
வணக்கம்.
 
கடந்த ஞாயிற்றுக் கிழமை கேணி கூட்டத்தில் தங்களைச் சந்தித்ததில் மிகவும் மகிழ்ச்சி. தமிழ்த் தேசியம் தொடர்பாகவும் திராவிட அரசியல் தொடர்பாகவும் எனக்கு சில கேள்விகள் இருந்தன. அன்றைய சூழலில் கேட்க இயலவில்லை. இந்திய தேசியமும் தமிழ்த் தேசியமும் முரணானவை என்று நீங்கள் கருதுகிறீர்களா? மிகப் பொருத்தமான காலகட்டத்தில் எழுந்த தமிழ்த் தேசியம் குறித்த ஓர்மை, அதே சமத்தில் தோன்றிய திராவிட அரசியலால் சிதைந்து போனதா? வகுப்புவாதம் மற்றும் இனவெறுப்பை முன்னிறுத்தாமல் பண்டைய இலக்கியப் பரிச்சயங்களின் வழியாக வடித்த தமிழ்த் தேசிய நிலைப்பாட்டுடன் தமிழரசுக் கழகம் என்ற கட்சியை வழிநடத்திப் பிறகு அந்நிலைப்பாட்டிலிருந்து விலகிப் போன ம.பொ.சிவஞானம் பற்றி உங்களது கருத்து என்ன?
 
அன்புள்ள
 
தி.பரமேசுவரி
 
அன்புள்ள பரமேஸ்வரி அவர்களுக்கு
 
ம.பொ.சிவஞானம் அவர்களைப்பற்றி என் புரிதல் அல்லது மதிப்பீட்டை நான் விரிவாகவே எழுத வேண்டும். திராவிட இயக்கம் உருவாக்கிய பிளவுப்போக்குள்ள தமிழ் தேசியத்தை எதிர்கொள்ள காங்கிரஸ் தரப்பில் இருந்து உருவான ஒருமைப்பாட்டு நோக்கமுள்ள தமிழ் தேசியத்தை அவர் முன்வைத்தார் என்று எண்ணுகிறேன். அது முக்கியமான ஒரு தரப்பு. ஆனால் காங்கிரஸ் அவரை கைவிட்டது. அதற்கு பெரும்பாலும் காமராஜ் அவர்களே காரணம். அந்தத் தரப்பின் பண்பாட்டு முக்கியத்துவத்தை உணர காமராஜ் அவர்களால் இயலவில்லை.
 
இந்தியாவின் ஒட்டுமொத்த தேசிய அமைப்புக்குள் பல்வேறு மொழிவாரி உபதேசியங்கள் உள்ளன. அவை தனி நாடுகளாக தனித்தியங்க முடியாது. காரணம் இந்நாட்டின் விரிவான மக்கள் பரவல். விரிவான பண்பாட்டுப்பரவல். இந்நாடு ஒரு ஒற்றைப்பண்பாட்டு தேசியமாகவும் உள்ளது. இந்த மைய அமைப்புக்குள் ஒவ்வொரு கூறும் தன் தனித்தன்மையை தக்கவைத்துக்கொள்ளவும் வளர்க்கவும் வேணிய தேவை உள்ளது. அதற்கு பிளவுப்போக்கில்லாத, ஒருமைநோக்கு கொண்ட, ஆக்கபூர்வமான தேசிய உருவகம் தேவை. அதாவது தேசிய உருவகத்தை பாசிசமாக மாற்றும் பொக்குக்கு எதிரான நேர்நிலை தேசியம்

ஈ.எம்.எஸ் அவர்கள் கேரள தேசியம் குறித்து பேசும்போது அதைத்தான் பேசினார் என்பது என் எண்ணம். அதை ஈ.எம்.எஸ்ஸும் கேரள தேசியமும் என்ற கட்டுரையில் பேசியிருக்கிறேன். மபொசியின் அந்த தரப்பு வலுபெற்றிருந்தால் இன்றைய வெறுப்புத்தேசிய குரல்கள் இத்தனை எழுந்திருக்காது
 
ஒருமைப்பாட்டுக்கு, ஆக்கபூர்வமான தேசியத்திற்கு பண்பாட்டில் பயிற்சி தேவை. மொழியில் தேர்ச்சி தேவை. வெறுப்புக்கு, பாசிசத்துக்கு முச்சந்தியில் கூச்சலிடும் முரடர்களே போதும்
 
மபொசி தோற்கடிக்கப்பட்டது -நண்பர்களாலும் எதிரிகளாலும் அவரது தனிப்பட பலவீனங்களாலும்- ஒரு பெரிய இழப்பே.

ஜெ
 
அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,
 
வணக்கம். தாங்கள்  27.12.10 அன்று எழுதிய ம.பொ.சி, காமராஜ், ராஜாஜி.. கட்டுரை படித்தேன். தமிழக வரலாற்றை இன்னும் எப்படியெல்லாம் திரித்து எழுத உத்தேசித்திருக்கிறார்களோ, இப்படி எத்தனை பேர் கிளம்பியிருக்கிறார்களோ என்றுதான் தோன்றியது. தமிழக வரலாற்றை (குறிப்பாக எல்லைப் போராட்டம்) யார் எப்படி எழுதினாலும் அதைச் சகித்துக் கொண்டும் வேடிக்கை பார்த்துக் கொண்டும் இருக்கத் தமிழன் இத்தனைக் கால அடிமை வாழ்வில் பழக்கப்படுத்தப்பட்டுத் தானே இருக்கிறான். ஆனால் எல்லாத் தமிழர்களையும் நீங்கள் அப்படி நினைத்துவிட்டால் எழுத்தாளர் ஜெயமோகன் அவர்களே, அது உங்கள் தவறு. நான் முன்னர் எழுதிய ம.பொ.சி தொடர்பான கடிதத்திற்குத் தாங்கள் கொடுத்த பதிலை மேலே  கொடுத்திருக்கிறேன்.
 
"திராவிட இயக்கம் உருவாக்கிய பிளவுப்போக்குள்ள தமிழ் தேசியத்தை எதிர்கொள்ள காங்கிரஸ் தரப்பில் இருந்து உருவான ஒருமைப்பாட்டு நோக்கமுள்ள தமிழ் தேசியத்தை அவர் முன்வைத்தார் என்று எண்ணுகிறேன். அது முக்கியமான ஒரு தரப்பு. ஆனால் காங்கிரஸ் அவரை கைவிட்டது. அதற்கு பெரும்பாலும் காமராஜ் அவர்களே காரணம். அந்தத் தரப்பின் பண்பாட்டு முக்கியத்துவத்தை உணர காமராஜ் அவர்களால் இயலவில்லை."  

இப்படி எழுதிய நீங்களே தங்கள் மதிப்பீட்டை மாற்றிக்கொண்டது எவ்வாறோ?உங்கள் மொத்தக் கட்டுரையையும் படித்தால் சிரிப்புத்தான் வருகிறது.  கதை புனையும் ஆற்றலைத் தாங்கள் எப்படி யெல்லாம் பயன்படுத்துகிறீர்கள் என்று?
 
"தமிழரசுக்கழகம் காங்கிரஸால் உருவாக்கப்பட்டு அதன் மறைமுக ஆதரவுடன் நடத்தப்பட்டது."
 
"காங்கிரஸ் தன்னுடைய தேசியப்பார்வையை கைவிடாமல் தமிழ்ப்பெருமிதத்தை கையாள நினைத்தது. தமிழ்த்தேசியத்தை இந்திய தேசியத்தின் ஒரு பகுதியாக முன்வைக்க நினைத்தது. இதன் பொருட்டே ம.பொ.சியின் தமிழரசுக்கழகம் 1946ல் தொடங்கப்பட்டது."
 
"ஆகவே சுதந்திரத்தை ஒட்டி உருவாகிவந்த அரசியல் அதிகார ஆட்டத்தில் ஆந்திரர்களை வெல்லவேண்டிய தேவை காங்கிரஸ் அரசியல்வாதிகளுக்கு இருந்தது. அவர்கள் தேசியவாதிகளாகையால் நேரடியாக இந்திய ஒருமைப்பாட்டுக்கு எதிரான எதையும் பேச முடியாது. ஆகவே குரங்கின் கையில் குட்டியாக உருவாக்கப்பட்ட அமைப்புதான் ம.பொ.சியின் தமிழரசுக்கழகம்."
 
"ம.பொசி என்ற மனிதரும் அவரது இயக்கமும் தெலுங்கு ஆதிக்கத்துக்கு எதிராக சத்யமூர்த்தியாலும் பின்னர் ராஜாஜியாலும் உருவாக்கி முன்வைக்கப்பட்டவர்கள் என்பதே வரலாறு."
 
நீங்கள் துப்பறியும் சாம்புவா, அல்லது ஷெர்லக் ஹோம்ஸா என்று தெரியவில்லை. உங்கள் புதிய கண்டுபிடிப்புகள் மெய்சிலிர்க்கச் செய்கிறது.
 
எழுத்தாளர் ஜெயமோகனை வாசிக்கின்ற, அவருடைய வார்த்தைகளுக்கு மதிப்புத் தருகின்ற ஒரு வாசகர் கூட்டம் உங்கள் பின்னால் இருக்கும்போது உங்கள் சொற்களில் இன்னும் கவனமாக இருக்க வேண்டுமென்று கருதுகிறேன். நீங்கள் ஒட்டுமொத்தமாக எல்லைப் போராட்டத்தில் பங்குபெற்று அடியும் உதையும் வாங்கிச் சிறை சென்ற - உயிரிழந்த தியாகிகளையும், உங்கள் வார்த்தைகளை அப்படியே நம்புகின்ற வாசகர்களையும் அவமானப்படுத்துவதாகவே எண்ணுகின்றேன்.
 
திராவிட இயக்கங்கள் வரலாற்றைத் திரித்தும் மறைத்தும் செய்த மாயங்கள் போதாதென்று இப்போது நீங்கள் கிளம்பியிருக்கிறீர்கள் போலிருக்கிறது. மொழிவாரி மாநிலப் பிரிவினைக் கிளர்ச்சியின்போது ஆந்திர அரசியல் கட்சிகள் ஆந்திர மகா சபை என்கிற பொது அமைப்பின் கீழ் ஒன்று திரண்டபோதும் தமிழகத்தில் வழக்கமான மௌனமே நிலவியது. அப்போது பிரச்சனையை எதிர்கொண்டு, முன்னெடுத்துத் தன் கட்சியான தமிழரசுக்கழகத்தின் வாயிலாக எதிர் கொண்டவர் ம.பொ.சி. அன்றைய முதல்வராக இருந்த ராஜாஜி, சென்னை நகர மேயராக இருந்த செங்கல்வராயன் ஆகியோரும் தங்கள் பங்களிப்பினைச் செய்துள்ளனர். இவையெல்லாமே ம.பொ.சியின் எனது போராட்டம் என்ற அவருடைய வாழ்க்கை நூலில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
 
வடக்கெல்லைப் போரில் மங்கலங்கிழாரின் அழைப்பின் பேரில் சென்ற ம.பொ.சிக்கு நீங்கள் சொல்லும் ராஜாஜி எந்த உதவியும் செய்யவில்லை. அது மட்டுமல்லாமல் ம.பொ.சியும் அவரது தோழர்களும் ராஜாஜி அரசாலேயே இரு முறை சிறையிலடைக்கப்பட்டனர். தமிழரசுக்கழகத் தோழர்களான திருவாலங்காடு கோவிந்தசாமி, பழனி மாணிக்கம் என்ற இருவர் சிறையிலேயே உயிர் துறக்கின்றனர். ஆனால் அத்தனையும் முன் கூட்டியே  பேசித் திட்டமிட்ட நாடகம் என்கிறீர்கள் நீங்கள்.
 
தெற்கெல்லைப் போராட்டத்தில் அப்போதைய திருவிதாங்கூர் தமிழ்நாடு காங்கிரஸ் போராட்டத்தை முன்னெடுத்தபோது தமிழ்நாட்டிலிருந்து அவர்களுக்கு ஆதரவாகக் குரல் கொடுத்த ஒரே கட்சி தமிழரசுக் கழகம்தான். அதைக் குரங்குக்குட்டி என்று நீங்கள் என்ன சூத்திரத்தைக் கொண்டு அளவிட்டீர்களெனப் புரியவில்லை. இந்தப் போராட்டத்தில் அவருக்கு ஆதரவு தந்த ஒரே தலைவர் தோழர் ஜீவானந்தம். அப்போது அந்தப் பகுதியில் வாழ்ந்த கவிமணி, கலைவாணர் என்.எஸ். கிருஷ்ணன், டி. கே. எஸ் சகோதரர்கள் போன்றோரும் இந்தப் போராட்டத்தில் குறிப்பிடத்தக்க அளவில் பங்கு பெற்றுள்ளனர். இந்தப் போராட்டத்தில் பட்டம் தாணுப்பிள்ளை அரசினால் 11 தமிழர்கள் சுட்டுக் கொல்லப்பட்டது வரலாறு. இந்தப் போராட்டங்களின் காரணமாகவே அவர் காங்கிரசிலிருந்து வெளியேறும் நிலை ஏற்பட்டது. சென்னை மாநகராட்சியில் ம.பொ.சி ஆல்டெர்மேனாகப் பதவி வகித்தபோதுதான் முதல் முறையாக மாநகராட்சியின் வரவு செலவுக் கணக்கினைத் தமிழில் தாக்கல் செய்தார். அதன் சின்னமாக தமிழர் அரசுகளின் சின்னமான வில், புலி, மீன் ஆகியவற்றைப் பொறிக்கச் செய்தார்.  இத்தனை வரலாற்று விரிவையும் தாங்கள் தங்கள் சொல்வன்மையினால் திரிக்கப் பார்க்கிறீர்கள்.
 
"பொய்யுடை ஒருவன் சொல்வன்மையினால்
மெய் போலும்மே மெய் போலும்மே"
 
என்னும் வரிகள்தான் என் நினைவுக்கு வருகிறது.

மதிப்பிற்குரிய ஜெயமோகன் அவர்களே, வரலாற்றை உங்களைப் போன்றவர்கள் எப்படி, எத்தனை முறை திரிக்க முயற்சித்தாலும் அது தன் உண்மையான வடிவைக் காட்டியே நிற்கும். தனிப்பட்ட உங்கள் காழ்ப்புணர்ச்சிகளையெல்லாம் இப்படிக் கட்டுரைகளில் கட்டுக்கதைகள் கட்டி உங்களை நம்பும் வாசகர்களையும் ஏமாற்றாதீர்கள்.
 
ம.பொ.சியின் பிழைபட்ட மதிப்பீடாக நான் கருதுவது, காந்திக்குப் பிறகான காங்கிரசை மொழிவழி தேசிய இன, சுய நிர்ணயத்தை அங்கீகரிக்குமென்று நம்பியது; தன் வழியில் முழுமையாகச் செயல்பட விடாமல் காலில் கட்டிய இரும்புக் குண்டாகக் காங்கிரஸ் பற்று - நம்பிக்கை அவரைப் பின்னிழுத்தது. இரண்டாவது, தமிழக வரலாற்றின் விழுமியங்களை அறியாத - தன் காலத்தில் அவர் முழுமையாக எதிர்த்து வந்த - தி.மு.கவை 1967 தேர்தலில் ஆதரித்தது.
 
இறுதியாக ஒன்று, கட்டுரையில் ம.பொ.சி பற்றி நீங்கள் பயன்படுத்தியிருக்கும் சொற்கள் அவரை இழிவுபடுத்துவதாகவும் அவதூறு கற்பிக்கும் நோக்கத்துடனும் எழுதப்பட்டிருப்பதாக உள்ளது. உங்களுடைய எழுத்து ஆளுமைக்கு இது மரியாதை சேர்ப்பதாக இல்லை. இனியாவது அரைகுறையாக அறிந்துகொண்டு வரலாற்றை எழுதுவதைத் தவிர்ப்பீர்கள் என்று நம்புகிறேன்.
 
என்றும் தோழமையுடன்,
 
தி. பரமேசுவரி.
28.12.10     
  
8 comments:

 1. எழுத்தாளர் ஜெயமோகன் அவர்களுடைய கட்டுரை மற்றும் தி.பரமேஸ்வரி அவர்களின் பதில் கடிதம் இவற்றைக் குறித்து விரிவான பதிலை நான் கொடுக்க விரும்புகிறேன். அதைப் பின்னர் செய்கிறேன். இப்போது சில அடிப்படை உண்மைகளைச் சொல்ல விரும்புகிறேன். ஐயா ம.பொ.சி. மகாத்மா காந்தியடிகளால் ஈர்க்கப்பட்டவர். காந்தியத்தில் முழு நம்பிக்கை உள்ளவர். ஒன்றுபட்ட இந்தியாவைக் காண விரும்பிய முழு தேசிய வாதி. ஆனால் சுதந்திரத்துக்குப் பிறகு இருந்த காங்கிரசார் அந்தந்த மாநில உரிமைகள், மொழிகள் பற்றி பேசினாலே அது இந்திய தேசியத்துக்கு எதிரானது என்ற எண்ணம் கொண்டிருந்தார்கள். பண்டித ஜவஹர்லால் நேருகூட மொழிவழி மாகாணப் பிரிவினைக்கு எதிர்ப்பு தெரிவித்திருந்தார். அந்த காலகட்டத்தில் பொட்டி திருராமுலு உண்ணாவிரதமும் இறப்பும் மொழிவழி மாநில பிரிவினைக்கு வித்திட்ட நிலையில், தமிழ், தமிழ் தேசியம் என்ற உரிமைக்குரல் எழுப்பிக் கொண்டிருந்த ஐயா, தமிழ்த்தேசியமும் இந்திய தேசியமும் வேறு வேறல்ல, மத்தியில் கூட்டாட்சி, மாநிலத்தில் சுயாட்சி என்று தமிழுக்கு அரியணைத் தேடித் தந்தார். இந்த கொள்கையை காங்கிரஸ், குறிப்பாக காமராஜ் போன்றோர் ஏற்றுக் கொள்ளவில்லை. தங்கள் விருப்பத்துக்கு மாறாக காங்கிரசுக்குள் 'தமிழரசுக் கழகம்' என்றொரு கலாச்சாரக் கழகத்தை ஐயா நடத்துவதை காமராஜ் விரும்பவில்லை. அவருடைய மொழி, இனம் சார்ந்த போராட்டங்களுக்கு காமராஜ் எதிர்ப்புத் தெரிவித்து வந்தார். நேரம் வந்தபோது காங்கிரசுக்காகத் தன் உடல்நலத்தையும் இழந்த ஐயாவைக் காங்கிரசிலிருந்து நீக்கினார். இதுதான் வரலாற்று உண்மை. தமிழ் இன உணர்வு காரணமாக ஐயா வடவெல்லைப் போராட்டம் தொடங்கிய போது காங்கிரசின் ஒத்துழைப்பு அவருக்குக் கிடைக்கவில்லை. தேவிகுளம் பீர்மேடு போராட்டத்தின் போது காமராஜ் அவர்கள் "குளமாவது, மேடாவது" என்று பேசி போராட்டத்தின் கூரை மழுங்கடித்தார். ஒரே ஒரு முறை மட்டும் ராஜாஜி முதல்வராக இருந்த காலத்தில் சென்னை நகரத்தை ஆந்திரர் உரிமை கொண்டாடியபோது "தலை கொடுத்தேனும் தலைநகரைக் காப்போம்" என்று போராடியபோது ராஜாஜி மேயர் டி.செங்கல்வராயனை அனுப்பிப் போராட்டத்தில் கலந்து கொள்ளச் செய்து ஆதரவு கொடுத்தார். ஒன்று மட்டும் உறுதி. ஐயா அவர்கள் காந்தியக் கொள்கைகளில் அசைக்கமுடியாத உறுதி கொண்டிருந்த போதும், தமிழ், தமிழர், மாநில உரிமைகள் என்று வரும்போது தமிழ்த்தேசியம் இந்திய தேசியம் இரண்டும் ஒன்றே என்று உரிமைக்காகப் போராடியவர். இந்த காலகட்டத்தில் திராவிட இயக்கத்தார் திராவிடநாடு கோரிக்கை எழுப்பிவந்தனர். கோரிக்கை திராவிடநாடு என்றாலும் கூட, அவர்கள் தமிழ், தமிழர் என்ற உணர்ச்சியைத் தூண்டி போராடத் தொடங்கினர். அவர்களுடைய பிரிவினை வாத தமிழுணர்வுக்கு எதிராக இந்திய தேசிய உணர்வை ஊட்டிட ஐயா தமிழ்த் தேசிய உணர்வைத் தமிழுக்காகவும், தமிழருக்காவும் போராடினார். பின்னர் விரிவான விளக்கங்களைத் தருகிறேன். இப்போது இது போதுமென நினைக்கிறேன். இதையெல்லாம் சொல்ல நான் யார் என்பதும் தெரிய வேண்டுமல்லவா? இப்போது என் வயது 75. நான் பள்ளியில் பத்தாம் வகுப்பு படிக்கும் காலத்திலிருந்து ஐயாவின்பால் ஈர்க்கப்பட்டு அவர் இயக்கத்தோடு இரண்டற கலந்திருந்தவன். ஐயாவையும், அவர் கொள்கைகளையும், அவர் பத்திரிகை வாயிலாகவும் முழுமையாக அறிந்தவன். மற்றவை பின்னர்.

  ReplyDelete
  Replies
  1. நல்ல விளக்கம். எனக்கு தெரிந்த வரை கன்யாகுமரி, நாகர்கோவில், செங்கோட்டை, திருத்தணி போன்ற இடங்களை திரு ம.பொ.சி. அவர்களின் போராட்டத்தினால் பெற்றோம். He was unsung Hero. அவருக்கான மதிப்பை தமிழ் சமுதாயம் அப்போதும் கொடுக்கவில்லை; இப்போதும் கொடுக்கவில்லை.
   தவறு இருந்தால் சுட்டிக் காட்டுங்கள். கற்றுக் கொள்கிறேன்.
   அருமையான விளக்கத்திற்கு நன்றி ஐயா.

   Delete
 2. திரு பரமேஸ்வரி அவர்களுக்கு....இந்த சினிமா எழுத்தாளர் ஜெயமோகன் எப்பொழுதும் இப்படியான வரலாற்று கற்பனைகளை அவிழ்த்துவிட்டு, பிறரை அவமானப்படுத்துவதை ஒரு தொழிலாகவே பின்பற்றுகிறார்... உ.ம். அருந்ததிராயை குருவிமண்டை என்று விமர்சனம் செய்கிறார். மொத்த பெண்ணியவாதிகளும் வேடிக்கைத்தான் பார்த்தார்கள்.யாரும் குறைந்தபட்சம் அவரது நாகரிகமற்றத்தன்மையை நோக்கி ஒரு கண்டனம் கூட எழும்பவில்லை. அவரை அருவருப்பாக ஒதுக்கவதே சரியான வழியாக தோன்றுகிறது.

  ReplyDelete
 3. தமிழ்த்தேசியம் தொடர்பாக ஆரோக்கியமான அலசல்களை தங்களுடைய வலைப்பதிவில் மேற்கொள்வதற்கு பாராட்டுக்களையும் வணக்கத்தையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

  தமிழ்நாட்டில் தமிழனின் ஆளுமையை அனைத்து நிலைகளிலும் அனைத்துறைகளில் ஒழித்தபெருமை காங்கிரசுக்கும், திராவிட அரசியலுக்கும், தி.மு.க.விற்கும், கருணாநிதிக்கும் உண்டு. இது வரலாற்கு உண்மையும் கூட.

  எந்த மதத்திலிருந்தாலும், கட்சியிலிருந்தாலும், பல்வேறு தமிழ்சாதி அமைப்புகளில் இருந்தாலும் ஒவ்வொரு தமிழனும் தன் இனத்திற்கான அரசியலை முன்னெடுக்க வேண்டும்.

  ReplyDelete
 4. THAMIZHARASU KAZHAGAM SHOULD BE REVIVED FORTHWITH,ON THE OCCASION THE BIRTH CENTENARY OF THAMIZHAR THALAIVAR MA.PO.SI.BY THE REMAINING FOLLOWERS OF MA.PO.SI.
  THIRU.Pe.Su.MANI MAY BE REQUESTED TO ORGANIZE AN AD-HOC COMMITTEE TO ORGANIZE THE REVIVAL OF THAMIZHARASU KAZHAGAM.HE MAY BE REQUESTED TO LEAD THE PRESIDEUM&THAMIZHARUVI.MANIAN OF GANDHIYA MAKKAL IYAKKAM MAY BE REQUESTED TO MERGE HIS ORGANIZATION&LEAD THE NEW ORGANIZATION.

  ReplyDelete
 5. "பொய்யுடை ஒருவன் சொல்வன்மையினால்
  மெய் போலும்மே மெய் போலும்மே"

  ReplyDelete
  Replies
  1. நிஜம் தான். உண்மை பின்வாங்குகிறது. கோயபல்ஸ் பிரசாரம் தான் எடுபடுகிறது. வேதனையான நிலை தான்.

   Delete
 6. அருமையான பதிவு.
  எனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறேன்.
  நிஜத்தை எழுதும் போது கசக்கும். உங்கள் முயற்சியை கை விடாதீர்கள்.
  எங்கள் இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்.

  ReplyDelete

Note: Only a member of this blog may post a comment.