Jan 13, 2011

எழுத்தாளர் ஜெயமோகனின் எதிர்வினை

நன்றி: http://www.jeyamohan.in/
கட்டுரை பற்றிய மாற்றுக்கருத்துக்களை தெரிந்துகொண்டேன். பொதுவாக நமக்கு பிரியமானவர்களை அப்பழுக்கற்றவர்களாக உருவகித்துக்கொள்ளும் மனப்பழக்கம் உண்டு. ஒருவரிடமிருந்து கற்றுக்கொள்வதற்கு அது நல்ல மனநிலையே. ஆனால் அரசியலில் அது சரியாக அமையாதென்பது என் என்ணம். பற்றில் இருந்து வரும் வரிகளுடன் விவாதிக்கமுடியாது.

நான் காமராஜ், ராஜாஜி, மபொசி ஆகிய அனைவரைப்பற்றியும் நிறைகுறைகளுடனேயே பார்க்கிறேன். அவர்களைப்பற்றி அவர்க்களோ அவர்களின் ஆதரவாளர்களோ எழுதும் நூல்களை மட்டும் சார்ந்திருப்பதில்லை. என்னுடைய புரிதல்கள் வெறும் வாசிப்பை மட்டும் சார்ந்தவை அல்ல. எல்லைபோராட்ட வீரரும் காங்கிரஸ் முன்னோடியுமான தாணுலிங்கநாடார் தேரூர் சிவன்பிள்ளை போன்றவர்களிடம் மிகநெருக்கமாக பழக்வும் அவர்களின் அந்தரங்க கடிதங்களை முறைப்படுத்தவும் வாய்ப்புகிடைத்தவன் என்ற முறையில் உருவான புரிதல்.

இக்கட்டுரையில் நான் மபொசியை குறைத்துமதிப்பிடும் தொனி வந்துவிட்டிருந்தால் அதற்காக வருந்துகிறேன். அவர் ஒரு தனிப்பட்ட மக்கள் சக்தி அல்ல. அவருடைய ஆதரவுதளம் காங்கிரஸால், ஒரு பதிலிப்போரின் பொருட்டு உருவாக்கி அளிக்கப்பட்டது. அவர் நடத்திய எல்லா போராட்டங்களும் அவர் காங்கிரஸுக்குள் இருந்தபோதே நடத்தினார்.வெளியேற நேரிட்டபின் அவர் தனியாளானார். இது வரலாற்று உண்மை. ஆனால் அவர் தமிழ்மீதும், இந்தியதேசியத்தின் ஒளிமிக்க பகுதி என்ற கோணத்தில் தமிழ்த்தேசியம் மீதும் கொண்ட பற்று உண்மையானது. அவரது வரலாற்றுப் பங்களிப்பு முக்கியமானது. அதிகார உட்கட்சிஅரசியல் காரணமாக அவர் காமராஜால் வெளியேற்றப்பட்டது துரதிருஷ்டவசமானது என்றே நினைக்கிறேன். காங்கிரஸ் தமிழுணர்ச்சியற்றது என்ற வாதங்கள் வலுப்பெற அது வழியமைத்தது. காங்கிரஸின் தேசியநோக்கை தமிழுணர்வுடன் பிணைக்கவே ஆளில்லாமலாயிற்று. அவரது தரப்பு காங்கிரஸுக்குள் நீடித்திருந்தால் திராவிட இயக்க அரசியல் இந்த அளவுக்கு ஒற்றைப்படை வெற்றியை அடைந்திருக்காதென்றே நினைக்கிறேன். இக்கட்டுரையிலும் அதே தொனியுடன் மட்டுமே எழுதியிருக்கிறேன்.

ராஜாஜி கட்சித்தாவல் மூலம் பதவிக்கு வந்தார் என்பதும் என்ன விளக்கமளித்தாலும் வரலாற்று உண்மை. நேரு அதை விரும்பவில்லை, பதவி விலக கோரினார், ராஜாஜி மறுத்துவிட்டார். இச்செய்தியை சமீபத்தில் ராமச்சந்திர குகாவின் காந்திக்குப்பின் இந்தியவரலாறு நூலிலும் கண்டதாக நினைவு. அதுவே முதல் கட்சித்தாவல், முதல் மைனாரிட்டி அரசு. நான் திருவுருக்களை உருவாக்கவில்லை. சூழலை ஒட்டுமொத்தமான பின்னணியாக வைத்து தனிப்பட்ட அரசியல்தலைவர்களின் பங்களிப்பை புரிந்துகொள்ள முயல்கிறேன், அவ்வளவுதான்.

ஜெ

1 comment:

  1. "அவர் ஒரு தனிப்பட்ட மக்கள் சக்தி அல்ல. அவருடைய ஆதரவுதளம் காங்கிரஸால், ஒரு பதிலிப்போரின் பொருட்டு உருவாக்கி அளிக்கப்பட்டது. அவர் நடத்திய எல்லா போராட்டங்களும் அவர் காங்கிரஸுக்குள் இருந்தபோதே நடத்தினார்.வெளியேற நேரிட்டபின் அவர் தனியாளானார். இது வரலாற்று உண்மை" திரு ஜெயமோகன் அவர்களே, உங்களுடைய இந்த வரிகளிலிருந்துததான் தலைவர் ம.பொ.சியின் ஆதரவாளர்கள், அல்லது அன்பர்களாகிய நாங்கள், குறிப்பாக நான் மாறுபடுகிறேன். முதலில் காங்கிரஸ் தூண்டி அவர் எந்த போராட்டத்தையும் தொடங்கவில்லை. அவருடையா ஆதரவாளர்கள் பொதுவாக தமிழ் பற்றாளர்கள், திராவிட இயக்கத்துக்கு எதிரான சார்புடையவர்கள், அடிப்படையில் காங்கிரஸ்காரர்கள் அல்ல. தலைவர் காங்கிரசில் இருந்ததால் தொண்டர்களும் காங்கிரஸ்காரர்களாக இருந்தனர். தமிழ்ப் பற்று காரணமாகவும், திராவிட இயக்க எதிர்ப்பின் காரணமாகவும் அவரது போராட்டம் இந்த இரு முனைகளிலும் வீறுகொள்ளும்படியாக அமைந்தது. காங்கிரசிலிருந்து அவர் வெளியேற்றப்பட்ட போதுகூட அவர் தனிமைப்படுத்த வில்லை. அவரோடு இருந்த தலைவர்களும் சரி தொண்டர்களும் சரி அவருக்கு அரணாக, துணையாக, பலமாக இருந்தனர் என்பதே உண்மை. சின்ன அண்ணாமலை, கு.சா.கிருஷ்ணமூர்த்தி, கு.மா.பாலசுப்பிரமணியம், வேலூர் கோடையிடி குப்புசாமி முதலியார், கவி.கா.மு.ஷெரீப், ஜி.உமாபதி, எம்.ஏ.வேணு, ஏ.பி.நாகராஜன், வெளவாலடி சம்சுதீன் போன்றவர்களெல்லாம் காங்கிரசிலும் பின்னர் தமிழரசுக் கழகத்திலும் சிறந்த பேச்சாளர்கள். 1957 தேர்தலுக்கு முன்பாக அவர் சேலத்தில் நடத்திய 2ஆவது மாநில மகாநாட்டை நேரில் பார்த்தவன் நான். அங்கு நிலவிய உணர்ச்சிக் கொந்தளிப்பையும் நான் அறிவேன். அவர் நடத்திய போராட்டங்கள் பெருமளவில் மக்கள் பங்களிப்புடன் அமைந்தவை. சிறை சென்ற தொண்டர்கள் எண்ணிறந்தவர். அதுதான் உண்மை. உங்களுக்கென்று அபிப்பிராயம் வைத்திருக்கவும், அதை வலியுறுத்தவும் உரிமை உண்டு, மறுக்கவில்லை. அதே நேரம் நாடு போற்றும் ஒரு தலைவர் அப்படிப்பட்ட தனிப்பட்ட கருத்து காரணமாக மதிப்பில் குறைக்கப்படுகிறார் எனும்போது அவரது ஆதரவாளர்கள் உண்மை நிலவரத்தை எடுத்துரைப்பது அவசியம் என்பதால் மறுப்பு தெரிவிக்கிறேன். நன்றி.

    ReplyDelete

Note: Only a member of this blog may post a comment.