Feb 3, 2011

நாம்

இன்று, இந்தியா ஆங்கிலப் பேரரசின் இரும்புக் கரங்களிலிருந்து விடுதலை பெற்ற நாள். இந்தப் புனித நாளில் தமிழ் இனத்தின் விடுதலைக்குப் பாடுபட தமிழன் குரல் வெளி வருகின்றது. ஆம்; இந்தியாவின் விடுதலைக்காகப் பாடுபட்டு, பெற்ற விடுதலையைப் பாதுகாக்கவும் பணிபுரியும் தேசீய வட்டாரத்தின் சார்பில்தான் தமிழன் குரல் வெளி வருகிறது.

இந்தியாவின் விடுதலையில் தமிழகத்தின் விடுதலையும் அடங்கி இருக்க வேண்டும் என்பதே தமிழ் இனத்தின் ஆவல். அந்த ஆவலை நிறைவேற்றப் பணிபுரியும் தமிழரசு இயக்கத்தின் ஏடாகவே தமிழன் குரல் வெளிவருகின்றது.

 பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு தெற்கே ஆஸ்திரேலியா வரை தமிழகம் அகன்றிருந்ததாகவும், பின்னர் பஃறுளி ஆறும், குமரிக்கோடும் கடலால் கொள்ளப்பட்ட காரணத்தால் குமரிமுனை வரை குறுகி விட்டதாகவும் ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். இன்றோ அந்தக் குமரி முனைக்கும் வடக்கே இரண்டாயிரம் சதுர மைல் பிரதேசம் கேரள இனத்தவரால் அபகரிக்கப்பட்டு விட்டது.

ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முன்னே தமிழர் வடக்கே இமயம் வரை பரவி வாழ்ந்ததாகவும், பின்னர் இமயத்திற்குத் தெற்கே விந்தியம் வரை குறுகி, அப்புறம், வேங்கடம் வரை பின்வாங்கி விட்டதாகவும் கூறப்படுகிறது. இன்றோ, அந்த வேங்கடத்திற்கும் தெற்கே நாலாயிரம் சதுர மைல்கள் கொண்ட நிலப்பரப்பு ஆந்திர ஆதிக்கத்திற்கு அடிமைப்பட்டுக் கிடக்கிறது.

ஒரு காலத்தில், தமிழ் வேந்தர்கள் கடல் கடந்து சென்று சிங்களத்தையும் பர்மாவையும் தங்கள் ஆதிக்கத்தில் வைத்து ஆட்சி புரிந்ததாக சரித்திர ஆசிரியர்கள் கூறுகிறார்கள். இன்றோ, கடலுக்கு அப்பாலுள்ள பிரெஞ்சுக்காரர்கள் புதுவையையும் காரைக்காலையும் அடிமைப்படுத்தி ஆளும் அநீதியைப் பார்க்கின்றோம்.

இப்படி, பழம்பெருமைகளையெல்லாம் இழந்து, பல துண்டுகளாகப் பிளவுபட்டுக் கிடக்கும் தமிழ்ப்பகுதிகளையெல்லாம் ஒன்று சேர்த்து, ஒரு புதிய தமிழகத்தை அமைப்பதற்கென்றே ஏழாண்டுகட்குப் பிறகு இன்று பிற இனத்தவரால், பிற நாட்டவரால் ஆக்கிரமிக்கப்பட்ட தமிழ்ப் பகுதிகளெல்லாம் புரட்சி அலை மோதுவதைப் பார்க்கிறோம். ஆம்; ஏழே ஆண்டுகளுக்குள் இத்தகைய மகத்தான மாறுதல்!

தெற்கே திருவிதாங்கூர்த் தமிழ்ப்பகுதிகளில் பதினைந்து லட்சம் தமிழர்கள் படை திரண்டு போர் புரிகின்றனர். வடக்கே சித்தூர் மாவட்டத்தில் மூன்றரை லட்சம் தமிழர்கள் ஆந்திர ஆதிக்கத்தோடு போராடி வருகின்றனர்.

தமிழகத்தின் கிழக்குக் கடற்கரையோரத்தில் பிரெஞ்சு ஏகாதிபத்தியத்தை எதிர்த்து புதுவை - காரைக்கால் மக்கள் ஒரு மாபெரும் புரட்சியை நடத்தி வருகின்றனர்.

இப்படி எங்கெங்கும் தமிழ் இனத்தவர் போர் முழக்கம் செய்து வரும் நேரத்தில்தான் அவர்களுக்கெல்லாம் ஆதரவாகப் பணிபுரியத் தமிழன் குரல் வெளி வருகின்றது.

தமிழகம் தனி ஆட்சி பெற வேண்டும்; துண்டுபட்ட தமிழ்ப் பகுதிகளெல்லாம் தாய்த் தமிழகத்தோடு ஒன்றுபட வேண்டும்; தமிழகத்தில் தமிழ் ஒன்றே ஆட்சி மொழியாதல் வேண்டும்; இந்தியக் குடியரசில், தமிழர் ஒரு தனித் தேசிய இனமாக, தமிழாட்சி ஒரு சுயாட்சி அங்கமாக விளங்க வேண்டும். இவையே தமிழ் இனத்தவரின் தேசீயக் கோரிக்கைகள். இந்தக் கோரிக்கைகளுக்காகக் குரல் கொடுப்பதே நமது கொள்கை.

மற்றும் தமிழ் இனத்தவரிலேயே ஒரு சாரார் மீது இன்னொரு சாரார் ஆதிக்கம் செலுத்துவதும், சுரண்டிப் பிழைப்பதுமான சமூக, பொருளாதார ஏற்றத்தாழ்வுகள் தொலைய வேண்டும். தமிழ் இனத்தவரின் எல்லாப் பகுதியினரும் சமமாக வளர்ச்சி அடைய அடையவும், சந்தோஷமாக வாழவும் சந்தர்ப்பம் அளிக்கும் சமதர்ம நாடாகத் தமிழகம் திகழ வேண்டுமென்பதே நமது ஆவல்.

சுருங்கச் சொன்னால், மொழி, கலை, இலக்கியம், அரசியல், சமூகம், பொருளாதாரம் ஆகிய எல்லாத் துறைகளிலும் தமிழ் இனத்தின் நலன்களைக் காக்கவும் அவற்றை வளர்க்கவுமே தமிழன் குரல் விடுதலைத் திருநாளன்று வெளி வருகின்றது.

தமிழ் மக்களே! வரவேற்று வாழ்த்துக் கூறுங்கள்!

(தமிழன் குரல் தலையங்கம் - ஆகஸ்டு 1954)

1 comment:

  1. எழுச்சியூட்டுகின்றன கட்டுரை.

    வாழ்க தமிழ், ழமிழர்,நாடு,

    ReplyDelete

Note: Only a member of this blog may post a comment.