Feb 5, 2011

தமிழ் நாட்டுக்குத் தனிக்குடியரசு - பழ. நெடுமாறன்


சென்னை கன்னிமாரா நூலகம் எதிரில் அமைந்துள்ள இக்சா மையத்தில் நடைபெற்ற பேராசிரியர் அ. பெரியார் எழுதிய “தமிழ்நாடு எல்லைப் போராட்டமும் பெயர் மாற்றமும்” என்னும் நூலின் வெளியீட்டு விழாவிற்கு பழ.நெடுமாறன் தலைமை தாங்கினார். இவ்விழாவில் தமிழ் நாடு எல்லைப் போராட்ட வரலாறு மற்றும் மொழி வழி மாநிலமாக்கல் போராட்டம் பற்றி பழ.நெடுமாறன் சிறப்புரையாற்றினார். அதில் மொழி வழி மாநிலங்கள் பிரிக்கப்படலுக்கான போராட்ட வரலாறு பற்றி அவர் ஆற்றிய உரை...

மொழிவழி மாநிலத் தொடக்கப் போராட்டம் :
1920 ஆம் ஆண்டில் நாகபுரியில் நடைபெற்ற காங்கிரஸ் மாநாட்டில் இதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது என்று நூலாசிரியர் பெரியார் மிகச்சரியாகக் குறிப்பிட்டிருக்கிறார். அந்தக் காங்கிரஸிற்கு யார் தலைமை வகித்தவர் என்று சொன்னால், சேலத்தைச் சேர்ந்த விஜயராகவாச்சாரியார் அதற்குத் தலைமை வகித்தார்.

சுதந்திர இந்தியாவில் மொழிவழியாக மாநிலங்கள் பிரிக்கப்படும், இப்போது முதல்படியாக காங்கிரஸ்கட்சியை மொழிவழியாகப் பிரிக்கப்பட வேண்டும் என்ற தீர்மனத்தை திலகர் முன்மொழிய மகாத்மா காந்தி வழிமொழிந்தார். மொழிவழி மாநிலத்தின் தொடக்கம் இப்படித்தான் தொடங்குகிறது. இதை காங்கிரஸ் கட்சி ஏற்றுக்கொள்கிறது. பின்னாலே என்ன நடக்கிறது... 

உடனடியாக அன்றைக்கு சென்னை மாகாண காங்கிரஸ் கமிட்டியாக இருந்தது தமிழ் நாடு காங்கிரஸ் கமிட்டி, ஆந்திரக் காங்கிரஸ் கமிட்டி, கேரள காங்கிரஸ் கமிட்டி, கர்நாடக காங்கிரஸ் கமிட்டி என்றெல்லாம் பிரிக்கப்பட்டுவிட்டது. இப்படி இந்தியா முழுவதும் பிரிக்கப்பட்டுவிட்டது. காங்கிரஸ் இதிலே எப்போது தடுமாறியது என்றால், சுதந்திரம் அடைந்தப் பிறகு எனலாம்.

சுதந்திரம் கிடைப்பதற்கு ஓராண்டு முன்னால் 1946 ஆம் ஆண்டில் இந்தியாவிற்கு சுதந்திரம் வழங்குவது பற்றி ஆராய்வதற்காக பிரிட்டிஷ் அமைச்சரவைத் தூதுக்குழு ஒன்றை பிரிட்டிஷ் அரசு இந்தியாவிற்கு அனுப்பியது. அமைச்சரவைக்குழு இந்தியாவிற்கு வந்து அனைத்து கட்சித் தலைவர்களையும் அழைத்துப் பேசுகிறது. அப்போது காங்கிரஸ் கட்சிக்கு தலைவராக அபுல்கலாம் ஆசாத் இருக்கிறார். அவர் ஓர் ஆவணம் தயாரிக்கிறார். அந்த ஆவணத்தில் சொல்லப்பட்டது என்ன?

ஆசாத் திட்டம் :
1) இந்தியாவில் உள்ள எல்லா மாநிலங்களும் மொழி வழியாக பிரிக்கப்பட வேண்டும்.
2) மொழி வழியாகப் பிரிக்கப்பட்ட மாநிலங்களுக்கு முழுமையான சுயநிர்ணய உரிமை      அளிக்கப்பட வேண்டும்.
3) மத்தியில் உள்ள அரசாங்கத்திற்கு வெளியுறவு, பாதுகாப்பு, செய்திப்போக்குவரத்து
    இதுபோன்ற மூன்று நான்கு அதிகாரங்கள் மட்டுமே இருக்கவேண்டும். மீதமுள்ள    அனைத்து அதிகாரங்களும் மாநிலங்களுக்கு அளிக்கப்படவேண்டும்.

இதுதான் ஆசாத் தயாரித்த ஆவணம். இதை அவர் மகாத்மா காந்தியிடம் கொண்டுபோய் காட்டுகிறார். அது, முஸ்லீம் லீக் தலைவர் முகமது அலி ஜின்னா இந்தியாவை இரண்டாக பிரித்தே ஆகவேண்டும் என்று பிடிவாதமாக இருக்கிற காலகட்டம்.

ஆசாத் தயாரித்துக் கொடுத்த ஆவணத்தை பார்த்த காந்தியடிகள், யாராலும் தீர்க்க முடியாத பிரச்சனைக்கு நீங்கள் தீர்வு கண்டுவிட்டீர்கள். இதை எல்லோரும் ஏற்றுக்கொள்வார்களானால் இந்தியாவை பிரிக்கவேண்டிய அவசியம் இல்லை என்று அவர் மகிழ்ந்தார். காங்கிரஸ் கமிட்டி கூடுகிறது. அதில் ஆசாத் தயாரித்த ஆவணத்தை காந்தியே முன்மொழிந்து பேசுகிறார். இந்திய காங்கிரஸ் கமிட்டி, மொழி வழி மாநிலம் அமைவதற்கு ஏக மனதாக ஏற்றுக்கொள்கிறது.

1946 ஆம் ஆண்டு இறுதியில் அரசியல் நிர்ணய சபை அமைக்கப்படுகிறது. அந்த அரசியல் நிர்ணய சபையில் அரசியல் சட்ட அமைப்பிற்கான முன்னுரை தீர்மானத்தை இடைக்கால பிரதமர் நேரு அவர்கள் முன்மொழிந்து பேசுகிறார். ஆசாத் சொன்னதை அவரும் அப்படியே சொன்னார். மொழிவழியாக மாநிலங்கள் பிரிக்கப்படும், பிரிக்கப்படும் மாநிலங்களுக்கு முழுமையான சுயநிர்ணய உரிமை அளிக்கப்படும். மத்திய அரசிடம் சில அதிகாரங்கள் மட்டுமே இருக்கும் இந்த அடிப்படியில்தான் இந்திய அரசியல் சட்டம் உருவாக்கப்படும் என்று முன்மொழிந்து முன்னுரையாக பேசினார்.

எப்போது காங்கிரஸ் தலைவர்கள் தடுமாறத் தொடங்குகிறார்கள் என்றால்?... ம.பொ.சி கூட அவருடைய நூலில் ஓர் உண்மையை வலியுறுத்தியுள்ளார். அரசியல் நிர்ணய சபையின் இந்தத் தீர்மானத்திற்குப் பின்னால், 1948 ஆம் ஆண்டு ஜனவரி 30 ஆம் நாள், மகாத்மா காந்தி சுட்டுக்கொல்லப்படுவதற்கு ஒரு வாரத்திற்கு முன், அவரை அஸ்ஸாம் மாநிலத்து பிரதிநிதிகள் வந்து சந்தித்தார்கள். அப்போது அவர்களுக்கு ஒரு வாக்குறுதியை அளித்தார் காந்தி. அஸ்ஸாம் மாநிலத்தைச் சேர்த்துதான் பாகிஸ்தான் கேட்கிறார் ஜின்னா, அதை ஒருபோதும் காங்கிரஸ் கட்சி ஏற்காது. மொழி வழி மாநிலங்கள் அமையும் போது முழுமையான சுயாட்சி உரிமை உங்களுக்குக் கிடைக்கும். ஆகவே மொழி வழி மாநிலக்கோரிக்கையை வலியுறுத்துங்கள் என்று காந்தி, அவர்களிடம் கூறியுள்ளார். இப்படி காந்தியடிகள் இறப்பதற்கு ஒரு வாரத்திற்கு முன்னால் சொன்னாரே இன்றைக்கு அதிலிருந்து பல்டி அடித்துவிட்டீர்களே என்று, நேருவுக்கு ம.பொ.சி கடிதம் அனுப்புகிறார். இதை எல்லாம் ம.பொ.சி ‘எனது போராட்டம்’ என்னும் தனது நூலிலே குறிப்பிட்டிருக்கிறார்.

எப்போது காங்கிரஸ் தடுமாறுகிறது என்றால், பிடிவாதமாக பாகிஸ்தான் பிரிந்த பின்னால் இவர்களுக்கு பயம் வந்துவிடுகிறது.மொழி வழியாக பிரிந்தால் மேலும் இந்தியா சிதறுண்டுபோய்விடும் என்ற வகையில் நேரு,வல்லபாய் பட்டேல் போன்றவர்களின் சிந்தனைப்போக்கு அமைந்துவிட்டது. இது ஒருகாரணம்.

இரண்டாவது முக்கியமான காரணம், அன்றைக்கு இந்தியாவில் இருந்த பெருமுதலாளிகள் நேருவுக்கும், வல்லபாய் பட்டேலுக்கும் வழங்கிய ஆலோசனை. அது என்னவென்றால், பாகிஸ்தான் பிரிந்தால் பிரிந்து போகட்டும் ஒத்துக்கொள்ளுங்கள். அவர்களையும் உள்ளே வைத்துக்கொண்டு சண்டைப் போட்டுக் கொண்டிருக்க வேண்டாம். மீதமிருக்கக்கூடிய இந்தியாவை மொழிவழி மாநிலங்களாக பிரிக்காதீர்கள். எல்லா அதிகாரங்களும் மத்திய அரசிடம்தான் இருக்கவேண்டும்.(அப்போதுதான் நாங்கள் சுரண்ட முடியும்.) இந்தப் பெருமுதலாளிகளின் நிர்பந்தம் இவர்களுக்கு இருந்தது.

அன்று காங்கிரஸ் கட்சிக்குள்ளேயே சோசலிஸ்ட்டுக் கட்சி இருந்தது. காங்கிரஸ் மத்திய செயற்குழுவில் சோசலிஸ்ட்டு சார்பில் ஜெயப்பிரகாஷ் நாராயணனும், டாக்டர் லோகியா அவர்களும் அங்கம் வகிக்கிறார்கள். இந்தியாவை பிரிப்பதை ஏற்றுக்கொள்வதா? இல்லையா? என்பது பற்றி விவாதம் நடக்கிறது. ஜெயப்பிரகாஷ் நாராயணனும், டாக்டர் லோகியாவும் பிரிவினையை எதிர்த்து மிகக் கடுமையாக பேசுகிறார்கள். வல்லபாய் பட்டேலும் நேருவும் பாகிஸ்தான் பிரிவினைக்கு ஆதரவாகப் பேசுகிறார்கள். மகாத்மா காந்தி இறுதியில் சொல்கிறார்... நம்முடைய தலைவர்கள் நேருவும், பட்டேலும் ஏற்கனவே பிரிவினைக்கு ஒப்புக்கொண்டுவிட்டார்கள். ஆகவே இனி நாம் சொல்வதற்கு ஒன்றுமில்லை என்று சொல்கிறபோது, எல்லைக் காந்தி என்று அழைக்கப்படுகிற அபுல் கலாம் ஆசாத் எழுந்து நின்று பேசும் போது அழுகிறார்.

உங்களை முழுமையாக ஆதரித்து நின்றோமே. இப்போது எங்களை ஓணாய்களிடம் விட்டுவிட்டுப் போகிறீர்களே என்று அழுகிறார். இது எதுவும் நேருவின் மனதையோ, பட்டேலின் மனதையோ மாற்றவில்லை. டாக்டர் லோகியா இதுபற்றி 'The Gelte man of Partision' என்ற தனது நூலில் அழகாகச் சொல்லுகிறார்.

நேருவுக்கும், பட்டேலுக்கும் பதவி ஆசை வந்துவிட்டது. வயதாகிவிட்டது. நாம் இப்போது பதவிக்கு வராவிட்டால் எப்போதும் அமரமுடியாது என்ற கவலை அவர்களுக்கு வந்த காரணத்தினாலே, ஜின்னாவின் நிர்பந்தத்திற்குப் பணிந்து அவர்கள் பாகிஸ்தான் பிரிவினைக்கு ஒப்புக்கொண்டுவிட்டார்கள் என்று தனது நூலில் அழுத்தமாக பதிவு செய்திருக்கிறார் டாக்டர் லோகியா.

பாகிஸ்தான் பிரிந்துபோனவுடன் இவர்களுக்கு தடை ஒன்றுமில்லை. அதுவரை சுயநிர்ணய உரிமையுடைய மாநிலங்களை அமைப்பது காங்கிரஸ் கட்சியின் குறிக்கோள் என்று சொன்னவர்கள், அதிலிருந்து பின்வாங்கினார்கள்.

தமிழ் நாட்டுக்கு ஒரு தனிக்குடியரசு :
1946 இல் அரசியல் நிர்ணய சபை அமைக்கப்படுகின்ற அந்தக் காலகட்டத்தில் தமிழக வரலாற்றில் முக்கியமான ஒரு செய்தி... அப்போது ம.பொ.சி என்ன செய்தார் என்றால், மொழி வழியாக மாநிலங்கள் பிரிக்கப்படும்போது, ஒவ்வொன்றும் தனிக்குடியரசாக விளங்கவேண்டும். அப்படி தமிழ் நாட்டிற்கென்று தனிக்குடியரசு அமைக்கப்பட்டு அதற்கென்று தனி அரசியல் நிர்ணய சபை உருவாக்கப்பட வேண்டும். அது தமிழர்களுக்குரிய அரசியல் சட்டத்தை வகுக்க வேண்டும். இதேபோல் ஒவ்வொரு மாநிலமும் அவர்களுக்கான அரசியல் சட்டத்தை வகுக்க வேண்டுமே தவிர ஒட்டுமொத்தமாக இந்தியாவுக்கென்று ஒரு அரசியல் சட்டம் வகுக்கக்கூடாது என்று ம.பொ.சி அறிக்கை கொடுத்தார். அதில் அவருடன் 16 தலைவர்களும் கையெழுத்திட்டிருந்தார்கள். முதலாவது கையெழுத்து அன்றைய தமிழ் நாடு காங்கிரஸ் கட்சியின் தலைவராக இருந்த காமராஜர் கையெழுத்து ஆகும். மேலும் கம்யூனிஸ்ட் கட்சி செயலாளர் ஜீவானந்தம் போன்ற முக்கியமான தலைவர்கள் 16 பேர் கையெழுத்திட்டு அரசியல் சாசனம் என்ற பெயரிலே வெளியிட்டார்கள். மதிப்புக்குரிய என்னுடைய பேராசிரியர் தெ.பொ.மீனாட்சி சுந்தரனார்தான் இந்தச் சாசன அறிக்கையை வரைந்தவர். 

தெ.பொ. மீனாட்சி சுந்தரனார், மு.வரதராசனார் இப்படி 16 பேர் கையெழுத்துப்போட்டு தமிழ்க் குடியரசு அமைக்கப்பட வேண்டுமென்று, தமிழ் நாட்டிற்கென்று தனி அரசியல் சபை வேண்டுமென்று வலியுறுத்தி இருக்கிறார்கள்.இது ஒரு முக்கியமான சாசனம். பின்னாலே எப்படி எப்படியோ மாறிப்போனார்கள். அது வேறு. ஆனால் இப்படி எல்லாம் முறையாக நடந்திருக்கின்றன.

அகில இந்திய கம்யூனிஸ்ட்டு கட்சியின் பொதுச்செயலாளராக இருந்த பி.சி.ஜோகி அவர்கள் பிட்டிஷ் அமைச்சரவை தூதுக் குழுவைச் சந்திக்கும் போது.அவரும் ஒரு திட்டத்தைத் தருகிறார்.அந்தத் திட்டம் அபுல் கலாம் ஆசாத் என்ன சொன்னாரோ அதே திட்டம்.

மாவீரன் லெனின் சோவியத் நாட்டில் சுய நிர்ணய உரிமையுடைய குடியரசுகளை அமைத்திருக்கிறார். ஒவ்வொரு தேசிய இனத்திற்கும் சுய நிர்ணய உரிமை உண்டு. ஆகவே, லெனின் சொன்னதுபோல இந்தியாவில் உள்ள அனைத்து தேசிய இனங்களுக்கும் சுய நிர்ணய உரிமை வழங்கப்படவேண்டும் என்பதுதான் இந்திய
கம்யூனிஸ்ட்டு கட்சி அளித்த சாசனம்.

இப்படி எல்லாம் அறிக்கைச் சாசனங்கள் கொடுத்தவர்கள், இலங்கையில் உள்ள தமிழன் தனித்தேசியம் வேண்டுமென்று சொன்னால், கேட்கமுடியாது என்கிறார்கள். இலங்கையின் தேசிய ஒருமைப்பாட்டைக் காப்பதிலே ராஜபக்சேவுக்கு இருக்கிற அக்கறையைவிட டில்லியிலே இருப்பவர்களுக்கு அதிக அக்கறையாக உள்ளது. காலம் எப்படி எல்லாம் மாறுகிறது என்பதைச் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

தொகுப்பு :- எழில் 

2 comments:

  1. Indian history reveals that the big shots cheated so much for their selfish. Today Italy cheating us. After robbing our land Sonya has a place to hide with her family in Italy, but what about us and our homeland. Besides that we extend our hands and got the handcuffs from America with our own consent. It is very hard to come out. A good post. Thanks.

    ReplyDelete
  2. Latest Tamil Movies review,Tamil cinema latest News in Tamil
    www.cineikons.com

    ReplyDelete

Note: Only a member of this blog may post a comment.