Feb 16, 2011

தியாகிகளை மதிக்கும் தி.மு.க.அரசு: ம.பொ.சி. சிலையை திறந்துவைத்து கருணாநிதி பேச்சு


              
சென்னை: 09.02.2011
 
``தியாகிகளுக்கு மரியாதை செலுத்த தி.மு.க. அரசு தயங்காது`` என்று தமிழக முதல்வர் கருணாநிதி தெரிவித்தார்.

தியாகராயநகரில் தமிழறிஞர் ம.பொ.சி. சிலையை அவர் திறந்து வைத்து அவர் பேசியதாவது....``ம.பொ.சி.க்கு சிலையை அமைத்து அதைத் திறந்து வைக்கவும், அவரது குடும்பத்தினருக்கு இயன்ற நிதியுதவியை வழங்கும்  வாய்ப்பையும் நானும், திமுகவினரும் பெற்றுள்ளோம்.

அவரை மறைந்தவர் என்று கூறமாட்டேன். நம் மனங்களில் எல்லாம் அவர் நிறைந்தவர் என்பேன்.ம.பொ.சி.யை கொண்டாடுவது அவரைப் பெருமைப்படுத்துவதற்காக அல்ல. நம்மைப் போன்றவர்கள் தமிழர்களைக் காப்பாற்ற, தமிழ்நாட்டை வளமுடையதாக ஆக்க நம்மை நாமே தயார்படுத்திக் கொள்ள, நம்முடைய தன்னலத்தின் காரணமாக அவரை கொண்டாடுகிறோம்.

பள்ளிப்படிப்பு 3-ம் வகுப்பைக் கூட எட்டாமல் இருந்தாலும் முத்தமிழைக் கற்று பரப்புகின்ற பணியில் வெற்றி பெற்ற ஈடு இணையற்ற தமிழ்ச் செம்மல்களில் ஒருவராக அவர் திகழ்ந்தார்.அவரை முதன்முதலாக நான் சந்தித்தது போர்க்களத்தில் தான். அவரும் நானும் போரிட்டுக் கொண்ட போர்க்களத்தில் ஒருவரையொருவர் சந்தித்தோம்.திராவிட இயக்கத்துக்கும், தமிழரசு கழகத்துக்கும் ஏற்பட்ட மோதல்கள் ஒன்றல்ல, இரண்டல்ல. அந்த மோதல்கள் எல்லாம் இன்று மறைந்து விட்டன. மோதிக் கொண்டது இறுதியில் அணைத்துக் கொள்ளத்தான் என்ற நிலையில் அவரது சிலையைத் திறக்கும் அரும்பணியை இப்போது நிறைவேற்றியுள்ளேன்.

தமிழகத்தில் வாழ்ந்து மறைந்த பல தமிழ்ப் புலவர்கள், அறிஞர்கள். தியாகச் செம்மல்கள் ஆகியோரை மறவாமல் அவர்களின் குடும்பத்தினரின் வாழ்வாதாரத்துக்கு நிதியுதவிகளை இந்த அரசு வழங்கி வருகிறது. இதை சுய விளம்பரத்துக்காக சொல்லவில்லை.தமிழகத்தில் எதிர்காலத்தில் நீங்கள் ஆற்ற வேண்டிய கடமையுணர்வை நினைவுபடுத்தவே இதைக் கூறுகிறேன்.

சென்னை செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் நாமக்கல் கவிஞர் பெயரில் மாளிகை எனது ஆட்சியின்போது கட்டப்பட்டது.அவர் எந்தக் கட்சியைச் சேர்ந்தவராக இருந்தாலும், திராவிட இயக்கத்தை, பெரியார், அண்ணா ஆகியோரை எந்த அளவுக்கு எதிர்த்தாலும் அவைகளை எல்லாம் மறந்து ஒரு தமிழன், தமிழ் கவிஞன் என்ற முறையில் அவரை நேசித்தேன், அவரது திறமையை பூசித்தேன்.மேலவை உறுப்பினராக நாமக்கல் கவிஞர் இருந்தார். மேலவை கலைக்கப்படும் போது தனது நிலை குறித்து கடிதம் எழுதியிருந்தார். உடனே, அவருக்கு வாழ்நாள் முழுவதும் மாதம் ரூ. 200 உதவித் தொகை அரசு சார்பில் வழங்கப்படும் என்று அறிவித்தேன்.  இதற்கு அவர் நன்றியும், பாராட்டும் தெரிவித்து பதில் கடிதம் எழுதினார்.

இந்தச் செய்தியை அறிந்த அவரது நண்பர் அவ்வை டி.கே. சண்முகம் எனக்கு ஒரு கடிதம் எழுதினார். பாரதியாரின் நண்பர் பரலி சு. நெல்லையப்பருக்கும் உதவி வழங்க அதில் கோரியிருந்தார். இதையேற்று அவருக்கும் அரசு உதவித் தொகை வழங்க உத்தரவிடப்பட்டது.

நூறு ரூபாய், இருநூறு ரூபாய் எல்லாம் பெரிய தொகையா என்று நினைக்கத் தோன்றும். ஆனால், அதைப் பெற்றுக்கொண்டு அவர்கள் எனக்கு எழுதிய கடிதங்களை பத்திரப்படுத்தி வைத்துள்ளேன்.தேச பக்தியோடு, மொழிப் பற்றும் மிக்கவர்கள், விடுதலைக்காக பல்லாண்டு காலம் சிறையில் இருந்த பெரும் தலைவர்களின் அன்பையும், முத்திரையையும் பெறுவது சாதாரணமானது அல்ல.தியாகிகள் எந்த கட்சியைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் அவர்களை மறக்க மாட்டோம். அவர்களுக்கு உரிய மரியாதை செலுத்தவும் தி.மு.க. அரசு தயங்கவில்லை என்பதற்கு இவை எல்லாம் உதாரணங்கள் ஆகும்.காமராஜருக்கு மணி மண்டபம், காங்கிரஸ் பேரியக்கத் தலைவர்கள், வீடுதலை வீரர்கள், கட்ட பொம்மன், பூலித்தேவன், மருது சகோதரர்களுக்கு நினைவு சின்னங்கள் உள்ளிட்ட பல்வேறு பணிகளை நிறைவேற்றியுள்ளோம்.

தி.மு.க. பொதுக்கூட்டத்தில் எனக்கு வழங்கப்பட்ட தங்கக் கிரீடம், வாள் ஆகியவை ம.பொ.சி. குடும்பத்தினருக்கு நிதியுதவி வழங்க ரூ. 55 லட்சத்துக்கு காமராஜ் என்பவருக்கு ஏலம் விடப்பட்டுள்ளது. என்ன ஒரு வேடிக்கை பாருங்கள். ம.பொ.சி. விழாவில், கருணாநிதி ஏலம் விட, அதை காமராஜர் வாங்க இந்த அரசியல் ஒற்றுமை எதிர்காலத்திலும் விளங்கிட வேண்டும்`` இவ்வாறு முதல்வர் கருணாநிதி பேசினார்.

2 comments:

  1. 'தியாகிகளுக்குத் தமிழக அரசு மரியாதை செலுத்தும்" என்று சொன்னால் போதாதா? தியாகிகளுக்கு தமிழக அரசு மரியாதை செலுத்தத் தயங்காது என்று சொன்னால், தயங்கும் என்றும் ஒரு கருத்து தொக்கி நிற்கின்றது அல்லவா? எதையும் நேரடியாகப் பேசும் வழக்கம் சிலருக்குத்தான் உண்டு. இப்படிப் பேசுவது 'நெகடிவ்' பேச்சு வழக்கு. நான் செய்வேன் என்று சொல்வதற்கும், நான் செய்யத் தயங்க மாட்டேன்' என்பதற்கும் உள்ள வேறுபாட்டைத் தமிழ் அறிஞராகிய நீங்களே புரிந்து கொள்ளுங்கள். எது எப்படியோ, இரண்டு ஆதாயங்கள் மக்கள் மனதில் மகிழ்ச்சியை ஏற்படுத்துகின்றன. ஒன்று தலைவரின் சிலை சென்னை நகரை அலங்கரிக்கிறது. இரண்டாவது அவர் காலமெல்லாம் சுகபோகங்களைக் காணாத அவர் குடும்பம் இன்று பண வசதியை ஓரளவு பெறுகிறது. அந்தத் தியாகசீலரின் வாரிசுகள் நலமோடு வாழ உளமார்ந்த வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  2. நன்றி ஐயா. உங்களைப் போன்ற நல்ல உள்ளங்களின் வாழ்த்துகளே எங்களைச் சரியான பாதையில் செலுத்தி வருகின்றன.

    ReplyDelete

Note: Only a member of this blog may post a comment.