Feb 17, 2011

பட்டம் பழி வாங்குகிறார்!

[ம.பொ.சி.யின் தமிழன் குரல் செப்டெம்பர் 1954 இதழில் வெளிவந்த தலையங்கம்]

கடந்த ஆகஸ்டு 11ஆம் தேதி, தமிழருக்கு வெட்கத்தையும் வேதனையையும் அளித்த நாளாகும். அன்று, திருவிதாங்கூர் தமிழ்ப் பகுதிகளில் மனித வேட்டை நடத்தியிருக்கின்றனர் மலையாளப் போலீசார். தாய்த் தமிழகத்தோடு சேர விரும்பிய ஒரே பாவத்திற்காகப் பத்துத் தமிழர்கள் சுட்டுக் கொல்லப்பட்டிருக்கின்றனர்!

இதுபோன்ற கொடுமை - கொலைபாதகச் சம்பவம் தமிழினத்தாரின் வாழ்வில், தமிழகத்தின் வரலாற்றில் இதற்கு முன்பு நிகழ்ந்ததே இல்லை.

நாற்பத்தைந்து லட்சம் மலையாளிகளைக் கொண்டது திருவிதாங்கூர் - கொச்சி ராஜ்யம். அதன் அண்டையிலுள்ள சென்னை ராஜ்யமோ மூன்று கோடித் தமிழர்களைக் கொண்டது. இருந்தும் சென்னை ராஜ்யத்தோடு கலாச்சாரத் தொடர்புள்ள மக்களை ஈவிரக்கமின்றி சுட்டுக் கொன்றிருக்கிறது, அண்டையிலுள்ள சுண்டைக்காய் ராஜ்யம். எவ்வளவு துணிச்சல்!

மாபாவி ஜார் மன்னர் இரணியன் போல் அரசாண்டான் என்கின்றார் பாரதியார். இரணியன்போல் என்ன? இரணியனாகவே கொடுங்கோல் நடத்துகின்றார் பட்டம் தாணுப்பிள்ளை. இம் என்றால் சிறைவாசம், ஏன் என்றால் வனவாசம் என்ற நிலையில் தென்திருவிதாங்கூரில் கொடுங்கோல் ஆட்சி நடைபெறுகின்றது. இது கற்பனையல்ல; அங்கு தமிழ் மக்கள் அன்றாடம் கண்டுவரும் காட்சி. அனுபவித்து வரும் வேதனை!

ஆகஸ்டு 11ந் தேதி பத்துப் பேரைச் சுட்டுக் கொன்ற பின்னரும் மலையாளப் போலீசாருக்கு ரத்த வெறி அடங்கவில்லை. அந்தச் சம்பவத்திற்குப் பிறகும், கல்குளம்,விளவங்கோடு தாலுகாக்களில் தமிழ் மக்கள் சித்திரவதை செய்யப்படுகின்றனர்; கண்ணகி மரபில் வந்த தமிழ்ப் பெண்ணரசிகள் மானபங்கப்படுத்தப்படுகின்றனர்; தமிழ் இளங்காளையர்கள் அங்கங்கள் பழுதாகும்படி அடிக்கப்படுகின்றனர். சோதனை என்ற பெயரால், நள்ளிரவில் வீடுகளின் கதவுகள் உடைக்கப்பட்டுப் பொருள்கள் நாசமாக்கப்படுகின்றன.

மக்கள் பலாத்காரத்தில் இறங்கியதால்தான் போலீஸார் சுட்டனர் என்று சமாதானம் கூறுகிறார் பட்டம் தாணுப்பிள்ளை. அமைதியாகச் சென்று கொண்டிருந்த மாணவர் ஊர்வலத்தைப் போலீஸார் தடியாலடித்த பிறகே அமளி ஆரம்பித்ததாக நமக்குத்  தகவல் கிடைத்திருக்கிறது.

முதலில் பலாத்காரத்தில் இறங்கியது ஜனங்கள் என்றாலும், அதனால் போலீசாரில் எவரும் காயமடைந்ததாகத் தகவல் இல்லையே! அப்படியிருக்க, போலீசார் சுட்டதற்குக் காரணமென்ன?

அப்படியே, ஜனங்கள் திரண்டெழுந்து போலீசார் மீது பாய்ந்திருப்பினும், கண்ணீர்ப்புகை விட்டுக் கலைத்திருக்கலாம்; ஆகாயத்தில் சுட்டுப் பயமுறுத்தியிருக்கலாம்; இத்தகைய எச்சரிக்கை எதுவுமின்றி, பத்துப் பேர் சாகுமளவுக்குத் துப்பாக்கிப் பிரயோகம் செய்தது மிருகத்தனமாகும். மற்றும் துப்பாக்கிப் பிரயோகத்திற்குப் பிறகும் தொடர்ந்து அடக்குமுறையை அமுல் நடத்தி வருவது தமிழரைப் பழிவாங்கும் செயலாகவன்றி வேறுவிதமாக எண்ணுவதற்கில்லை.

ஹிட்லர் ஜெர்மனியில், அவனால் வெறுக்கப்பட்ட யூதர்களைக்கூட போலீசார் இவ்வளவு மோசமாகக் கொடுமைப்படுத்தவில்லை. ஆம், ஹிட்லரையும் மிஞ்சி விட்டார் இடதுசாரிக் கட்சியின் முதலமைச்சர் பட்டம் தாணுப்பிள்ளை.

துப்பாக்கிப் பிரயோகத்தால் மாண்டவர்களின் பிரேதங்களை உறவினர்களிடம் கொடுக்க மறுத்து புனிச்சமூடு என்ற இடத்தில் பெற்றோல் ஊற்றிக் கொளுத்திச் சாம்பலாக்கினராம் போலீசார். மற்றும், பட்டம் தாணுவின் கொடுங்கோலாட்சியில் குடியிருக்க அஞ்சி, நூற்றுக்கணக்கான குடும்பங்கள் இரவோடு இரவாக திருநெல்வேலிக்கு ஓடி வந்து விட்டனவாம்.

இதெல்லாம் உண்மையென்றால், பாஞ்சாலப் படுகொலையின்போது கூட இத்தகைய கோரச் சம்பவங்கள் நிகழ்ந்ததில்லையென்று கூறலாம். ஜெனரல் டயரையும் மிஞ்சிவிட்டார் பட்டம்.

பட்டம் தாணுப்பிள்ளை வேண்டுமென்று திட்டமிட்டே திருவிதாங்கூர்த் தமிழரைப் பழிவாங்கி வருகின்றார். ஆக 11உ கலவரத்திற்குக் காரணம் மலையாளப் போலீசாரே அன்றித் தமிழ்ப் பொதுமக்கள் அல்ல. அன்று நடந்த சம்பவம் பற்றிப் பகிரங்க விசாரணை நடத்தப்படுமாயின் இந்த உண்மை வெளிப்படுவது திண்ணம்.

திருவிதாங்கூர்த் தமிழ்ப்பகுதிகள் தமிழகத்தோடு சேருவதை எத்தகைய பாதகத்தைச் செய்தும் தடுத்து விடுவதென்று பட்டம் தாணுப்பிள்ளை கங்கணம் கட்டிக் கொண்டுவிட்டார். அதன் விளைவுதான் தென் திருவிதாங்கூரில் நடந்துவரும் அடக்குமுறைப் போராட்டம்.

மற்றும், பட்டம் தாணுப்பிள்ளை 118 பேர் கொண்ட தி.கொ. அசெம்பிளியில் 18 பேர் பலத்துடன் ஆட்சி நடத்துகின்றார். ஆகவே எந்த நேரத்திலும் பனம்பள்ளியின் காங்கிரஸ் கட்சியார் அவரைப் பதவியினின்று விலக்கிவிடக் கூடிய அபாயமிருக்கிறது. அந்த அபாயத்திலிருந்து தமது ஆவியைக் காப்பாற்றிக் கொள்வதற்காகவும், தமிழருக்கு எதிராகப் போர்க்கோலம் கொண்டிருக்கிறார் பட்டம் தாணுப்பிள்ளை. அதன்மூலம் பி.சோ.கட்சி அல்லாத பிற கட்சி மலையாளிகளின் ஆதரவையும் பெற்றுவிட முடியும் என்பது அவருடைய நம்பிக்கை.

திருவிதாங்கூர்த் தமிழரின் பிரதேச உரிமைக் கோரிக்கை, ஜனநாயகப்படி நேர்மையானது. ஆகவே, நியாயத்தை ஒட்டியது.  தமிழர்களைச் சுட்டுக் கொல்வதால், தமிழ்ப்பகுதிகளை ஜீரணித்து விடலாம் என்று பட்டம் தாணுப்பிள்ளை கருதுவாராயின் அது பலிக்கப் போவதில்லை. தென்திருவிதாங்கூர் முழுவதையுமே சுடுகாடாக்கி விட்டாலும் அந்தப் பகுதியில் ஒரு அங்குலத்தைக் கூட மலையாளிகள் அடைய முடியாது. இது திண்ணம்.

கல்குளம், விளவங்கோடு தாலுகாக்களில் போலீசார் செய்துள்ள கொடுமைகள் பற்றிப் பகிரங்க விசாரணை நடத்த வேண்டும். அந்த விசாரணைக் குழுவை மத்திய அரசினரே நியமிக்க வேண்டும்.

திருவிதாங்கூர்த் தமிழ்ப் பகுதிகளைத் தாய்த் தமிழகத்தோடு சேர்ப்பதற்குச் சாதகமாக மாகாணப் புனரமைப்புக் கமிஷன் இடைகால அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும்.

மேற்சொன்ன இரண்டு கோரிக்கைகளும் உடனடியாக நிறைவேற்றப்படாவிடில், தமிழகத்தில் மலையாளிகளை வெறுக்கும் உணர்ச்சி பரவுவதைத் தடுக்க முடியாது. இது இன வெறியல்ல; இனவெறிக்கு எதிர் நடவடிக்கை! அந்நிலை ஏற்படாமலிருப்பது பட்டம் தாணுப்பிள்ளையின் கையிலிருக்கிறது.

திருவிதாங்கூர்த் தமிழரின் அறப்போர் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருக்கிறது; அடியோடு கைவிடப்படவில்லை. மீண்டும் எந்த நேரத்திலும் முன்னிலும் வேகத்தோடு போர் மூண்டு விடலாம். அது திருவிதாங்கூர்த் தமிழ்ப் பகுதிகளில்தான் நடக்குமென்றும் சொல்ல முடியாது. திரு - கொச்சித் தமிழருக்கு நீதி வழங்கும்படி மத்திய அரசினரை வற்புறுத்தும் கிளர்ச்சியாகச் சென்னை ராஜ்யத்திலேயே நடைபெறலாம்.

திரு - கொச்சி அரசினருக்கு பிரதமர் நேரு ஏதோ ஆலோசனை கூறியுள்ளாராம். அவர் கூறியுள்ள ஆலோசனை என்னவென்று தெரியவில்லை. என்னவாயிருப்பினும், திரு - கொச்சி தமிழ் பகுதிகளைத் தமிழகத்தோடு சேர்க்க வேண்டும் என்ற கோரிக்கைக்குக் குறைவான எதையும் தமிழர் ஏற்பதற்கில்லை.

2 comments:

 1. மேலே விவரிக்கப்பட்ட துப்பாக்கிச்சூட்டுக்கு எதிர்ப்புத்தெரிவித்து நடந்த மாணவர் ஊர்வலத்தில் கலந்துகொண்ட நானும் ஒரு இரவு கோட்டாறு போலீஸ் நிலையத்தில் சிறை வைக்கப்பட்டிருந்தேன்.

  பட்டம் தாணுபிள்ளை ஆட்சியில் போலீசாருக்கு ‘கண்டால் அறியுந்நவர் லிஸ்ட்’அதிகாரம் இருந்தது. அதாவது ஒருவரை பார்த்தாலே அவர் குற்றவாளியா இல்லையா என்பதை போலீசே முடிவு பண்ணி யாரையும் விசாரணையில்லாமல் கைது செய்யும் ஹிட்லர் அதிகாரம் அவர்களுக்கிருந்தது.

  அப்போது அடிக்கடி நாகர்கோவில் வரும் ம.பொ.சி., சின்ன அண்ணாமலை, ந. சஞ்சீவி, விநாயகம் போன்றவர்கள் பேச்சுக்கு நான் அடிமை!

  பாரதி மணி

  ReplyDelete
 2. parathi mani ayya, ithu pattri neengalum oru pathivu idalame? uthavi ethuvm thevai endral sollavum.(tamil typing / formatting)
  Mai

  ReplyDelete

Note: Only a member of this blog may post a comment.